ராகுல் காந்தியின் சவால் உள்நாட்டு மேடையா, வெளிநாட்டு மேடையா?

  • ஆதர்ஷ் ராடோர்
  • பிபிசி
ராகுல்

பட மூலாதாரம், EPA

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கலிஃபோர்னியாவின் பர்க்லே பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை பரவலாக பேசப்படுகிறது. இந்த உரையில், பிரதமர் நரேந்திர மோதியின் அரசின் பல கொள்கைகளை விமர்சித்துள்ள ராகுல், காங்கிரஸ் கட்சியின் சுயபரிசோதனை பற்றியும் பேசியிருக்கிறார்.

ஆனால், அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களையும் ராகுல்காந்தி எதிர்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ராகுல்காந்தியின் வெளிநாட்டு பயணம் காங்கிரஸ் கட்சிக்கு தீங்கையே ஏற்படுத்தும் என்று கூறுகிறார் பத்திரிகையாளர் அபர்ணா திவேதி.

பிபிசியிடம் பேசிய அபர்ணா திவேதி, "கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ராகுல் காந்தியின் எட்டாவது வெளிநாட்டு பயணம் இது. என்னைப் பொறுத்தவரை, இது காங்கிரசிற்கு ஆபத்தானது. ராகுல் காந்தியின் ஆதரவு காங்கிரசுக்கு இப்போது தேவை. அவரது மனோபலம் தற்போது குறைந்திருக்கிறது. மக்களவை தேர்தலில் மோசமாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சி, மக்களிடையே தொடர்ந்து ஆதரவை இழந்து வருகிறது. பஞ்சாப் தவிர, கட்சி வேறு எங்கும் வெற்றி பெறவில்லை" என்று கூறுகிறார்.

வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்திய மக்களை சென்றடைய முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறதா? ராகுல்காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களால், காங்கிரசுக்கு உள்நாட்டில் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என்று மூத்த பத்திரிகையாளர் வினோத் ஷர்மா கூறுகிறார்.

கட்சி அமைப்பில் கவனம் தேவை

பட மூலாதாரம், AFP

"வெளிநாட்டுப் பயணத்தால், உள்நாட்டில் என்ன மாற்றம் ஏற்படும்? இந்தியாவில் கட்சி அமைப்பை வலுப்படுத்தவேண்டியதே காங்கிரசுக்கு இப்போது மிகவும் அவசியமானது. பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்தபோதிலும், அங்கும் தனது பலத்தை மேம்படுத்த தவறிவிட்டது காங்கிரஸ். ஒடிசாவை பொறுத்தவரையில், அது இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை என்பதுபோல் நடந்துகொள்கிறது. போட்டிக்கு காங்கிரஸ் அங்கு இல்லாத நிலையில், பாரதிய ஜனதா கட்சி அங்கு தனது பிடியை வலுவாக்கிவிட்டது" என்கிறார் வினோத் ஷர்மா.

ஒருபுறம் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டால், மறுபுறத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியை வலுவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி ஊழல்மிக்கது என்ற தோற்றத்தை மக்களிடையே பரப்புவதில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றது. ஆனால், காங்கிரஸ் தலைமை, இந்த தோற்றத்தை மாற்றி, ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை முன்னிறுத்தும் முயற்சிகளில் ஈடுபடவில்லை.

இவ்வாறு பல காரணங்களை கூறும் வினோத் ஷர்மா, "பாரதிய ஜனதா கட்சி ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால், அது காங்கிரசின் ஊழல் என்ற ஆயுதத்தையே கையில் எடுக்கிறது. இதற்கான பதிலை காங்கிரஸ் கட்சி தேட வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை, தேர்தலில் வெற்றி பெறுபவர்களே தலைவர்களாக கருதப்படுவார்கள். இந்த விசயத்தை ராகுல்காந்தியும், காங்கிரசும் உணர்ந்து கொள்ளவேண்டும்."

சவால்

பட மூலாதாரம், AFP

சமீபத்தில் காங்கிரஸ், பல தொழில்முறை நிபுணர்களுடன் இணைந்து இயங்குகிறது. அண்மையில் உருவாக்கப்பட்ட அகில இந்திய தொழில்சார் காங்கிரஸ் என்ற அமைப்பை சசிதரூர் தலைமையேற்று நடத்துகிறார். இதில் மிலிந்த் தியோரா, கீதா ரெட்டி, கௌரவ் கோகோய், சல்மான் சோஸ் போன்ற இளம் தலைவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த அமைப்பு கட்சிக்கு உதவியாக இருக்குமா?

இது குறித்து அபர்ணா திவிவேதி கூறுகிறார், "காங்கிரசுக்குள் தொழில்முறை நிபுணர்கள் வந்து, கட்சிக்கு உதவி செய்தால், அது நிலைமையை மேம்படுத்தும். ஆனால், கட்சித் தலைமையின் புரிதலைப் பற்றியே இங்கு கேள்வி எழுப்பப்படுகிறது. ராகுல்காந்தி வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு புரியவைக்கிறார். அது சரியே என்றாலும், முதலில் உள்நாட்டின் அரசியலை புரிந்துக் கொள்ள வேண்டியது அதைவிட அவசியமானது."

முதலில் ராகுல்காந்தி உள்நாட்டு விவகாரங்களை சரியாக கையாள வேண்டும், தேர்தல் களத்தில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்பதே அவர் முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :