அனிதா: எளிய வீட்டிலிருந்து புறப்பட்ட மாபெரும் கனவு

பள்ளி இறுதித் தேர்வில் 1176 மதிப்பெண்களைப் பெற்றும் நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனதால், தற்கொலைசெய்துகொண்ட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களும் கல்வியில் சாதிக்க முடியும் என்று காட்டியவர்.

Image caption தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியது அனிதாவின் மரணம்

தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் ஒன்றான அரியலூர் மாவட்டத்தில் உள்ளடங்கிய பகுதியில் அமைந்திருக்கிறது குழுமூர் கிராமம். சற்று பெரிய பஞ்சாயத்துதான் என்றாலும் சென்னையிலிருந்து இங்கு வந்தடைவதோ, இங்கிருந்து சென்னை செல்வதோ எளிதான பயணமல்ல. மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று.

இந்த குழுமூர் கிராமத்திற்குள் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் அமைந்திருக்கிறது அனிதாவின் வீடு. வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தும் மிகப் பெரிய பேனர் நின்றுகொண்டிருக்கிறது.

அதைத் தாண்டி உள்ளே நுழைந்தால், ஹேலோ ப்ளாக் கற்களால் கட்டப்பட்டு, மேற்பூச்சுக்கூட பூசப்படாமல், சரியான தளம்கூட இல்லாமல் காட்சியளிக்கிறது அனிதாவின் வீடு.

முன்னறையில் அனிதாவின் படத்திற்கு முன்பாக, அவர் குடியரசு தலைவருக்கு நீட் தேர்வுக்கு எதிராக அனிதா எழுதிய அஞ்சலட்டைம் அவருக்கு மிகவும் பிடித்த தேன் மிட்டாயும் வைக்கப்பட்டிருக்கின்றன.

Image caption குடியரசு தலைவருக்கு நீட் தேர்வுக்கு எதிராக அனிதா எழுதிய அஞ்சலட்டை

அனிதாவின் முடிவு, இனி யாரும் தேர்வுசெய்யக்கூடாத ஒரு பாதை. ஆனால், அவருடைய எளிய பின்னணியும் பள்ளியிறுதியில் அவர் எடுத்த மதிப்பெண்களும் எந்த ஒரு மாணவருக்கும் உத்வேகமூட்டக்கூடியவை.

குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் - ஆனந்தம் தம்பதிக்கு 5 குழந்தைகள் - மணிரத்னம், சதீஷ்குமார், பாண்டியன், அருண்குமார், கடைசியான அனிதா. இவர்களில் மணிரத்னம் எம்பிஏவும் சதீஷ்குமார் எம்.காமும் படித்தவர்கள். பாண்டியனும் அருண்குமாரும் பொறியியல் படித்துவருகின்றனர்.

மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள்

2000-ஆவது ஆண்டு மார்ச் மாதம் அனிதா பிறந்து சில ஆண்டுகளிலேயே அவரது தாய் ஆனந்தம் இறந்துவிட்டார்.

Image caption அனிதாவின் உறவினர்கள்

தந்தை சண்முகம் திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவார். தந்தை வழிப்பாட்டி பெரியம்மாளும் சகோதரன்களுமே அனிதாவை வளர்த்தனர்.

வெளியூருக்கு சென்று படித்த அனிதா

சிறுவயதிலிருந்தே யாரிடமும் பெரிதாக பழகாத அனிதா, குழுமூரிலேயே இருக்கும் புனித பிலோமினாள் ஆரம்பப் பள்ளியிலும் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார்.

"பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண்களைப் பெற்ற அனிதா குழுமூரைவிட்டு வெளியில் சென்று படித்தால் அவளுக்கு வெளியுலம் தெரியும் என்று நினைத்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய பள்ளிக்கூடமான ராஜ விக்னேஷ் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க நினைத்தோம்" என்கிறார் மணி ரத்னம்.

தந்தை சண்முகத்தைப் பொறுத்தவரை, தன் மகள் நன்றாகப் படிப்பாள்; அவளுக்கு வழிகாட்ட சகோதரன்கள் இருக்கிறார்கள் என்பதைத் தவிர பெரிதாக வேறு எதுவும் தெரியாது. பத்து நாட்களுக்கு ஒரு முறை பள்ளிக்கூடத்திற்குச் சென்று தன் மகளைப் பார்த்து, எதையாவது வாங்கிக்கொடுத்துவிட்டு வருவது என்றுதான் இருந்திருக்கிறார்.

