தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் சாத்தியமா?

  • முரளீதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நாடு முழுவதும் இயக்கப்பட்டுவரும் ஜவஹர் நவோதயா பள்ளிக்கூடங்களை தமிழ்நாட்டிலும் துவங்க அனுமதிக்க வேண்டும் என்றும் இது குறித்து 8 வாரங்களுக்குள் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கூறியிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைPRAKASH SINGH/AFP/GETTY IMAGES

1985-இல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளிக்கூடத்தைத் துவங்க உத்தேசித்தார்.

1986-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையில் இந்த திட்டம் உள்ளடக்கப்பட்டது. ஹரியானாவின் ஜஜ்ஜரிலும் மகாராஷ்ட்ராவின் அமராவதியிலும் முதல் இரண்டு பள்ளிக்கூடங்கள் துவங்கப்பட்டன.

ஜவஹர் நவோதயா வித்யாலயா என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளிக்கூடங்கள் உறைவிடப் பள்ளிகளாகும். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இங்கு மாணவர்கள் படிக்க முடியும். தற்போது இந்தியா முழுவதும் 576 மாவட்டங்களில் 598 நவோதயா பள்ளிக்கூடங்கள் செயல்பட்டுவருகின்றன.

நவோதயா பள்ளிகளை ஏற்காத மாநிலங்கள்

இந்தத் திட்டம் துவங்கப்பட்டபோது, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டும் இதனை ஏற்கவில்லை. இந்தப் பள்ளிக்கூடங்களில் பொதுவாக மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. தவிர, 8ஆம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கு வங்கம் இந்த பள்ளிக்கூடங்களை நடத்துவதற்கு அனுமதி அளித்தது. ஆனால், தமிழகத்தில் தற்போதுவரை இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

பட மூலாதாரம், DIPTENDU DUTTA/AFP/GETTY IMAGES

இந்நிலையில், குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டிலும் நவோதயா பள்ளிக்கூடங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நேற்றுத் தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள், நவோதயா பள்ளிக்கூடங்களைத் தொடங்குவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை அளிப்பது குறித்து 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமெனக் உத்தரவிட்டனர்.

தற்போது பத்தாம் வகுப்புவரை தமிழ் கற்பிக்கப்படுவதாலும் 11வது, 12வது வகுப்பில் விருப்பப்பாடமாக தமிழ் கற்பிக்கப்படுவதாலும் தமிழ் கற்பிக்கப்படாதோ என்ற அச்சம் தேவையில்லை என நீதிமன்றம் கூறியது. மேலும், மாவட்டம் தோறும் 30 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும்.

அதில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வரை 240 மாணவர்கள் பயிலும் வசதியுள்ள கட்டத்தை ஒதுக்கீடு செய்து தருவது குறித்து 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

நவோதயா பள்ளிகளைப் பொறுத்தவரை, மாநில அரசு செய்ய வேண்டியது 30 ஏக்கர் நிலத்தை இலவசமாகவோ நீண்ட காலக் குத்தகைக்கோ அளிக்க வேண்டும்.

உள்ளூர் நிலவரங்களைப் பொறுத்து இந்த நிலத்தின் அளவு குறையலாம். இந்தப் பள்ளிக்கூடங்களில், 75 சதவீதம் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்படுவதால், அந்த மாணவர்களைத் தேர்வுசெய்ய மாவட்ட நிர்வாகத்தின் உதவியும் தேவைப்படும்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் இந்த உத்தரவு குறித்து, கருத்துத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முறையீடு செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளன.

திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. இருந்தபோதும் தமிழக காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் நவோதயா பள்ளிக்கூடங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டுமெனக் கூறியுள்ளது.

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைNOAH SEELAM/AFP/GETTY IMAGES

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிக்கூடங்களைத் திறக்க அனுமதிக்கப்போவதில்லையென கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சரவைத் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அந்த காலகட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, "அங்கு இந்தி வழியில் பாடங்கள் நடத்தப்படும் என்பது மட்டும் பிரச்சனையில்லை.

இதற்கான கட்டமைப்பை மாநில அரசு உருவாக்கித்தர வேண்டியிருக்கிறது. இந்தப் பள்ளிக்கூடத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 ஏக்கர் நிலத்தை அரசு தர வேண்டியிருக்கிறது. நம்முடைய அரசுப் பள்ளிக்கூடங்களே அவ்வளவு பெரிய நிலத்தில் இல்லாத போது நாம் எதற்கு அவர்கள் வழியில் பாடம் நடத்துவதற்கு நிலம் தர வேண்டும்?" என்று கேள்வியெழுப்பினார்.

நவோதயா பள்ளிக்கூடங்களால் மாநில கல்வித் தரம் உயருமா?

இது றித்து பிபிசியிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிகுமார், நவோதாயா பள்ளி அமைப்பில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைக்கிறார்.

"நவோதயா பள்ளிக்கூடங்களால் மாநில கல்வித் தரம் உயரும் என்பது கிடையாது. வட இந்திய மாநிலங்களில்தான் நவோதயா பள்ளிக்கூடங்கள் அதிகம் இருக்கின்றன. ஆனால், தமிழக கல்வித்தரத்தோடு அம்மாநிலங்களின் கல்வித் தரங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். இது ஏற்கக்கூடிய கருத்தல்ல என்பது புரியும்" என்கிறார் ரவிக்குமார்.

கிராமப்புற மாணவர்களுக்கான பள்ளிக்கூடம் என்கிறார்கள்; ஆனால், இந்தப் பள்ளிக்கூடங்களில் சேர்வதற்காக ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தேசிய தகுதித் தேர்வு வைக்கப்படுகிறது. இதில் எப்படி கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சிபெற முடியும் என்று கேள்வியெழுப்புகிறார் அவர்.

ஆனால், நவோதயா பள்ளிக்கூடங்களை எதிர்ப்பதாலேயே நம் மாநிலத்தில் எல்லா பள்ளிக்கூடங்களும் நல்ல நிலையில் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது. அவற்றைத் தொடர்ந்து தரம் உயர்த்த வேண்டும். அவை மோசமான நிலையில் இருப்பதால்தான் நவோதயா பள்ளிகள் மேம்பட்டவை என்ற வாதம் இங்கே எடுபடுகிறது என்கிறார் ரவிகுமார்.

நவோதயா பள்ளிகள்: காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன?

ஆனால், நவோதயா பள்ளிக்கூடங்கள் குறித்து தெளிவான பார்வை இருப்பவர்கள் இதனை எதிர்க்க மாட்டார்கள் என்றும், ஒரு மாவட்டத்திற்கு 20 கோடி ரூபாய் வீதம் 640 கோடி ரூபாய் தமிழகத்திற்கு வராமல் தடுக்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்திருக்கிறார்.

நவோதயா பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு கல்வி கிடைக்கும், கிராமப்புற மாணவர்கள் படிப்பார்கள், மத்திய அரசு இலவசமாக மாணவர்களுக்கு கல்வி வழங்க முன்வரும்போது அதனை ஏன் ஏற்கக்கூடாது என்பது உள்ளிட்ட வாதங்களையே நவோதயா பள்ளிக்கூடங்களை ஆதரிப்பவர்கள் முன்வைக்கிறார்கள்.

உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்பு குறித்து தமிழக அரசு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :