மொபைல், மது, நகை வாங்க 25 ஆயிரம் ரூபாய்க்கு மகனை விற்ற தந்தை

  • சந்தீப் சாஹூ,
  • பிபிசி

ஒடிஷாவின் பத்ரக் நகரில் வசிக்கும் ஒருவர் குழந்தையில்லாத தம்பதியினருக்கு தனது ஒரு வயது மகனை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு மொபைல் போன், சில நகைகள் மற்றும் துணிகளை வாங்கிவிட்டு, எஞ்சிய பணத்தில் மது அருந்தியுள்ளார்.

குழந்தை விற்பனை செய்யப்பட்டதை அறிந்த காவல் துறையினர் குற்றம் சாட்டப்பட்ட பாண்டியா முகி, குழந்தையை விற்க தரகு வேலை பார்த்த அண்டை வீட்டுக்காரர் பல்ராம் முகி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மாவட்ட குழந்தை நல வாரியம் குழந்தையை மீட்டு, தாயிடம் ஒப்படைத்துள்ளது.

பாண்டியா முகியும், பல்ராம் முகியும் செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டதாக பிபிசியிடம் போனில் பேசிய பர்தக் காவல்நிலைய கண்காணிப்பாளர் அனூப் சாஹு தெரிவித்தார். நீதிமன்றம் இவர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. தற்போது இருவரும் சிறையில் இருக்கின்றனர்.

மாவட்ட சிறார் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி, தாயும் சேயும் 'புனர்வாழ்வு மையத்தில்' தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறும் அனூப் சாஹூ, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய இறுதி முடிவை மாவட்ட குழந்தை நல வாரியம் எடுக்கும் என்றும் கூறினார்.

"குழந்தையை விற்பனை செய்ததில் அங்கன்வாடி பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. புவனேஷ்வரம் சென்றிருக்கும் அந்த பெண் பத்ரக் திரும்பியதும் கைது செய்யப்படுவார்" என்று அனூப் சாஹூ தெரிவித்தார்.

பத்ரக் டவுன் காவல்நிலைய பொறுப்பாளர் மனோஜ் ராவுத் கூறுகையில், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டங்களின் 370 வது பிரிவு (கடத்தல்), 120 (பி) (குற்றவியல் சதி) மற்றும் சிறார் நீதி சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விபத்தில் தங்களுடைய ஒரே குழந்தையை பறிகொடுத்த சோம்நாத் சேடி என்பவர், குழந்தைக்காக அங்கன்வாடி பணியாளர் ