எடப்பாடி அரசு பலத்தை நிரூபிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

19 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொண்டு கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், அரசு தமது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்கவேண்டும் என்று கோரும்படி கவர்னருக்கு உத்தரவிடவேண்டும் என்று திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தன.

Image caption குடியரசுத் தலைவரை சந்தித்த எதிர்க்கட்சிக் குழவினர்.

அதிமுகவில் உள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவை விலக்கிக்கொண்ட பிறகு, எடப்பாடி பழனிச்சாமி அரசு சட்டமன்றத்தில் தமது பலத்தை நிரூபிக்கும்படி கேட்டுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கவர்னரை நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தினர்.

ஆனால், முதல்வர் பலத்தை நிரூபிக்கவேண்டும் என்று கவர்னர் வித்தியாசாகர் ராவ் உத்தரவிடவில்லை.

குடியரசுத் தலைவரை

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, திமுக எம்.பி. கனிமொழி, சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாரம் எச்சூரி, சி.பி.ஐ. தேசிய செயலாளர் டி.ராஜா, உள்ளிட்டோர் அடங்கிய குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை வியாழக்கிழமை டெல்லியில் சந்தித்து ஒரு மனுவை அளித்தது.

"19 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கவர்னரை சந்தித்துக் கடிதம் கொடுத்த பிறகு அரசு சட்டமன்றத்தில் தமது பெரும்பான்மையை இழந்துவிட்டது. அதன் பிறகு மேலும் சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கான தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றனர்.

234 உறுப்பினர்களை உடைய அவையில் அரசுக்கு ஆதரவாக அவைத் தலைவரையும் சேர்த்து தற்போது 113 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. அவையில் திமுக-வுக்கு 89 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏக்களும், முஸ்லீக்குக்கு ஒரு எம்.எல்.ஏ.வும், அதிமுக அதிருப்தி அணியில் 22 பேரும் உள்ளனர்.

துணை முதல்வருக்குப் பதவிப் பிரமாணம் செய்யும்போது அரசுக்கு சட்டமன்றத்தில் போதிய பலம் இருக்கிறதா என்று கவர்னர் உறுதி செய்திருக்கவேண்டும்.

இந்தச் சூழ்நிலையை கவர்னரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் கவர்னருக்கு ஆகஸ்டு 28 அன்று ஒரு கடிதம் எழுதினார். ஆனாலும் கவர்னர் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை," என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் உருவாக்கப்பட்ட பல அரசியலமைப்பு சட்ட மரபுகள் கவர்னரால் மீறப்பட்டுள்ளன. அரசு தமது ஆதரவை இழந்துவிட்டதாக சந்தேகம் எழும்போது அவையில் பலத்தை நிரூபிக்கும்படி அரசைக் கோரவேண்டும் என்பது நிறுவப்பட்ட மரபு.

எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் இதையே வலியுறுத்துகிறது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஒரு அரசு ஆதரவை இழந்துவிட்டதா இல்லையா என்பதை கவர்னரோ, ஜனாதிபதியோகூட தனிப்பட்ட முறையில், தமது அகவுணர்வால் முடிவெடுக்க முடியாது என்பதை அத்தீர்ப்பு வலியுறுத்துகிறது.

கவர்னர் அமைதி காப்பது, பாராளுமன்ற முறையை பலவீனப்படுத்துவதோடு, எம்.எல்.ஏக்கள் குதிரை பேரம் நடத்தப்படுவதையும் ஊக்குவிக்கிறது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி பி.பி.சி. தமிழ் சேவையிடம் பேசிய சி.பி.ஐ. தேசிய செயலாளர் ராஜா, "மனுவைப் பெற்றுக்கொண்டு, கோரிக்கையை செவிமடுத்த குடியரசுத் தலைவர், எந்த மாநிலத்திலும் அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடிப்பது நல்லதல்ல என்று குறிப்பிட்டார்,"

இந்த விஷயத்தை தாம் கவனிப்பதாகவும், தமக்கு சற்று கால அவகாசம் வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் கூறியதாக ராஜா தெரிவித்தார்.

பிற செய்திகள்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஐ.எஸ். அமைப்பிடம் செக்ஸ் அடிமைகளாக இருந்த மீண்ட யாஸிடி பெண்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்