நீட் போராட்டங்கள்: சட்டம் ஒழுங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

"நீட்" எனப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு தொடர்பாக எதிராக தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்களின்போது சட்டம் ஒழுங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் தேமுதிக பிரமுகருமான ஜி.எஸ். மணி தாக்கல் செய்த பொது நல மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது ஆஜரான ஜி.எஸ். மணி, "மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான, நீட் என அழைக்கப்படும் தேசிய நுழைவு மற்றும் திறனறியும் தேர்வு தேவையில்லை என வலியுறுத்தி சில எதிர்க்கட்சிகள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துகின்றன. வகுப்புகளை கல்லூரி மாணவர்கள் புறக்கணித்து விட்டு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது " என்று வாதிட்டார்.

மேலும், "நீட் தேர்வு விவகாரத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் அவர் நீதிபதிகளை கேட்டுக் கொண்டார்.

2007-ஆம் ஆண்டில் சேது சமுத்திர திட்ட விவகாரம் தொடர்பாக அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக போராட்டங்கள் நடத்தியபோது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில், அந்த போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை ஜி.எஸ். மணி தமது வாதத்தின்போது சுட்டிக்காட்டினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதைக்கேட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில், "நீட் விவகாரத்தில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையில் அதை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுமானால் அதை மாநில அரசு தடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

"நீட் தேர்வுக்குப் பிந்தைய போராட்டங்களால் மாநிலத்தில் எவ்வித "பந்த்" அல்லது செயல்பாடுகளால் இயல்பு வாழ்க்கைக்கும் சட்டம் ஒழுங்குக்கும் பாதிப்பு ஏற்படுமானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை மாநில தலைமைச் செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும்" என்றும் தலைமை நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
neet

மேலும், அமைதிவழி போராட்டங்கள் அல்லது விமர்சனங்கள் அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது போன்றவற்றுக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்று கூறியுள்ள தலைமை நீதிபதி, நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அமைதிவழியில் போராடவும் ஆர்ப்பாட்டமும் செய்ய அடிப்படை உள்ளது என்றும் உத்தரவில் தெளிவுபடுத்தினார்.

ஆனால், அந்த உரிமையைக் கொண்டு, வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கை பாதிக்கச் செய்வதை அனுமதிக்க முடியாது என்று உத்தரவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Twitter

முன்னதாக, அனிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாக மனுதாரர் ஜி.எஸ். மணி கோரிக்கை விடுத்தபோது, "அந்த விவகாரத்துக்குள் செல்ல நீதிமன்றம் விரும்பவில்லை" என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மாநில உள்துறைச் செயலாளர், மத்திய சட்டத்துறை செயலாளர் ஆகியோரை மனுதாரர் ஜி.எஸ். குறிப்பிட்டிருந்தார். இதில் மத்திய சட்டத்துறைச் செயலாளர் நீங்கலாக மற்ற இருவருக்கும் மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் வரும் 18-ஆம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு உதவ வேண்டும் என்றும் உத்தரவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்