10 வயது சிறுமியை தாயாக்கியது யார்? - டிஎன்ஏ ஆய்வில் புதிய திருப்பம்

10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரின் டிஎன்ஏ மாதிரிகள், அந்த சிறுமி பெற்றெடுத்துள்ள குழந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று வந்துள்ள தடவியல் சோதனைக்கு பின்னர், இது தொடர்பான வழக்கை இந்திய போலீஸார் மீண்டும் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

சிறுமி

பட மூலாதாரம், iStock

இந்த சிறுமி கருக்கலைப்பு செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டதால், கடந்த மாதம் அவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

இந்த 10 வயது சிறுமி தான் கருவுற்றிப்பது பற்றி அறியாமல் இருந்தார். அவருடைய வயிற்றில் கல் இருப்பதால்தான் வீக்கம் காணப்படுவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்ருந்தது.

கடந்த ஏழு மாதங்களில் பலமுறை தன்னுடைய மாமா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இந்த சிறுமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

40 வயதுகளில் இருக்கின்ற குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளும் சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறார். சிறையில் இருக்கின்ற இவர் இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இந்த சிறுமி பெற்றெடுத்த குழந்தையின் டிஎன்ஏ மாதிரி, குற்றம் சாட்டப்பட்டவரோடு பொருந்தாததால், இந்த சிறுமி பிறரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தன் மீதான குற்றங்களை மறுக்கவில்லை என்று இந்த சிறுமியின் தந்தை முன்னதாக பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

இந்த சிறுமியின் மாமா குற்றஞ்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளார் என்று போலீஸ் கூறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

"இதுவரை வேறு எந்த சாத்தியக்கூற்றையும் யாரும் எண்ணவில்லை. இந்த சிறுமி காணொளி உரையாடல் மூலம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். அதில், தன்னுடைய மாமாவை தெளிவாக பெயர் சொல்லி தெரிவித்திருக்கிற இந்த சிறுமி, தன் மீது நடத்தப்பட்ட துஷ்பிரயோக உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்" என்று இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் புதன்கிழமை பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்,

தாங்கள் வேறு யாரையும் சந்தேகப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இந்த வழக்கை விசாரிப்போரிடம் தெரிவித்திருக்கும் நிலையில், இந்த வழக்கு மிக வினோதமான திருப்பத்தை சந்தித்திருக்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

போலீஸ் மற்றும் உளவியல் நிபுணர்கள் இந்த 10 வயது சிறுமியிடம் பேசுவதற்கு மீண்டும் அந்த குடும்பத்தை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

டிஎன்ஏ அறிக்கையில் தவறுகள் இல்லை என்று உறுதி செய்யும் வகையில், தடவியல் சோதனைகளை மீளாய்வு செய்ய கேட்டுக்கொள்ள இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி பஞ்சாபி சேவையிடம் கூறியிருக்கிறார்.

இந்த 10 வயது சிறுமி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதை தெரிவிக்க, பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருந்தது ஜூலை மாதத்தின் நடுவில் கண்டறியப்பட்டது.

கருவை கலைப்பது இந்த சிறுமிக்கு மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர் அமர்வு ஒன்று பரிந்துரைத்ததை தொடர்ந்து, அவர் கருத்தரித்து அதிக மாதங்கள் ஆகிவிட்டதை அடிப்படையாக வைத்து, கருக்கலைப்பு செய்ய கோரியதை சண்டிகரிலுள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒன்று மறுத்துவிட்டது. பின்னர், இதே காரணத்தை வைத்து உச்ச நீதிமன்றமும் கருவை கலைக்க அனுமதி மறுத்துவிட்டது.

பிறக்கும் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என்று இந்த சிறுமியின் பெற்றோர் கூறிவிட்டதால், குழந்தைகள் நலவாழ்வு இல்லத்தில் இந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை உள்ளது. விரைவில் அது தத்து கொடுக்கப்படும்.

இந்திய மருத்துவமனையில் இத்தகைய மிகவும் இளம் பெண் தாயானதாக இதுவரை கேள்விப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததால், பல வாரங்களாக உலக அளவில் தலைப்பு செய்தியின் இடத்தை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு ஆக்கிரமித்தது.

தாய் உயிர் ஆபத்தில் இருப்பதாக மருத்துவர்கள் சான்றளித்தால் தவிர, 20 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பு செய்ய இந்திய சட்டம் அனுமதிப்பதில்லை.

ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், 20 வாரங்களுக்கு பிறகு தங்களுடைய கர்ப்பத்தை கலைத்துவிட பல புகார்களை நீதிமன்றங்கள் பெற்று வருகின்றன. இதில் பல புகார்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகளாவர்.

கடந்த வெள்ளிக்கிழமை, 32 வாரங்கள் கர்ப்பமாக இருந்த 13 வயதான சிறுமிக்கு, கருவை கலைத்துவிட நீதிமன்றம் அனுமதித்த பின்னர், அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு நாட்களுக்கு பின்னர், அக்குழந்தை இறந்துவிட்டது.

பட மூலாதாரம், AFP

கடந்த மே மாதத்தில், இதே மாதிரியான வழக்கு ஒன்று இந்தியாவின் வடக்கில் ஹரியானா மாநிலத்தில் தொடுக்கப்பட்டது. தன்னுடைய வளர்ப்பு தந்தையால் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறலுக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், கருக்கலைப்பு செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அவர் சுமார் 20 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

சட்டப்பூர்வ காரணங்களுக்காக இந்த சிறுமியர் யாருடைய பெயரும் வெளியிடப்படுவதில்லை.

இந்தியாவில் துஷ்பிரயோகங்கள்

ஒவ்வொரு 155 நிமிடங்களுக்கு ஒருமுறை, 16 வயதுக்கு கீழுள்ள சிறுமி ஒருவரும், ஒவ்வொரு 13 மணிநேரங்களுக்கு ஒ10 வயதுக்கு கீழுள்ள சிறுமி ஒருவரும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர்.

2015 ஆம் ஆண்டு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இந்தியாவில் வாழும் 240 மில்லியன் பெண்களுக்கு 18 வயது ஆவதற்கு முன்னரே திருமணமாகிவிடுகிறது.

அரசால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கலந்து கொண்ட 53.22 சதவீத குழந்தைகள், சில வடிவ பாலியல் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்வோரில் 50 சதவீதத்தினர் அந்த குழந்தைக்கு தெரிந்தவர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் பராமரிப்போராக உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :