ரேஷன் ஸ்மார்ட் அட்டையில் காஜல் அகர்வாலின் புகைப்படம் வந்தது எப்படி?

சரோஜா காஜல் அகர்வால்

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கோமாளி வட்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் பொதுவிநியோக ஸ்மார்ட் அட்டையில் அவரது புகைப்படத்திற்குப் பதிலாக பிரபல நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கேலிசெய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆர்.சி. செட்டிபட்டி, கோமாளிவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. தமிழக அரசு பொதுவிநியோகத் துறையில், தற்போதுவரை பயன்படுத்திவந்த புத்தக வடிவிலான ரேஷன் அட்டையை மாற்றிவிட்டு, ஸ்மார்ட் கார்டுகளை வழங்கிவருகிறது. சரோஜா தன்னுடைய குடும்பத்திற்கான ஸ்மார்ட் கார்டை நேற்று தங்களுடைய பொது விநியோக அங்காடியில் பெறுவதற்காகச் சென்றார்.

அப்போது, அந்தக் கடையின் பொறுப்பாளர் ஸ்மார்ட் அட்டையில் சரோஜாவின் புகைப்படம் மாறியிருப்பதால் அவரது புதிய புகைப்படம் ஒன்றைத் தருமாறு கேட்டிருக்கிறார். இதையடுத்து சரோஜாவின் உறவினர்கள் அந்த ஸ்மார்ட் அட்டையை வாங்கிப் பார்த்தபோது, அதில் சரோஜாவின் புகைப்படத்திற்குப் பதிலாக காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது.

இதனை புகைப்படம் எடுத்து, அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். இந்த விவகாரம் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் கேலியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உடனடியாக சரோஜாவின் குடும்ப அட்டையைத் திரும்பப் பெற்ற அதிகாரிகள் அவரது புகைப்படத்தை மாற்றி புதிய அட்டையை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

ஸ்மார்ட் அட்டையில் சரோஜாவின் புகைப்படத்திற்குப் பதிலாக காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றது எப்படி என ஓமலூரின் தாலுகா வழங்கல் அதிகாரி அருள் பிரகாஷிடம் பிபிசி கேட்டபோது, நுகர்பொருள் வழங்கு துறையால் இந்தப் புகைப்படம் மாற்றப்படவில்லையெனத் தெரிவித்தார்.

"இந்த ஆண்டு ஏப்ரலில் போன் நம்பரை மாற்றுவதற்காக சரோஜா ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதை நான்தான் மாற்றினேன். அதற்குப் பிறகு கடந்த மே மாதம் 28ஆம் தேதி இவருடைய தகவல்களைச் சரிபார்த்தபோது, எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அதற்குப் பிறகுதான் இந்தப் புகைப்படம் மாற்றப்பட்டிருக்கிறது" என்கிறார் அருள் பிரகாஷ்.

தமிழக அரசு நுகர்வோரே தங்களுடைய மொபைல்களில் பயன்படுத்தும் வகையில், TNEPDS என்ற செயலியை வழங்குகிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி, நுகர்வோர் தங்கள் புகைப்படத்தை மாற்ற முடியும் என்கிறார் அருள் பிரகாஷ்.

பிற செய்திகள்:

இந்த ஸ்மார்ட் அட்டை அச்சிடப்படுவதற்கு முன்பாக, சரோஜாவின் குடும்பத்தினரே இதனை மாற்றியிருக்க வேண்டும் என்றும் நுகர்பொருள் வழங்குதுறையின் சார்பில் இந்த மாற்றம்செய்யப்படவில்லை என்றும் கூறுகிறார் அருள் பிரகாஷ்.

இந்தத் தகவலைக் கேட்டதும், தான் அந்தக் கடைக்குச் சென்று நடந்ததை விசாரித்தபோது மாற்றுத் திறனாளியான கடையின் பொறுப்பாளரிடமிருந்து வலுக்கட்டாயமாக சரோஜாவின் உறவினர்கள் இந்த அட்டையைப் பறித்துச் சென்று ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளது தெரியவந்தது என்கிறார் அருள் பிரகாஷ்.

சரோஜாவின் உறவினர்களிடம் கேட்டபோது, அந்தக் குறிப்பிட்ட கடையின் பணியாளர்களை மாற்ற வேண்டுமெனப் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் மாற்றப்படாததால், அதிகாரிகளை அங்கு வரவைப்பதற்காக இதைச் செய்ததாக அவர்கள் கூறினர் என்றும் அருள் பிரகாஷ் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது அரசுக்கு அறிக்கை அனுப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :