கோவை: பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 6 பேர் பலி

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

Image caption சரிந்து விழுந்த சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை.

மருத்துவமனையில் மேலும் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால், இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை 6 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இடிந்து விழுந்த கட்டடம் 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சமீபத்தில் பெய்த கனமழை காரணாமாக வலுவிழந்த நிலையில் இருந்த அந்தப் பேருந்து நிலையத்தின் கான்கிரீட் மேற்கூரையின் சுமார் பத்து மீட்டர் நீளமுள்ள பகுதி வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் இடிந்து விழுந்ததில் அங்கு காத்திருந்த பயணிகள் மற்றும் ஒரு பேருந்து நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இடிபாடுகளுக்கு இடையே இன்னும் சிலர் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்களில் சிவக்குமார் என்னும் நடத்துனர் அவரது பேட்ஜ் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவர்களில் இன்னொருவர் 20 வயதான தரணி என்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மூவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் முன்பே இறந்து விட்டார்கள் என்றும் தற்போது சிகிச்சை பெற்றுவரும் 6 பேரில், இரண்டு பெண்கள் உள்பட மூவர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் ஆர்.சௌந்தரவேல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மீட்புப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்