12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்தபோது, அனிதாவின் மதிப்பெண்கள் 1176. பள்ளிக்கூடத்திலேயே ஆறாவது அதிக மதிப்பெண்.

பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடந்தால் அனிதாவுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இடம்கிடைத்துவிடக்கூடிய நிலைதான். ஆனால், இந்த ஆண்டு எந்த முறையில் சேர்க்கை என்பதில் குழப்பம் நீடித்ததால், ஒரு பெரிய போராட்டத்திற்கு அனிதாவும் அவரது சகோதரர்களும் தயாராகவே இருந்தனர்.

Image caption அனிதா படித்த ராஜ விக்னேஷ் மேல் நிலைப்பள்ளி

"அனிதா எம்பிபிஎஸ் படிக்க வேண்டுமென்று எல்லோருமே நினைத்தோம். அவளும் நினைத்தாள். ஆனால், அவளுக்கு அந்த படிப்பு கிடைக்கவில்லையென்றால் குடிமைப் பணித் தேர்வு எழுத வேண்டுமென்று கூறிவந்தேன்" என்கிறார் அவரது அண்ணன் மணிரத்னம்.

தொடர்புடைய செய்திகள்:

அனிதா நடத்திய போராட்டங்கள்

இதற்கிடையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனிதா, பாண்டிச்சேரி ஜிப்மர் தனியாக நடத்தும் நுழைவுத் தேர்வுக்கும் விண்ணப்பித்தார். நீட் தகுதித் தேர்வில் அவரால் 76 மதிப்பெண்களையே பெற முடிந்தது. ஜிப்மர் நடத்திய நுழைவுத் தேர்விலும் அவரால் தேர்ச்சிபெற முடியவில்லை.

"எம்.பி.பி.எஸ் கிடைக்காததால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் என்று நான் சொல்லிக்கொண்டேயிருந்தேன். அடுத்த ஆண்டு நீட் தேர்வை எழுதலாம் நிச்சயம் கிடைக்கும் என்று ஊக்கப்படுத்தினேன்'' என்று மணிரத்னம்கூ றினார்.

''இந்தத் தருணத்தில்தான் ஜூலை 12ஆம் தேதி அரியலூரில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டேன். அங்குதான் அனிதா எடுத்த மதிப்பெண்கள் குறித்தும் அவள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் அனைவருக்கும் தெரியவந்தது" என்கிறார் மணிரத்னம்.

Image caption அனிதாவின் எளிய வீடு

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரனுடன் சந்திப்பு

அங்குதான் தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அரியலூர் மாவட்டத் தி.மு.க. செயலாளருமான சிவசங்கரனையும் இருவரும் சந்தித்தனர்.

இதற்கிடையில், கோயம்புத்தூரில் உள்ள விவசாயக் கல்லூரியில் இடம் கிடைத்து அங்கு சேர்ந்த அனிதா, கால்நடை மருத்துவக் கல்லூரி்கான கலந்தாய்விலும் கலந்துகொண்டார்.

ஒரத்தநாடு கால்நடைக் கல்லூரியில் இடம் கிடைக்கவே, விவசாயக் கல்லூரியில் இருந்து விலகி, கால்நடை மருத்துவக் கல்லூரியில் இணைந்தார். இதற்கிடையில் சென்னை எம்ஐடியிலும் ஏரோநாட்டிகல் படிக்கவும் இடம் கிடைத்தது.

இதற்குப் பிறகு, அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு சென்னையில் நீட்டிற்கு எதிராக நடத்திய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார் அனிதா.

அந்த செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு, கல்வியாளரும் செயல்பாட்டாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவுடன் சென்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் அனிதா சந்தித்தார்.

"இவ்வளவு நாட்களாக எங்கிருந்தீர்கள்? உங்களைப் போன்ற தகுதியான மாணவரைத்தான் தேடிக்கொண்டிருதோம் என விஜயபாஸ்கர் கூறினார்" என்று நினைவுகூர்கிறார் மணிரத்னம்.

இந்த சந்திப்பு முடிந்த பிறகு ஸ்டாலின் உள்ளிட்ட எல்லாக் கட்சித் தலைவர்களையும் அனிதாவும் அவரது சகோதரரும் சந்தித்தார்கள்.

"அந்தப் பெண் சமூகத்திற்கான ஒரு மனுஷி என்பதை அனிதாவிடம் உணர்ந்தேன். தனக்கு எப்படியாவது மருத்துவக் கல்லூரி இடம் கிடைத்து மேலே வந்துவிட வேண்டும், பிறர் எப்படியும் போகட்டும் என்ற எண்ணமே அந்தப் பெண்ணிடம் கிடையாது" என நினைவுகூர்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இதற்குப் பிறகு, நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று அரசுத் தரப்பிடமிருந்து அனிதாவின் சகோதரருக்கு அழைப்பு வருகிறது.

அடுத்த நாள், உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான வழக்கு வருவதால், அதில் அனிதாவும் பங்கேற்றால், தமிழகத் தரப்பை முன்வைக்க நன்றாக இருக்கும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமை MANPREET ROMANA/AFP/GETTY IMAG
Image caption கோப்புப் படம்

ஆனால், உடனடியாக புறப்பட்டு, இரவே வர சென்னை வர முடியாத நிலையில், அடுத்த நாள் காலையில் சென்னை வந்தடைந்து, காலை விமானத்தைப் பிடித்து தில்லியையும் வந்தடைகிறார்கள். அப்போதுதான் அனிதா செய்தியாளர்களைச் சந்தித்து தன் தரப்பை முன்வைக்கிறார்.

அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு தீர்ப்பை ஒத்திவைக்கும் நீதிமன்றம், முடிவில் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துசேர்க்கை என்று கூறுகிறது. தமிழக அரசும் உடனடியாக சேர்க்கைக்கான ஏற்பாடுகளைத் துவங்குகிறது.

"அனிதாவுக்கு இதில் பெரும் வருத்தம் இருந்தாலும் சோர்ந்துவிடவில்லை. அடுத்தடுத்த வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இரண்டாவது கலந்தாலோசனையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தோம்" என்று கூறினார் மணிரத்னம்.

"அவள் குடிமைப் பணித் தேர்வு எழுத வேண்டுமென ஊக்குவித்துக்கொண்டேயிருந்தேன். சில புத்தகங்களையும் வாங்கிக்கொடுத்தேன்" என்று மேலும் தெரிவித்தார் மணிரத்னம்.

அனிதா தற்கொலை செய்துகொண்ட செப்டம்பர் 1ஆம் தேதி காலை

அன்று இயல்பாகவே இருந்தாள் அனிதா. தன் சகோதரனுக்குப் பிடித்த கீரையை வாங்கிவந்து சமைப்பதற்குத் தயாரானாள். பிறகு பக்கத்து வீட்டில் இருந்த செல்வி என்ற பெண்ணிடமும் அவருடைய குழந்தைகளிடமும் விளையாடினாள். சுமார் பதினோரு மணியளவில் சித்தப்பாவின் வீட்டிற்குப் போய்விட்டு, தேன் மிட்டாய் வாங்கிவிட்டு வருவதாக செல்வியிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார் அனிதா.

"அவ வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்துதான் காய் நறுக்கிக்கொண்டிருந்தேன். அவ எப்படி வீட்டிற்குள் திரும்பப் போனான்னு தெரியல. எப்ப இப்படி செஞ்சுக்கிட்டான்னும் தெரியல. காலையிலகூட அவ என்கிட்டப் பேசும்போது ஒரு வித்தியாசமோ, வருத்தமோ இல்லை" என்கிறார் செல்வி. சகோதரனுக்குப் பிறகு அனிதா அதிகம் பேசும் ஆள் இவர்தான்.

"அந்தப் பெண் மருத்துவராகியிருந்தால் குழுமூரிலேயே முதல் மருத்துவராக இருந்திருப்பாள். பார்க்கும்போது ரொம்பவும் பாசமான பெண்ணாகத் தெரிந்தாள். வருவதை ஏற்றுக்கொள்ளும் குணமும் இருந்தது. ஆனால், ஏன் இப்படிச் செய்தாள் என்பதை யோசிக்கவே கடினமாக இருக்கிறது" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அனிதா படித்த ராஜ விக்னேஷ் மேல் நிலைப்பள்ளியில் உள்ள அவரது ஆசிரியர்கள், அவரை மிக அமைதியான மாணவியாகவே நினைவுகூர்கிறார்கள்.

"வகுப்பு இடைவேளையில் வெளியில் சென்றாலும் விரைவில் திரும்பிவிடுவாள் அனிதா. மீண்டும் வகுப்பில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பாள்" என்கிறார் ஆங்கில ஆசிரியரான பேட்ரிக்.

யாரிடமும் அதிர்ந்து பேசாத, அமைதியான பெண்ணாகத்தான் பள்ளிக்கூடத்தில் அறியப்பட்ட அவரை, உச்ச நீதிமன்றத்தில் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது என்கிறார் பள்ளி முதல்வர் நவநீதகிருஷ்ணன்.

Image caption பள்ளி முதல்வர் நவநீதகிருஷ்ணன்

தங்களுடைய பள்ளிக்கூடத்தில் முதலிடம் பிடித்து 1181 மதிப்பெண்களைப் பிடித்த மாணவனுக்கும் நீட் தேர்வுகாரணமாக இடம் கிடைக்கவில்லையென்கிறார் அவர்.

தமிழக அரசின் நிதியுதவியை ஏற்க அனிதாவின் குடும்பம் மறுப்பு

அனிதாவின் மரணத்திற்குப் பிறகு, சமூக வலைதளங்களில் பிரின்ஸ் கஜேந்திரபாபுவையும் எஸ்.எஸ். சிவசங்கரையும் கடுமையாக விமர்சித்து கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

"அவர்கள் இருவருமே தொடர்ந்து ஆதரவாக இருந்தார்கள். அவர்கள் மீது குறைசொல்வது மிகத் தவறு" என்கிறார் மணிரத்னம்.

"நான் பெற்ற குழந்தை இறந்ததுபோன்ற சோகத்தில் இருக்கிறேன். ஏதோ, அந்தப் பெண்ணால் சுயமாக முடிவெடுக்க முடியாததைப்போலப் பேசுகிறார்கள். உண்மை எல்லோருக்குமே தெரியும்" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தமிழக அரசு அனிதாவின் குடும்பத்திற்கு அறிவித்த பத்து லட்ச ரூபாய் நிதியுதவியை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

"ஒரு தனிநபரோ, எதிர்க்கட்சியோ எவ்வளவு குறைந்த தொகையை அளித்தாலும் அதை ஏற்க வேண்டிய நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால், அரசு செய்யவேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டு, இப்போது அனிதா இறந்த பிறகு பணம் கொடுப்பதை எப்படி ஏற்பது? அதனால்தான் வாங்கவில்லை" என்கிறார்கள் குடும்பத்தினர்.

தந்தை சண்முகம் எப்போதும் வெளியூரில்தான் இருப்பார்; சகோதரர்களும் படிப்பதற்காக வெளியூர்களுக்குச் சென்றுவிட்டதால் பாட்டி பெரியம்மாள்தான் எல்லாம்.

"டாக்டராகி எனக்கு வைத்தியம் பார்ப்பேன்னு சொல்லிக்கிட்டிருப்பா. வெளியில அமைதியா இருந்தாலும் எங்கிட்ட எப்போதும் விளையாடிக்கிட்டே இருப்பா" என்ற பெரியம்மாள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

"அரியலூரில் அனிதா வசித்த பகுதிகளில் விவசாயமும் பெரிதாகக் கிடையாது. சுண்ணாம்புக் கல் நிறைய கிடைக்கும், அவ்வளவுதான். இங்கிருக்கும் ஆண்கள் எல்லாம் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கூலி வேலை செய்பவர்களாகவும் ஆட்டோ ஓட்டுபவர்களாகவுமே இருக்கிறார்கள்.

Image caption அனிதாவின் தந்தை மற்றும் பாட்டி

அனிதா மருத்துவராகியிருந்தால், அது இந்தப் பகுதியைச் சேர்ந்த பலரை உத்வேகமூட்டியிருக்கும். பலருக்கும் வழிகாட்டியிருக்கும். அவர் யாரிடமும் சலுகையைக் கோரவில்லை. தான் எடுத்த மதிப்பெண்களுக்கான இடத்தையே கோரினார். எதுவுமே நடக்காமல் போய்விட்டது" என்கிறார் எஸ்.எஸ். சிவசங்கர்.

அனிதாவின் மரணம், நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் போராட்டத்திற்கு மறுபடியும் ஒரு உந்துதலைக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.

ஆனால், பேத்தியை, மகளை, சகோதரியை இழந்த அவரது குடும்பம் அனிதா அந்த அதிர்ச்சியிலிருந்து அவ்வளவு சுலபத்தில் விடுபடுவதாக தெரியவில்லை.

பிற செய்திகள்:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அதிகரிக்கும் நட்சத்திர ஆமை கடத்தல்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :