போப்பை சந்திக்க செல்லும் ஆயுதப்படையினரால் விடுவிக்கப்பட்ட இந்திய பாதிரியார்

ஏமனில் ஆயுதப்படையினரால் கடத்தி செல்லப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்திய பாதிரியார் ஒருவர் வத்திக்கான் நகரில் போப் பிரான்சிஸை சந்திப்பதற்கு சென்று கொண்டிருக்கிறார்.

போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆயுதப்படையினரால் கடத்தப்பட்டு தற்போது மீட்கப்பட்டுள்ள இந்திய பாதிரியார் டாம் உழுனலில், போப் பிரான்சிஸை சந்திக்க சென்று கொண்டிருக்கிறார்.

முதியோர் இல்லமொன்றில் பணியாற்றிய பாதிரியார் டாம் உழுனலில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடத்தப்பட்டார்.

இந்தப் பாதிரியாரை விடுதலை செய்திருக்கும் செய்தி செவ்வாய்கிழமை வெளியானவுடன், அவருடைய சொந்த ஊரான கேரளாவில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின.

2015 ஆம் ஆண்டு ஏமனில் உள்நாடு போர் தொடங்கியதில் இருந்து பல வெளிநாட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த பாதிரியாரை பாதுகாப்பாக மீட்பதற்கு ஏமன் அரசு உதவியது என்று அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜிகாதி ஆயுதப்படையினர் எடன் நகரிலுள்ள சேரிட்டி இல்லமொன்றை தாக்கியபோது, 58 வயதான இந்த பாதிரியார் டாம் உழுனலில் கடத்தப்பட்டார்.

கொல்கத்தா புனித அன்னை தெரசா நிறுவிய 'மிஷ்னெரி ஆப் சேரிட்டி' துறவற சபையை சேர்ந்த 4 கத்தோலிக்க கன்னியாஸ்திரிக்கள் உள்பட 16 பேர் இந்த ஆயுதப்படையினரின் தாக்குதலின்போது கொல்லப்பட்டனர்.

பாதிரியார் டாம் உழுனலில் விடுதலை செய்யப்பட்டிருப்பது, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற உறுதி செய்யப்படாத தகவலால், பல மாதங்கள் துன்பத்திற்குள்ளாகி இருந்த குடும்பத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியளித்திருக்கிறது.

பட மூலாதாரம், SATHEESH AS

படக்குறிப்பு,

பாதிரியார் உழுனலில் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்ற உறுதி செய்ய முடியாத அறிக்கைகளால், அவரது உறவினர்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வந்துள்ளனர்.

பாதிரியார் டாமின் உறவினரில் ஒருவரான நவிதா எலிசபெத், இந்த விடுதலை செய்தியை "எங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் மகிழ்ச்சிப்பெருக்கு" என்று விவரித்திருக்கிறார்.

பாதிரியாரின் இன்னொரு உறவினரான சனில் ஆபிரகாம், இந்த பாதிரியாரின் விடுதலை செய்தி கிடைத்தவுடன் அந்த கிராமம் முழுவதும் மகிழ்சியை கொண்டாட தொடங்கியுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பாதிரியார் கடத்தப்பட்டபோது, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்கின்ற ஆயுதப்படையினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்பட்டது.

ஆனால். அவர் வீட்டிற்கு பாதுகாப்பாக வந்து சேர்வார் என்று எப்போதும் நம்பிக்கொண்டிருந்ததாக அவரது சொந்த ஊரான ராமாபுரம் கிராம மக்கள் கூறுகின்றனர்.

1989 ஆம் ஆண்டு பாதிரியார் டாம் உழுனலில் சலேசிய துறவற சபையில் சேர்ந்தார். இந்தியாவில் பல இடங்களில் பணியாற்றிய பின்னர். அவர் ஏமன் புறப்பட்டார். ஏமனில் போர் தீவிரமடைந்தபோது, இந்தியாவுக்கு திரும்ப அழைப்புவிடுத்ததைஅவர் ஏற்கவில்லை.

"அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றால், அது மக்கள் பலரது பிரார்த்தனையால்தான். அவர் கடத்தப்பட்டபோது, இந்த குடும்பம் முழுவதும் பெரும் துயரத்திற்குள்ளாகியது. கடந்த 17 மாதங்கள் எங்களுக்கு சோதனை காலமாக இருந்தது. அவருடைய சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக அறிக்கைகளும், காணொளிகளும் வெளிவந்தபோது நாங்கள் மிகவும் மனச்சோர்வடைந்தோம். ஆனால், இன்று நாங்கள் எல்லோரும் கொண்டாட்ட நிலையில் இருக்கின்றோம்" என்று இந்த பாதிரியாரின் உறவினர் வாட்கெல் தாமஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்த பாதிரியாரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுத்துகொண்ட அனைத்து முயற்சிகளுக்காகவும் அரசுக்கு தாமஸ் நன்றி கூறியுள்ளார்.

"அவர் திரும்பி எங்களிடம் வந்து சேர்வதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். செவ்வாய்க்கிழமை அவர் மஸ்கட்டை விட்டு புறப்பட்டு போப் பிரான்சிஸை சந்திக்க ரோம் செல்கிறார் என்பதுதான் எங்களுக்கு கிடைத்த கடைசி தகவல்" என்று தாமஸ் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள் :

ஆப்பிளின் விலை மதிப்புமிக்க ஐஃபோன் X-ல் என்னென்ன வசதிகள் இருக்கின்றன?

காணொளிக் குறிப்பு,

ஐஃபோன் X

தொப்பியைப் 'பறிகொடுத்தார்' போப் பிரான்சிஸ்

காணொளிக் குறிப்பு,

தொப்பியைப் 'பறிகொடுத்தார்' போப் பிரான்சிஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :