மனைவியால் ஐ.எஸ். அமைப்பில் சேர்க்கப்பட்ட 2 மகள்களை மீட்ட தந்தையின் `திரில்' அனுபவம்

அந்தச் செய்தியைக் கேட்டதும், தன் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த ஆர்தர் மகோமாதேவுக்கு உலகமே இடிந்து விழுவதுபோல இருந்தது. அவரைப் பார்க்க வந்த அவரது மனைவியின் மாமா மற்றும் சகோதரர், அவர் மனைவி அவர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டதாகக் கூறினார்கள்.

Image caption அந்த இரண்டு பெண் குழந்தைகளும் ரஷ்ய தூதரம் வழங்கிய பயண ஆவணங்கள் மூலம் துருக்கியில் இருந்து நாடு திரும்பினர்.

ஆர்தரிடம் சொல்லாமல், அவரது மனைவி தன் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு துருக்கி சென்றுவிட்டார். மூத்த மகளான ஃபாத்திமாவுக்கு 10 வயது. இளையவள் மைசரத்துக்கு மூன்றே வயது. ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காகத் தன் குழந்தைகளுடன், துருக்கியில் இருந்து சிரியாவுக்கு சென்றுவிட்டார் அப்பெண்.

"என் மனைவியின் மாமாவும் சகோதரனும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால், இது கண்ணீரில்தான் முடியும் என்று நான் கூறினேன். என்னுடைய அனுமதி இல்லாமல் என் குழந்தைகளை கூட்டிச்செல்ல அவளுக்கு என்ன உரிமை உள்ளது," என்று ஆர்தர் வினவுகிறார்.

ரஷ்ய கூட்டமைப்பின் ஓர் அங்கமான தாகெஸ்தான் குடியரசில் வசிக்கும் அவரது மனைவி கடும்போக்குவாத இஸ்லாமைப் பின்பற்றியதுடன், சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியை நம்பிக்கைக்குரிய நிலமாகப் பார்த்தார்.

அந்த இடதைத் தங்களின் கனவு பூமியாக அவர் மட்டும் பார்க்கவில்லை. உள்ளூர் அதிகாரிகளின் கணக்குப்படி, ஐ.எஸ் அமைப்பில் இனைந்து போரிடுவதற்காக தாகெஸ்தானில் இருந்து சுமார் 1,200 பேர் சென்றுள்ளனர். ஐ.எஸ் அமைப்புக்கு அது ஒரு முக்கியமான ஆள் சேர்க்கும் இடம்.

ஆர்தர் தன் அன்பு மகள்களை மீட்க உறுதியேற்கிறார்.

ஐ.எஸ் பிரதேசத்துக்கு ஒரு பயணம்

போதிய பணம் இல்லாததால், கடன் வாங்கி துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகருக்குப் பறந்தார் ஆர்தர். அங்கிருந்து அவர் சிரியாவுக்கு ரகசிய பயணத்தை மேற்கொள்ள, ஏற்பாடு செய்யக் காத்திருந்தார் ஒரு பயண ஏற்பாட்டாளர்.

"இஸ்தான்புல் நகரில் இருந்து, தெற்கு துருக்கியில் இருக்கும் காசியன்டெப் பகுதிக்கு நாங்கள் பயணமானோம். என்னுடன் ஒரு செசென்யக் குடும்பமும், மற்ற மூவரும் பயணம் செய்தார்கள். துருக்கி-சிரியா எல்லையை அடைவதற்குள் எங்கள் வாகனம் ஐந்து முறை மாற்றப்பட்டது. இவற்றை ஏற்பாடு செய்ய ஒரு பெரும் குழுவே இயங்கி வருகிறது," என்று தன் பயண அனுபவத்தைப் பகிர்கிறார் அந்தத் தந்தை.

"எல்லைப் பாதுகாப்புப் படையினர் உங்களை நோக்கி சுடுவதற்கு முன் உங்கள் மூட்டை முடிச்சுகளைச் சுமந்துகொண்டு, உங்களால் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக நீங்கள் 200 மீட்டர் தூரம் ஓட வேண்டும். என் இதயம் துடிக்கும் ஓசையை அப்போது என்னால் உணர முடிந்தது," என்கிறார் ஆர்தர்.

"ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியை அடைந்ததும், எங்கள் வாகனத்தை எதிர்பார்த்து ஆயுததாரிகள் காத்திருந்தனர். அவர்கள் எங்களை ஜராபிளஸ் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்," என்று அங்கு சென்றடைந்த சம்பவத்தை விவரிக்கிறார் அவர்.

தற்போது தன் குடும்பம் எங்கு வசிக்கிறது என்பதை அவர் கண்டுபிடித்துவிட்டார். அவரது மனைவியின் சகோதரியும் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு சென்றிருந்தார். அவரது கணவர் அனுப்பிய குறுஞ்செய்தி மூலம் இடத்தைக் கண்டுபிடிக்கிறார் ஆர்தர்.

Image caption தீவிரவாதத்துக்கு எதிரான வாசகங்களுடன் தாகெஸ்தானில் வைக்கப்பட்டிருக்கும் பதாகை.

"நான் ஒரு நல்ல மனிதன். ஆனால், நீங்கள் நல்லவிதமாக நடத்தப்படவில்லை. அதனால்தான் நான் உங்களைத் தொடர்புகொள்கிறேன்," என்று அவர் செய்தி அனுப்பி இருந்தார்.

ஆர்தரின் மனைவியும் குழந்தைகளும் தப்கா பகுதியில் இருப்பதைக் கேள்விப்பட்டு அவர் அங்கு செல்கிறார்.

"என்னைப் பார்த்ததும் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஃபாத்திமா ஒரு கருப்பு நிற ஹிஜாப் அணிந்திருந்தாள். மைசரத் இங்கு இருந்தபோது அணிந்த ஆடைகள் போன்றே அணிதிருந்தாள்," என்று கூறும் அவர், "நான் சென்றபோது என் மனைவி அங்கு இல்லை. நான் வந்திருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு ஓடி வந்தாள். தான் சிக்கலில் இருப்பதை அவள் உணர்ந்துகொண்டாள்," என்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துருக்கி எல்லையில் இருந்து சிரியாவில் நுழைவது ஆபத்தான செயல்.

ஒரு ஷரியா நீதிமன்றம் ஆர்தருக்கு குழந்தைகளை வளர்க்கும் உரிமையைக் கொடுத்தது. ஆனால், ஐ.எஸ் பகுதியில் இருந்து அவர்கள் வெளியேறத் தடை விதித்தது. வீடு திரும்ப வேண்டுமானால், அவர்கள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும்.

ஒரு வாகனத்தில் உதவி கேட்டு, ஓர் இரவில் தன் குழந்தைகளுடன் அவர் துருக்கி எல்லையை அடைந்தார்.

தலைக்கு மேலே தோட்டாக்கள்

"துருக்கி எல்லையில் அருகில் இருந்த ஒரு ரயில் பாதையில் 70 மீட்டர் தூரம் நாங்கள் தவழ்ந்து வந்தோம். என் தோள்களில் இளைய மகளைத் தூக்கிக்கொண்டு, மூத்த மகளை ஓடச் சொன்னேன்," என்றார் அவர்.

தப்பித்து வரும்போது முள் கம்பியில் சிக்கி அவரது கால்ச்சட்டையும், ஃபாத்திமாவின் ஆடையும் கிழிந்தன. மைசரத் அழத் தொடங்கினாள்.

"ரத்தம் சொட்டச்சொட்ட நான் எல்லையைக் கடந்துவிட்டேன். மூன்று முறை கீழே விழுந்தாலும், எப்படி வலிமையைப் பெற்றேன் என்று தெரியவில்லை," என்று ஆர்தர் குழந்தைகளுடன் எல்லையைக் கடந்ததை விவரிக்கிறார்.

"வெறும் 50 மீட்டர் தூரத்தில் இருந்த துருக்கி எல்லைக் காவல் படையினர் எங்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். ஒரு பாசனக் கால்வாயினுள் குதித்து 20 நிமிடங்கள் நாங்கள் பதுங்கி இருந்தோம். எங்கள் தலைக்கு மேல் துப்பாக்கித் தோட்டாக்கள் பறந்தன," என்று தாங்கள் உயிர் பிழைத்ததை விவரிக்கிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிரியா விமான தளத்தை குறிவைத்த அமெரிக்க ஏவுகணைகள்

இஸ்தான்புல் சென்ற அவர்கள், ரஷ்ய தூதரகத்தின் உதவியால் வீடு திரும்பினர். ஆனால், அவரது மனைவி என்ன ஆனார் என்று அவருக்குத் தெரியவில்லை. "அவள்தான் அந்த வாழ்க்கையைத் தேர்வு செய்தாள். அத்துடன் அவள் வாழ வேண்டும்," என்கிறார்" அவர்.

'மசூதியை மூடுங்கள்'

அவர்கள் ஊரில் இருந்து ஐ.எஸ் அமைப்பில் இணையச் சென்றவர்கள் அவர்கள் முடிவை நினைத்து வருத்தப்படுவதாக ஆர்தரின் தாய் கூறுகிறார்.

Image caption ரஷ்யாவின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான தாகெஸ்தான் ஜிஹாதிகள் உருவாக ஏற்புடைய சூழலைக் கொண்டுள்ளது.

தாகெஸ்தான் ரஷ்யாவின் ஏழ்மை நிறைந்த பகுதிகளில் ஒன்று. அங்கு நிலவும் வேலைவாய்ப்பின்மையும், குறைந்த கூலியும் அங்கு கடும்போக்கு கொள்கைகள் நிலைபெற உதவுகின்றன.

தாகெஸ்தான் பகுதியைச் சேர்ந்த மாரட் அவர்களில் ஒருவர். அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இணையதளம் மூலம் மூளை சலவை செய்யப்பட்ட அவர் கருவுற்றிருந்த தன் மனைவியை விட்டுவிட்டு ஐ.எஸ் அமைப்பில் சேரச் சென்றார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஐ.எஸ். அமைப்பிடம் செக்ஸ் அடிமைகளாக இருந்த மீண்ட யாஸிடி பெண்கள்.

இணையம் மூலம் அவரைத் தொடர்பு கொண்ட அந்த நபர், சிரிய மக்கள் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்படுவதாக காணொளிகளை அனுப்பினார். ஐ.எஸ் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்த மனைவியிடம் அங்கு சென்று ஓரிரு மாதங்களில் திரும்பி வருவதாகக் கூறிச்சென்று நிரந்தரமாக இருந்ததற்கு அவர் வருத்தப்படுகிறார்.

"அங்கு புனிதப் போர் எதுவும் நிகழவில்லை. இஸ்லாமியர்கள்தான் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்," என்கிறார் மாரட்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தப்கா நகரின் கட்டுப்பாட்டை இழந்த ஐ.எஸ் அமைப்பினர் கிழக்கு நோக்கி ரக்கா நகரில் சண்டையிட்டு வருகின்றனர்.

ஷம்கல் நகரில் இருந்து ஐந்து அல்லது ஆறு நபர்கள் சிரியாவிற்கு பயணம் செய்ததும், உள்ளூர் மசூதியை தாகெஸ்தான் காவல் துறையினர் மூடிவிட்டனர். "இங்கு இளைஞர்கள் வரும்போது அவர்களை எங்களால் கண்காணிக்க முடியும். மசூதியை மூடிவிட்டால் அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள்," என்பதை எவ்வாறு அறிய முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் அம்மொசுதியில் தொழுகை நடத்திவந்த சம்சுதீன் மகோமதேவ்.

தாயுடன் சிரியா சென்று தந்தையால் அங்கிருந்து மீட்கப்பட்ட அனுபவம் குறித்து அந்தக் குழந்தைகள் எவ்வாறு உணர்கிறார்கள் என்று ஆர்தரிடம் கேட்டபோது, "எல்லோருக்கும் அம்மா இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இல்லை?," என்று மைசரத் ஒரு முறை தன்னிடம் கேட்டதாக ஆர்தர் சொல்கிறார்.

"அவர்கள் தங்கள் தாயுடன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பில் இருப்பது எனக்குத் தெரியும். அவளைத் தொடர்புகொள்ள வேண்டாம் என்று நான் அவர்களிடம் கூறியுள்ளேன். ஆனாலும் அவர்களைத் தடுக்க மாட்டேன்."

"எல்லாவற்றுக்கும் மேலாக அவள் அக்குழந்தைகளின் தாய். அவர்கள் நிச்சயம் அவளின் பிரிவை உணர்வார்கள்," என்று முடித்தார் ஆர்தர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :