"மாதவிடாயின்போது கோயிலுக்கு சென்றேன்"- என கூறிய பெண் எழுத்தாளர் மீது ஆன்லைன் தாக்குதல்

காஜல் ஓஜா வைத்தியா
Image caption காஜல் ஓஜா வைத்தியா

சமூக வலைத்தளத்தில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக கூறப்படும் ஒரு ஃபேஸ்புக் பயன்பாட்டாளருக்கு எதிராக, குஜராத் எழுத்தாளர் காஜல் ஓஜா வைத்தியா அகமதாபாத் சைபர் கிரைம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

பிபிசி குஜராத்தி சேவையிடம் அளித்த பேட்டியில் மாதவிடாய் பற்றிய பழையான நம்பிக்கைகளுக்கு மாறாக வைத்தியா பேசிய பிறகு, அவர் மீது சமூக வலைத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லக் கூடாது போன்ற மூடநம்பிக்கை கட்டுப்பாடு குறித்து தனக்கு நம்பிக்கை இல்லை எனத் தனது பேட்டியில் காஜல் ஓஜா வைத்தியா கூறியிருந்தார். மாதவிடாய்காலத்தின் போது, தான் கோயிலுக்கு சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

சில மணிநேரத்தில், அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வைத்தியாவுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அந்த நபர் வைத்தியாவின் மகனைக் கொல்லப்போவதாக மிரட்டியுள்ளார்.

"தொலைப்பேசியில் பேசிய நபர் என்னைப் பாவம் புரிந்தவர் எனக் கூறியதுடன், பிபிசி குஜராத்தி சேவைக்கு அளித்த பேட்டியின் மூலம் நான் ஹிந்து மதத்தை அவமதித்துவிட்டதாகவும் கூறினார்" என்கிறார் வைத்தியா

வெளிப்படையாகக் கருத்துக்களை தெரிவிக்கும் எழுத்தாளர் வைத்தியா, பல்வேறு பிரிவுகளின் கீழ் புகார் செய்துள்ளார்.

"நான் பொதுவெளியில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி வருகிறேன். அந்த ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் அநாகரிக வார்த்தைகள் மூலம் என் மீது அவதூறு பரப்பி வருகிறார்" என பிபிசியிடன் கூறுகிறார் வைத்தியா.

குஜராத்தின் பிரபல எழுத்தாளரான வைத்தியா, 'திரவுபதி', 'ஷுக்ரா மன்கல்' உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார்.

"என்னால் தூங்க முடியவில்லை. நான் ஒரு உளவியலாளரைப் பார்க்க வேண்டும்" என்கிறார் வைத்தியா.

மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் சவால்கள் குறித்து பெண்கள் பேசும் #Letstalkperiods எனும் பிபிசி தொடரின் ஒரு பகுதியாக வைத்தியா தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

வைத்தியா அளித்த புகார் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சைபர் கிரைம் போலிஸார் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :