சாமியார் ராம் ரஹீமை கடவுளாக பார்க்கும் குடும்பம்

  • 30 ஆகஸ்ட் 2017

தேரா சச்சா செளதா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மீதான பாலியல் வல்லுறவு குற்றம் உறுதி செய்யப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், பல இடங்களில் வன்முறை பரவியது. ரஹீமுக்கு ஆறு கோடி பக்தர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Image caption சோனு யாதவ் மற்றும் அவரது தாய் சரோஜ் இன்சான்

15 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராம் ரஹீமுக்கு, தற்போது 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்ற காலத்திலும் சாமியார் செல்வாக்குடன் இருந்தார், பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களால் கடவுளாக வணங்கப்பட்டார்.

அவர்களில் யாரையாவது பார்த்து, தற்போது அவர்களது மனநிலையை அறிந்துக்கொள்ள முயற்சி செய்தோம். பாபாவின் பக்தர்களின் ஒருவர் இளைஞர் சோனு யாதவ்.

சோனுவின் குடும்பம் தேரா அமைப்புடன் இணைந்துள்ளது. தேரா சச்சாவில் கல்வி பயின்ற சோனு ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்.

ராம் ரஹீமுக்கு சோனுவின் வாழ்க்கையில் என்ன முக்கியத்துவம் என்று கேட்டோம். "பாபா ராம் ரஹீம் எங்களுக்கு சிறப்பான கல்வி வழங்கினார். சமூகத்தில் நேர்மையுடன் மனிதாபிமானத்துடன் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தார். பால்ய பருவத்திலேயே அவரை குருவாக ஏற்றுக்கொண்டேன்" எனபதே சோனுவின் பதில்.

Image caption வீட்டின் ஒவ்வொரு அறையிலும் பாபாவின் புகைப்படம்

'பெற்றோரை விட சிறந்தவர் பாபா'

சோனு மேலும் கூறுகிறார், "பாபாஜி எங்களுக்கு சிறந்த கல்வியோடு, நற்பண்புகளையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இவையனைத்தும் ஒரு தந்தை, மகனுக்காக செய்வது. அவர் எங்களை கவனத்துடன் பராமரித்தார்."

சோனு பேசிக் கொண்டிருக்கும்போதே இடைமறிக்கும் அவர் தாய் சரோஜ் சொல்கிறார், "பாபாஜி பெற்றோரை போன்றவர். பிறருக்கு சேவை செய்வதையும், நல்ல குணத்தையும் கற்றுக் கொடுத்தார்."

"26 ஆண்டுகளாக நான் பாபாவுடன் இணைந்திருக்கிறேன். எங்கள் குழந்தைகளை படிக்கவைத்தார், துன்பம் நேரிட்டால் அதை தீர்த்து வைப்பதும் அவர்தான். எங்களை பெற்றவர்களுக்கும் மேலானவர் பாபா."

பெண்களை மதிக்க கற்றுக்கொடுத்தார்

சரோஜ் சொல்கிறார், "பாபாவின் தேரா அமைப்பே எங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது."

"மது அருந்தக்கூடாது, பிற பெண்களை மதிக்கவேண்டும், பெரியவர்களை மதித்து மரியாதை கொடுக்கவேண்டும் என்ற மூன்று குரு மந்திரங்களை உபதேசம் செய்திருக்கிறார் பாபாஜி. தேரா சச்சா அமைப்பு மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறது."

Image caption பாபா பற்றிய செய்திகளை வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது கோபப்டுகின்றனர் சோனு குடும்பத்தினர்

கைம்பெண்களுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கும் திருமணம் செய்துவைத்தார் பாபா

ராம் ரஹீமின் சமூக சேவைகளை பற்றி சிலாகித்து பேசும் சோனு, "கைம்பெண்களையும் பாலியல் தொழிலாளர்களையும் தங்கள் மகள்களாக கருதி திருமணம் செய்துவைப்பார் பாபா. அது போன்றவர்களை திருமணம் செய்துக் கொள்ளவும் அதிக எண்ணிக்கையிலான சீடர்கள் முன்வருவார்கள்."

"தெருக்களில் அனாதைகளாக விடப்படும் பெண் குழந்தைகளுக்காக ஆசிரம் ஒன்றை பாபா தொடங்கினார். அங்கு தங்கியிருக்கும் பெண்களுக்கு சிறப்பான விளையாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. அந்த வீராங்கனைகள் சர்வதேச விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்."

"ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பது, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, பசியில் இருப்பவர்களுக்கு உணவளிப்பது, ஏழை பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பது என பாபா பல்வேறு தரப்பினருக்கும் உதவி செய்பவர் பாபா. அவரை கடவுளாக பார்ப்பதற்கு வேறு என்ன காரணம் வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார் சரோஜ்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாபாவுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சோனு "கண்டிப்பாக, பாபாவுக்கு தெய்வீக சக்தி இருக்கிறது. அவர் எங்களுக்கு வழங்கியிருக்கும் குரு மந்திரங்களை சொல்வதால் எங்களுக்கு ஆத்மசக்தியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. இது எந்தவித அற்புதத்திற்கும் குறைவானதல்ல" என்கிறார்.

பாபா திரைப்படங்களில் நடிக்க காரணம் என்ன?

ராம் ரஹீம் சாமியார் என்னும்போது, திரைப்படங்களை ஏன் தயாரித்தார், அதில் ஏன் நடித்தார் என்ற கேள்விக்கு சோனுவின் பதில் இது, "சிறுவர்களும், இளைஞர்களும் திரைப்படங்களை பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். எனவே, திரைப்படம் மூலம் அவர்களுக்கு நல்ல கருத்துகளை சொல்வதற்காக குருஜி திரைப்படம் தயாரித்தார், நடித்தார்."

"பாபாவின் திரைப்படங்கள், ஆபாசத்தை தூர ஒதுக்கிவிட்டு, சிறந்த கல்வி வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது."

ராம் ரஹீமுக்கு 20 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டது வருத்தம் தருவதாக சொல்லும் சோனு, "எங்கள் குருவின்மேல் பூரண நம்பிக்கை இருக்கிறது. அவர் சதிவலையில் சிக்க வைக்கப்பட்டார். செய்தி தொலைகாட்சிகளில் சொல்வது எல்லாம் பொய், உண்மைக்கு புறம்பானவை, இவர்கள் உலகில் எதிர்மறை கருத்துகளை பரப்புகின்றனர்" என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாபா காட்டிய வழியில் நடப்போம்

"பாபாவை பின்பற்றும் ஆறு கோடி பக்தர்கள் இருக்கிறோம். ஆறு கோடி மக்களின் நம்பிக்கை தவறானதாக இருக்கமுடியாது. ஒரு மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் இவ்வளவு பெரிய தீர்ப்பு வழங்கியிருப்பது தவறு."

"தன் மீதான குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாக்கி, குற்றமற்றவராக கூடிய விரைவிலேயே பாபா வெளியே வருவார், அரசியல் கட்சிகளின் சதி வெளிப்படும், எங்கள் நம்பிக்கை என்றும் வீணாகாது" என்று உறுதியாக கூறுகிறார் சோனு.

"பாபா சிறையில் இருந்தாலும் நாங்கள் தேரா சச்சாவுக்கு செல்வோம். நாங்கள் யாரும் பாபாவை விட்டு விலகமாட்டோம். பாபாவுடனான எங்கள் பக்தியும் அன்பும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாதது, எங்கள் குரு காட்டிய பாதையை பின்பற்றி நடப்போம்" என்று உறுதியாக சொல்கிறார் பாபாவின் நீண்ட நாள் பக்தை சரோஜ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்