பதவி, அதிகார மாற்றத்துக்கு வழிவகுத்த அதிமுக கோஷ்டி மோதல்

அதிமுக

அதிமுகவின் தற்காலிக பொது செயலாளராக நியமிக்கப்பட்ட வி.கே சசிகலாவின் நியமனம் ரத்து, அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவி ரத்து என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இன்றைய அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் ஆளும் அ.தி.மு.கவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு சுமார் 2140 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்.

காலை 10.30 மணியளவில் இந்தக் கூட்டம் துவங்கியது.

இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையேற்றார். ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியும் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சிக்கும் ஆட்சிக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் சில தீர்மானங்களைத் தவிர்த்து வேறு சில முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, அ.தி.மு.கவில் ஜெயலலிதா வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டதாக ஒரு தீர்மானம் கூறுகிறது. மேலும் ஜெயலலிதா மறைந்தவுடன் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் அந்தப் பதவியின் அடிப்படையில் 30 டிசம்பர் முதல் சிறை செல்வது வரையில் சசிகலா செய்த நியமனங்களும் செல்லாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

அதேபோல அ.தி.மு.கவின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத டிடிவி தினகரன் அறிவிக்கும் நியமனங்கள், பதவி நீக்க அறிவிப்புகள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுச் செயலாளர் பதவி இல்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், புதிதாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் இந்தப் பதவிகளுக்கு அமைப்புத் தேர்தல்கள் மூலமும் பொதுக் குழு உறுப்பினர்கள் மூலமும் தேர்வு நடைபெறுமென்றும் ஒரு தீர்மானம் கூறுகிறது.

இந்த தேர்தல்கள் நடக்கும்வரை, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் முதல்வர் பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் துணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் இருப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில், பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அளிக்கப்பட்டன. கட்சியின் வங்கிக் கணக்குகளிலும் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் இவர்களே கையெழுத்திடுவார்கள் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பொதுச் செயலாளர் செய்ய வேண்டிய பணிகள், பொதுச் செயலாளருக்குள்ள அதிகாரங்கள், பொறுப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் மாற்றும் வகையில் கட்சி விதிகள் அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்தக் கூட்டம் முடிவடைந்த பிறகு, அதிகாரபூர்வமாக செய்தியாளர் சந்திப்புகள் ஏதும் நடக்கவில்லை.

ஏற்கனவே, சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் செய்யப்பட்ட முறையீடுகள் நிலுவையில் உள்ளன. மேலும், இன்று கூட்டப்பட்ட பொதுக் குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரும் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில்தான் சசிகலாவை நீக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் பொதுக்குழுவின் தீர்மான நகல் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டபோது, அதில் அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா)வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் என்றே கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில், சென்னையில் இன்று நடத்தப்பட்டது அ.தி.முகவின் செயற்குழு கூட்டமே அல்ல என்றும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான பணிகள் துவங்கிவிட்டதாகவும் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரன்

பட மூலாதாரம், AIADMK

ஆளுநர் இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்காவிட்டால், அவர் மீதான மரியாதை குறைந்துவிடும் என்றும் தினகரன் தெரிவித்தார்.

திமுக மனு

இதற்கிடையில் முதல்வர் பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என தி.மு.க. உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவை கூட்டப்படும்போது தி.மு.கவின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :