காரைக்காலில் 'ப்ளூ வேல்' விளையாட்டை விளையாடிய இளைஞர் மீட்பு

காரைக்காலில் 'ப்ளூ வேல்' விளையாட்டை விளையாட இளைஞரை மீட்டுள்ளதாக புதுச்சேரி மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விளையாட்டு குறித்து குறுஞ்செய்திகளை அனுப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறையும் எச்சரித்துள்ளது.

Image caption கோப்புப் படம்

காரைக்காலைச் சேர்ந்த ஒரு இளைஞர் சென்னையில் பணியாற்றும்போது, வாட்ஸ்ஆப் மூலம் கிடைத்த சுட்டியை பின்பற்றி ப்ளூவேல் விளையாட்டை விளையாடியதாக காவல்துறை கூறுகிறது. அந்த இளைஞர் தனது சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், செப்டம்பர் 3-ஆம் தேதியன்று அக்கரைப்பேட்டை சுடுகாட்டிற்குச் சென்று "செல்ஃபி" ஒன்றை எடுத்துள்ளார்.

இதைக் கவனித்த அவரது சகோதரர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறை அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து, அந்த விளையாட்டை அகற்றியதாக காவல்துறையின் செய்திக் குறிப்புக் கூறுகிறது.

"அடுத்தகட்டமாக அந்த இளைஞர் கையில் நீலத் திமிங்கலத்தின் படத்தை வரைய இருந்தார். அதற்கு முன்பாக அவரை மீட்டுள்ளோம்" என செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் வம்சீதர ரெட்டி கூறினார்.

இதற்கிடையில், தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நீலத் திமிங்கில சவால் விளையாட்டு தொடர்பான சுட்டிகளை யாருக்கும் அனுப்பக்கூடாது என்றும் இவ்விளையாட்டின் மூலம் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த விளையாட்டு குறித்து ஆதாரங்களற்ற தகவல்களை வைத்துக்கொண்டு பரபரப்பான குறுஞ்செய்திகளை அனுப்பினாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்