அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை : சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Image caption சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுகவில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் தொடுத்திருந்த வழக்கு மீதான விசாரணையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி, அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை தொடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை தொடர்வதற்கு தேவையான உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த காரணத்திற்காகவும் சேர்த்து, இந்த வழக்கை தொடுத்திருந்த அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேலுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழுவை கூட்ட அதிகாரமற்றவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் வழக்கு தொடுத்திருந்தார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த நீதிமன்றத்தின் உத்தரவு டி.டி.வி.தினகரன் அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

இதற்கிடையே, டி.டி.வி.தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவை சந்திக்கவுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்