மதரஸாக்களில் விவாகரத்து பாடம் நடத்த இஸ்லாமிய அமைப்பு முடிவு

getty images படத்தின் காப்புரிமை Getty Images

முஸ்லிம் சிறுவர்களுக்கு விவாகரத்துக்கான சரியான வழிமுறைகள் பற்றி பாடம் நடத்த முடிவு செய்துள்ளதாக "தர்கா-இ-அலா ஹஸ்ரத்" என்ற இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின்கீழ் நாட்டின் பல்வேறு இடங்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மதரஸாக்கள் அல்லது இஸ்லாமிய பயிற்றுவிப்பு மையங்கள் உள்ளன.

முஸ்லிம் மதத்தில் ஒரு பிரிவினரால் மூன்று முறை "தலாக்" எனக் கூறி மனைவியை கணவன் விவாக ரத்து செய்த வழக்கத்தை "சட்டவிரோதமான செயல்" என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அண்மையில் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பைத்தொடர்ந்து தர்கா இ அலா ஹஸ்ரத் அமைப்பு, முஸ்லிம் மத சிறுவர்களுக்கு இளம் பருவத்திலேயே விவாகரத்துக்கான சரியான வழிமுறையை பயிற்றுவிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து பிபிசி செய்தியாளரிடம் அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி மெளலவானா ஷாபுதீன் ரஸ்வி கூறுகையில், "மதஸாக்களுடன் தொடர்புடைய போதகர்களின் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றி விவாதித்தோம். முஸ்லிம் மாணவர்களிடமும் வெள்ளிக்கிழமை தொழுகைகளில் பங்கேற்கும் முஸ்லிம்களின் மூலமாகவும் விவாகரத்துக்கான சரியான வழிமுறை பற்றி விளக்க தீர்மானித்துள்ளோம்" என்றார்.

விவாகரத்து தொடர்புடைய தனி பாடத்தையும் மதரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கவுள்ளதாகவும் அந்த நிர்வாகி கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஏற்கனவே குர்ஆன் மற்றும் இஸ்லாமிய மத சட்டத்தில் விவாகரத்து பற்றிய விவரம் இடம்பெற்றிருந்தாலும் விவாகரத்து பற்றிய விரிவான தெளிவுரை அவற்றில் இடம்பெற்றிருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

உடனடி விவாகரத்துக்கான வழிமுறை இஸ்லாமில் இல்லை என்றும் இஸ்லாமிய சட்டம் அதை ஆதரிக்கவில்லை என்றும் இஸ்லாமியர்களிடையே போதிக்கப்படும் என்றும் ரிஸ்வி கூறினார்.

பாட வகுப்பில் கலந்து கொள்ளும் முஸ்லிம் சிறுவர்கள், அதன் விவரத்தை தங்களின் குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அடுத்த கல்வியாண்டில் தொடங்கும் புதிய வகுப்பில் விவாகரத்து பற்றிய கூடுதல் தகவல்கள் இடம்பெறும் என்றும் ரிஸ்வி தெரிவித்தார்.

"விவாகரத்து பற்றிய புதிய பாடம் சேர்க்கப்பட்ட பிறகு அதன் விவரம் மற்ற மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்வி அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். அதை தங்களின் கீழ் உள்ள அமைப்புகள் மூலம் பரப்புவது பற்றி அவை முடிவெடுத்துக் கொள்ளும்" என்றும் ரிஸ்வி கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்