13 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான 13 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிறுமியின் உடல்நிலையை மகப்பேறு மருத்துவர் நிகில் தட்டர் தலைமையிலான குழு சோதனை செய்தது. பிறகு, சிறுமியின் கருவை கலைக்க மருத்துவர் குழு பரிந்துரை செய்தது.

இது தொடர்பான மருத்துவர்களின் அறிக்கையை இன்று பரிசீலித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் அடங்கிய அமர்வு, கருக்கலைப்புக்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டது.

முன்னதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி, பாலியல் வல்லுறவுக்கு ஆளான சிறுமியின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை, ஏற்கெனவே ஒரு வழக்கில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பாதிக்கப்பட்ட சிறுமியின் மனு மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு போன்றவை குறித்து நீதிபதிகளிடம் விவரித்தார்.

இந்தியாவில் 20 வாரங்களுக்குப் பிந்தைய கருவை கலைப்பது மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தின் 3(2)(பி) பிரிவின்படி சட்டவிரோதம் ஆகும்.

இதுகுறித்து சிறுமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்னேகா முகர்ஜி கூறுகையில், "பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை மும்பை சர் ஜே.ஜே. மருத்துவமனையில் சேர்த்து வெள்ளிக்கிழமை கருக்கலைப்பு செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கருக்கலைப்பு சட்டத்தின் சில அம்சங்களை செயல்படுத்துவதில் நடைமுறை பிரச்னைகள் எழுகின்றன. அதற்கு ஏற்ப உரிய சட்டத்திருத்தத்தை செய்ய மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்" என்றார்.

பட மூலாதாரம், iStock

மும்பை சார்கோப் பகுதியில் உள்ள தெருவோர வியாபாரியின் மகளான 13 வயது சிறுமியை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவரது தந்தையின் நண்பர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக கூறப்பட்டது.

23 வயதான அந்த நபர், பல முறை 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் 27 வார கரு வளர்வது உறுதிபடுத்தப்பட்டது. உடனடியாக அச்சிறுமியை காப்பகத்தில் அனுமதித்து அவரது கருவை கலைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்பு, சண்டீகரை சேர்ந்த பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட 10 வயது சிறுமியின் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

அதற்கு முன்னதாக, கடந்த மே மாதம் ஹரியானாவை சேர்ந்த பாலியல் வல்லுறவுக்கு ஆளான 10 வயது சிறுமியின் கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த இரு வெவ்வேறு வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

காணொளிக் குறிப்பு,

வனப்பகுதியில் குரங்குகளுடன் தனியாக வாழ்ந்த சிறுமி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :