தமிழக அரசின் நிதியுதவியை ஏற்க அனிதாவின் குடும்பம் மறுப்பு

மத்திய அரசு கொண்டுவந்த மருத்துவப் படிப்பிற்கான கட்டாய நீட் நுழைவுத் தேர்வு காரணமாக தற்கொலைசெய்து கொண்டதாக கூறப்படும் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ.7 லட்சம் நிதியுதவியை அனிதாவின் குடும்பத்தினர் வாங்க மறுத்துள்ளனர்.

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும், நீட் தேர்வு மதிப்பெண்ணால் மருத்துவம் படிப்பதற்கு இந்த ஆண்டு இடம் கிடைக்காது என்ற சூழலில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

அனிதாவின் மரணத்திற்கு இழப்பீடாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு அரசு வேலை தரப்படும் என்றும், குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

ஆனால் அனிதாவின் குடும்பத்தினர் நிதியுதவியை ஏற்கமறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அனிதாவின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் லட்சுமி பிரியா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"அனிதாவின் குடும்பத்திற்கு நிதி வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அனிதாவின் குடும்பத்துடன் பேசிவருகிறோம். தற்போது நிதியுதவி்யை வாங்க மறுத்துள்ளனர். இருப்பினும் சில தினங்களில் அதை பெற்று கொள்வார்கள் என்று எண்ணுகிறோம்,'' என்றார் ஆட்சியர் லட்சுமி பிரியா.

இதற்கிடையில் அனிதாவின் மரணத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவ அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில்மாணவ அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் பிரதமர் மோதியின் உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பிரதமர் மோதி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகி்யோர்தான் அனிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்றும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரினர்.

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரி, அனிதா சட்டம் என்ற சட்டம் இயற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைக்கப்படுகிறது.

மாநிலத்தின் பல்வேறு பகுதியில் திமுகவினர் கண்ணீர் அஞ்சலி ஊர்வலம் நடத்தியுள்ளனர். அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கோரி திங்களன்று (செப், 4)அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் கூட்டவுள்ளார்.

”நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதற்கு அதிமுகவின் பினாமி முதல்வர்கள் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்,'' என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்