குடிபோதையில் இரண்டு குழந்தைகளை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்

குடிபோதையில் குழந்தைகளை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப் படம்

உத்தரபிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இரண்டு பேர் உயிரிழந்தார்கள்.

குற்றம் சாட்டப்பட்ட யோகேந்திர் எனும் சோடே சிங் யாதவ் என்பவரை எடா காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அலிகஞ்ச் பிராந்தியத்தில், தேவ்தரா கிராமத்தில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் வீட்டுக்கு வெளியே குற்றம் சாட்டப்பட்டவர் குடித்துவிட்டு போதையில் இருந்திருக்கிறார் என்று எடா காவல்நிலைய சரகத்தின் காவல்துறை உயரதிகாரி அகிலேஷ் குமார் செளராசியா பிபிசியிடம் கூறினார்.

"குழந்தைகளின் தாய் அவரை அங்கிருந்து வெளியே செல்லச் சொன்னபோது, கோபமடைந்த குடிகாரர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டார்" என்கிறார் அகிலேஷ் குமார் செளராசியா.

மூன்று வயது ஷான் மொஹம்மத் மற்றும் ஆறு வயதான குல் அஃப்ஷா என்ற சகோதர சகோதரிகள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மற்றொரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறது. இப்போது அந்தக் குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிகிறது.

யோகேந்திரிடம் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் இருந்தது என்றும், அவர் மீ்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 302 மற்றும் ஆயுதச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அகிலேஷ் குமார் செளராசியா கூறுகிறார்.

குழந்தைகளை சுட்டபிறகு யோகிந்தர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், கிராமத்தினர் உதவி எண் 100ஐ அழைத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர்.

குற்றவாளியான யோகேந்திர், காஜியாபாதில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வருவதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :