குழந்தை திருமணத்தை ஆதரிப்பதாக கருதப்பட்ட தொலைக்காட்சித் தொடர் நிறுத்தம்

படத்தின் காப்புரிமை SONY TV

ஒன்பது வயது சிறுவன், 18 வயது பெண் ஒருவர் மீது காதல்கொள்கிறான் என்ற வினோத கதைக்களம் கொண்ட தொலைக்காட்சி தொடர் ஒன்று, குழந்தை திருமணத்தை ஆதரிப்பது போன்றுள்ளது என்று எழுந்த விமர்சனத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

`பெஹ்ரிதார் பியா கி` (கணவனின் பாதுகாவலர்) என்ற அந்த சர்சைக்குரிய தொடரை நிறுத்துவதாக அந்த தொடரை ஒளிபரப்பிய சோனி எண்டர்டயின்மெண்ட் சேனல், செய்வாய்க்கிழமையன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த தொடர், ஏன் நிறுத்தப்படுகிறது என்று சேனல் தரப்பிலிருந்து விளக்கம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட அந்தத் தொடர், "வழக்கத்திற்கு மாறான" ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டதால் தொடக்கத்திலிருந்து பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இந்த தொடரை நிறுத்த கோரி `ஜெய் ஹோ` என்ற மும்பையைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனம் ஒன்று அதிகாரிகளிடம் மனு கொடுத்ததையடுத்து பிரச்சனை தொடங்கியது. இந்தத் தொடர் "அநாகரீகமாகவும், குழந்தைகளுக்கு ஏற்புடையதாக அல்லாமல் உள்ளதாகவும்" எனவே அதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என அந்நிறுவனம் கோரிக்கை விடுத்தது.

இந்தியாவில் குழந்தை திருமணம் என்பது இன்றளவும் பரவலாக இருப்பதால், இந்தத் தொடர் குறித்து சமூக ஊடகங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்த தொடரில், அரச பரம்பரையைச் சேர்ந்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இளவரசன் `ரதன் குன்வர். 'தியா' என்ற பெண்ணை முதல்முறையாக கண்டதும் காதல் கொள்கிறான் இச் சிறுவன்.

பிறகு அந்த பெண்ணை தொடர்ந்து சென்று அவரை புகைப்படம் எடுக்கிறான். பிறகு கரப்பான் பூச்சியிடமிருந்து அப்பெண்ணை காப்பாற்றுகிறான்.

பின் அந்த பெண் அவரை முத்தமிடுகிறாள், அவன் திருமணம் குறித்து கேட்டதும் சம்மதம் தெரிவிக்கிறார்.

மேலும் எதிர்பாரா விதமாக அந்தச் சிறுவன் தவறி விழும் போது அந்த பெண் அவனை தாங்கி பிடித்துக் கொண்டு, "உன்னை எந்த ஆபத்தும் நெருங்க விடமாட்டேன்" என்று அந்த பெண் தெரிவிக்கிறார்.

தனது மகனுக்கு உறவினர்களால் ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் சிறுவனின் பெற்றோருக்கு இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அந்த பெற்றோரின் பயத்திற்கு ஏற்றவாறு அவர்களின் அரண்மனை சூழ்ச்சி மிகுந்ததாக உள்ளது.

தீயவர்கள் இளவரசனின் தாயைக் கொன்றுவிடுகின்றனர்; மேலும் இளவரசனின் தந்தை கடுமையாகக் காயமடைகிறார்.

இளவரசரின் தந்தை மரணப்படுக்கையில் தனது மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் வாக்குறுதி பெற்றுக் கொள்கிறார்.

"முதல் சில அத்தியாங்கள் குறித்து பலதரப்பட்ட கருத்துகள் இருந்தன. விமர்சகர்கள் முதலில் அந்தச் சிறுவன் தவறாக நடந்து கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் சிலர் அந்த 18 வயது பெண் சுயமுன்னேற்றம் அடைந்தவராகவும், தீர்க்கமானவராக இருப்பதாகவும் பாராட்டினர்." என இந்த தொடரின் 15 அத்தியாங்களையும் பார்த்த, தி குவிண்டின் மூத்த பத்திரிக்கையாளர் மேகா மத்தூர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Sony tv

இந்தியாவில் அனைவரும் ஒரு நாளைக்கு திருமணம் செய்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். எனவே சிறுவயது பெண்களும், சிறுவர்களும் தாங்கள் பெரியதாக வளர்ந்தவுடன் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் தெரிவிப்பது ஒன்றும் புதியதில்லை.

"ஆனால் ஐந்தாம் அத்தியாத்தில், அந்த 9 வயதுச் சிறுவன் திடிரென வளர்ந்தவர்களை போல் நடந்து கொள்வான் எனவே அங்கு கதை மாறிவிட்டது" என்று தெரிவிக்கிறார் மேகா மத்தூர்.

சிறுவன் ஒருவன், தன்னைவிட வயதில் இரண்டு மடங்கு அதிகமான பெண்ணை பின் தொடர்வது, திருமண உறவில் இருப்பது குழந்தைகளை அநாகரீகமாகவும், மோசமாகவும் சித்தரிப்பது போன்று உள்ளதாக ஜெய் ஹோ அமைப்பினர் இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த நிகழ்ச்சிக்கு எதிராக, ஒளிபரப்பு உள்ளடக்கப் புகார் கவுன்சிலில் புகார் தெரிவித்து நடவடிக்கைக்கு வலியுறுத்தவேண்டும் என ஸ்மிரிதியை வலியுறுத்தி change.org என்ற இணைய தளத்தில் பதியப்பட்ட மனுவில் 1 லட்சம் பேர் ஒப்பம் அளித்துள்ளனர்.

அதிக பார்வையாளர்களைப் பெறும் நேரமாக கருதப்படும் 8.30 மணியிலிருந்து 10.30 மணிக்கு, அந்த தொடரை மாற்றும்படி இக் கவுன்சில் ஆணையிட்டது.

மேலும் அந்த நிகழ்ச்சியில் "நாங்கள் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கவில்லை" என்ற வாசகம் வெளியாகத் தொடங்கியது.

மேலும் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஒரு சில வாரங்களில் அந்த இளவரசருக்கு 21 வயதாகும்படி கதை அமையவுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விமர்சகர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

டிஸ்கிளைமர் எனப்படும் பொறுப்புத் துறப்பை யாரும் பார்ப்பதில்லை என புகார் தெரிவித்த ஜெய் ஹோ நிறுவனத்தின் தலைவர் அஃப்ரோஸ் மாலிக் பிபிசியிடம் தெரிவித்தார்.

தொடரில் சிறுவனும் அவன் காதலிக்கும் பெண்ணும் தேனிலவு பற்றி பேசுகின்றனர். திருமணத் துய்ப்பு குறித்தும் உரையாடல் வருகிறது. குழந்தையை அவ்வாறு சித்தரிப்பது சரியான விஷயமன்று எனவும் அவர் தெரிவித்தார்.

கதையை மாற்றவில்லை என்றால் தங்களின் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க நேரிடும் என அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இனி அது தேவையில்லை.

பிற செய்திகள்:

ஐவரை பலி வாங்கிய மும்பை வெள்ளம்

எடப்பாடி அணியில் எனது ஆதரவு "ஸ்லீப்பர் செல்கள்" உள்ளனர்: டி.டி.வி. தினகரன்

இலங்கை: லெபனான் நாட்டவரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு

'இது ஆரம்பம்தான்': ஜப்பான் மீது பறந்த ஏவுகணை பற்றி வட கொரியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்