இந்திய-பாகிஸ்தான் போர்: முதல் நாள் வெற்றி, அடுத்த நாள் போர்க் கைதி

  • ரெஹான் ஃபஜல்
  • பிபிசி
படைவீரர்கள்

பட மூலாதாரம், BRIG KANWALJIT SINGH

படக்குறிப்பு,

போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பாகிஸ்தானிலிருந்து திரும்பிய பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இடது பக்கத்தில் முதலில் இருப்பவர் அனந்த் சிங், நடுவில் இருப்பவர் கன்வல்ஜித் சிங்.

1965 இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே 22 நாட்கள் நடைபெற்ற போரில், சீக்கிய ரெஜிமெண்டின் நான்காவது பிரிவு பர்க்கியில் நடைபெற்ற மோதலில் சிறப்பாக செயல்பட்டு ஆனந்தக் கூத்தாடியது. ஆனால் யுத்தத்தின் போக்கு எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

1965, செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரி கர்னல் அனந்த் சிங், காலாட்படையின் ஏழாவது பிரிவின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேற்கு கமாண்டின் தளபதியும், சீக்கிய ரெஜிமெண்டின் கர்னலுமான லெப்டினென்ட் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங், அனந்த் சிங்கிற்கு சிறப்பு பொறுப்பு ஒன்றை ஒப்புவித்தார்.

வல்தோஹா வரை லாரியில் சென்று, பிறகு அங்கிருந்து 19 கி.மீ. தொலைவு நடை பயணமாக பாகிஸ்தான் பிரதேசத்திற்குள் நுழைந்து, கேம்கரன்-கசூர் சாலையில் சாலைத் தடுப்பு அமைக்க வேண்டும் என்பதே, அனந்த் சிங்கிற்கு வழங்கப்பட்ட பொறுப்பு.

இந்தப் பணி அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி காலை ஐந்தரை மணிக்குள் முடிவடையவேண்டும். அப்போது, கேம்கரணில் போரில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் படையின் நான்காம் மவுண்டன் பிரிவினர் காலை எட்டு மணியளவில் அனந்த் சிங்கை சந்திப்பார்கள் என்பது வகுக்கப்பட்ட திட்டம்.

சாராகரி போர்

சீக்கிய ரெஜிமெண்டின் நான்காம் படைப்பிரிவின் 'சிறந்த போர் பிரிவுக்கான விருது' நாள், செப்டம்பர் 12.

68 ஆண்டுகளுக்கு முன், 1897 செப்டம்பர் 12ஆம் நாளன்று, சீக்கிய ரெஜிமெண்டின் நான்காவது படைப்பிரிவின் 22 வீரர்கள் ஆயிரக்கணக்கான அஃப்ரீதி மற்றும் ஓர்கஜாயி பழங்குடியினருடம் சண்டையிட்டனர். இறுதிவரை அவர்களை எதிர்கொண்ட சீக்கிய ரெஜிமெண்டின் வீரர்கள், தங்கள் உயிரைவிட்டாலும், ஆயுதங்களை துறக்கவில்லை.

பட மூலாதாரம், WWW.BHARATRAKSHAK.COM

காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய சாராகரி போர், மாலை நான்கு மணி வரை தொடர்ந்தது. அந்த போரில் ஈடுபட்ட 22 வீரர்களுக்கும் 'Indian Order of Merit' என்ற பிரிட்டிஷ் காலத்து மிக உயரிய விருது வழங்கப்பட்டது. IOM என்று அறியப்படும் அந்த விருது, இன்றைய பரம்வீர் சக்ரா விருதுக்கு இணையானது.

இந்த யுத்தம், சாராகரி போர் என்றும் அழைக்கப்படுகிறது. சாகசங்கள் நிறைந்த இந்த யுத்தமானது, உலக அளவில் சிறப்பாக குறிப்பிடப்படும் எட்டு யுத்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த 'சிறந்த போர் பிரிவுக்கான விருது' நாளை (Battle honour day), சீக்கிய ரெஜிமெண்ட் வீர்ரகள் தற்போதைய போரில் வெற்றிபெற்று திரும்பிய பிறகு கொண்டாடவேண்டும் என்று ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் விரும்பினார்.

பர்க்கியில் இருந்து கேம்கரணை நோக்கி முன்னேறிய படை

இருந்தபோதிலும், அனந்த் சிங்கின் படையணியினருக்கு முதல் நாள் போரில் ஏற்பட்ட காயங்கள் பலமாக இருந்தது. தொடர்ந்து ஏழு நாட்களாக ஓய்வின்றி போரில் ஈடுபட்டிருந்த அவர்கள் தளர்வுற்று இருந்தாலும், மேலதிகாரியின் உத்தரவை சிரமேற்கொண்டு, சவாலை எதிர்கொண்டு களத்தில் இறங்கினார்கள்.

செப்டம்பர் 11ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு உற்சாகத்துடன் குண்டுகள் முழக்கத்துடன் பர்க்கியில் இருந்து கிளம்பி, கால்ரா வரை வீறுநடையிட்டுச் சென்ற அவர்கள், அங்கிருந்து லாரிகளில் வல்தோஹா சென்றடைந்தனர்.

படக்குறிப்பு,

பிபிசி ஸ்டுடியோவில் ரெஹான் ஃபஜல் மற்றும் பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங்

அந்தப் போரில் பங்கேற்ற பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் தனது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார், ''மிகவும் மோசமாக சோர்வுற்றிருந்தோம். பல நாட்களாக ஆடைகளைக் கூட மாற்றவில்லை. கிணற்றில் இருந்த ரத்த சகதி கலந்த நீரை பருகியதில் வயிறு கெட்டுப்போயிருந்தது. ஆனால், தலைமை இட்ட உத்தரவை நிறைவேற்ற சித்தமாயிருந்தோம். பல நாட்களாக போரில் ஈடுபட்டு தளர்ந்திருந்த எங்களுக்கு லெஃப்டினெண்ட் விர்க் சூடான உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.''

ரயில்வே பாதையை ஒட்டி அணிவகுப்பு

படையினரிடையே பேசிய லெஃப்டினெண்ட் கர்னல் அனந்த் சிங், ''கடவுள் நமக்கு மேலும் சிறப்பு சேர்க்க விரும்புகிறார். சாராகரி தியாக தினத்தை மேலும் ஒரு வெற்றியோடு சேர்த்து கொண்டாடுவோம். சாராகரி போரில் ஈடுபட்ட மாவீர்ர்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். மற்றுமொரு முறை வீரத்தின் பெயரை நமது படைப்பிரிவு நிலைநிறுத்தட்டும்'' என்று வீர உரையாற்றினார்.

சீக்கிய ரெஜிமெண்டின் 300 வீர்ர்களின் அணிவகுப்பு, செப்டம்பர் 12ஆம் தேதியன்று இரவு ஒரு மணிக்கு வல்தோஹாவில் தொடங்கியது. அந்தப் பகுதியை நன்கு அறிந்திருந்த இரண்டு வீரர்கள், ரயில்வே பாதையை ஒட்டி அணிவகுத்துச் சென்ற வீரர்களுக்கு வழிகாட்டியவாறு முன்சென்றனர்.

பட மூலாதாரம், BHARAT RAKSHAK

பாகிஸ்தான் டாங்கிகளை எதிர்கொண்டால் பயன்படுத்த வசதியாக தோள்களில் துப்பாக்கிகளை சுமந்து சென்ற அணிவகுப்பு மெதுவாகவே சென்றது.

அந்தப் பகுதியில் பாகிஸ்தானின் டாங்கிகள் இல்லை என்று தகவல் கிடைத்தது, எனவே ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்று நினைத்த அனந்த் சிங், வீரர்கள் வேகமாக செல்வதற்காக கனமான துப்பாக்கிகளை அங்கேயே விட்டு செல்லலாம் என்று முடிவெடுத்தார்.

பிறகு தொடர்ந்து சென்றபோது, சிக்னல் கிடைப்பதும் நின்றுபோனது, வெளியுலகத்தை தொடர்பு கொள்ள படைப்பிரிவிடம் வேறு எந்த சாதனமும் இல்லை.

கன்வல்ஜீத் சிங் சொல்கிறார், ''காலை ஐந்து மணிக்குள் இலக்கை சென்றடையவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. எனவே, நாங்கள் நடந்தோம் என்று சொல்வதைவிட ஓடினோம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். செல்லும் வழியில் எதிர்பட்ட ஒரு பாகிஸ்தானிய படைப்பிரிவை விரட்டிவிட்டு நாங்கள் முன்னேறினோம்.''

பாகிஸ்தானி வீரர்கள் சுற்றி வளைத்தனர்

அதிகாலை நான்கு மணி சுமாருக்கு சீக்கிய ரெஜிமெண்டின் இரண்டாம் பிரிவின் வீரர்கள், கேம்கரண் கிராமத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் வந்துவிட்டனர். அங்கு நாற்புறமும் டாங்கிகள் சூழ பாகிஸ்தான் படை வீரர்களை பார்த்து இந்திய வீரர்கள் திகைத்து நின்றார்கள்.

பாகிஸ்தான் வீரர்களும், டாங்கிகளும் வயல்வெளிகளில் மறைவாக இருந்தது பிறகுதான் தெரியவந்தது. எதிரி தரப்பினரை கண்ட பாகிஸ்தானிய ராணுவத்தினர் டாங்கிகளில் ஏறி, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே சுற்றிவளைத்தனர்.

பட மூலாதாரம், KANWALJIT SINGH

படக்குறிப்பு,

1965 போருக்கு பின் வீரர்களுடன் கைகுலுக்கும் மேஜர் ஜெனரலுடன் நிற்கும் கன்வல்ஜீத் சிங்

பாகிஸ்தான் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டு, கன்வல்ஜீத் சிங் உட்பட 121 பேர் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

பிரிகேடியர் கன்வல்ஜீத் சிங் கூறுகிறார், ''அனந்த் சிங்கிற்கு அருகில் நான் சென்று கொண்டிருந்தேன். பாகிஸ்தானின் டாங்கிகளை பார்த்ததும், அனைவரும் ஒரே நேரத்தில் செல்லவேண்டாம் என்று அவர் சொன்னார். எனவே நாங்கள் நாலா புறங்களிலும் பிரிந்தோம். இல்லாவிட்டால் சேதத்தின் அளவு அதிகரித்திருக்கும். 40-50 கஜ தொலைவு சென்றதும், பாகிஸ்தானி டாங்கிகளின் ஓசை கேட்டது. எங்களை நிற்குமாறு சொல்லிவிட்டு, அனந்த் சிங் மட்டும் முன்னேறிச் சென்றார். என்னிடம் இருந்த டாங்கிகளை எதிர்த்து சுட பயன்படுத்தும் துப்பாக்கியை கொண்டு சுட முயற்சித்தேன், ஆனால் அது வேலை செய்யவில்லை.''

கைகளை மேலே தூக்கினோம்

கன்வல்ஜீத் சிங் மேலும் சொல்கிறார், ''என்னுடைய கையில் இருந்த துப்பாக்கியை கீழே வீசிவிட்டு, முதலில் தண்ணீர் குடிக்கலாம் என்று நினைத்தேன், அந்த சமயத்தில் ஒரு குண்டு எனது தோளை தாக்கியதில் குருதி பெருகியது. அந்த நிலையிலும் நான் கையை உயர்த்தினேன். அவர்கள் எங்கள் கண்களை கட்டியதோடு, கைகளை லாரிகளில் பக்கவாட்டில் கட்டினார்கள்.''

பட மூலாதாரம், HARMALA GUPTA

படக்குறிப்பு,

பாதுகாப்பு அமைச்சர் யஷ்வந்த் ராவ் சவானுடன் ஹர்பக்‌ஷ் சிங்

அந்தப் போரில் பங்கேற்ற கர்னல் சஹலின் அனுபவம் இது, ''நான் திரும்பி ஓட முயற்சித்தேன். 50 கஜத் தொலைவில் நின்றிருந்த டாங்கியில் இருந்த எதிர் தரப்பினர் என்னை பார்த்து சுடத் தொடங்கியதுடன், ஆயுதத்தை கீழே போடு, இல்லாவிட்டால் கொன்றுவிடுவேன் என்றும் கத்தினார்கள். சரணடைவதைத் தவிர வேறு வழி?''

'முட்டாள்தனம்'

இந்த சம்பவங்களை அடுத்த நாள் தெரிந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சர் சவான், 'முட்டாள்தனமான சம்பவம்' என்று தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட்டார்.

'இன் த லைன் ஆஃப் டியூட்டி (In the line of duty) என்ற தனது சுயசரிதையில் இந்த சம்பவத்தை பற்றி குறிப்பிடும் ஹர்பக்‌ஷ் சிங், ''பர்க்கியை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சீக்கிய ரெஜிமெண்டின் நான்காவது படைபிரிவு வீரர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஒரு நொடி கூட கண் அயரவில்லை என்பதுகூட எங்களுக்கு தோன்றவில்லை. சக வீரர்களில் பலர் உயிரிழந்தனர். அந்த படையின் கமாண்டிங் அதிகாரி அனந்த் சிங் மிகச் சிறந்த வீரர், தன்னுடைய படைப்பிரிவினர் மிகவும் மோசமாக சோர்வுற்றிருப்பதாகவோ, தளர்ந்திருப்பதாகவோ அவர் சொல்லவேயில்லை.''

பட மூலாதாரம், KANWALJIT SINGH

படக்குறிப்பு,

ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கிடம் பர்க்கி போரை பற்றி பேசச் சென்ற லெப்டினெண்ட் ஜெனரல் கன்வல்ஜித் சிங் (வலப்புறம்)

அவர் சொல்கிறார், ''உங்கள் அணியினரை இப்படி நகர்த்தியிருக்க்க்கூடாது. மிகச் சிறந்த வெற்றியை பர்க்கியில் பெற்ற அந்த வீரர்கள் சரியாக உணவு உண்ணவில்லை. 39 பேர் உயிரிழந்து, 125 பேர் மோசமாக காயமடைந்திருந்தார்கள். அந்த சூழ்நிலையில் முற்றிலும் புதிய இடத்திற்கு அவர்களை அனுப்பியது, ஒரு சூதாட்டம். வெற்றி பெற்றால் கொண்டாட்டம், தோற்றுப்போனால் என்ன ஆகும் என்பது நிதர்சனமாக உங்கள் கண் முன்னே இருக்கிறது.''

இந்த சம்பவம் பற்றிய செய்திகள் அப்போது ஊடகங்களிடம் இருந்து ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :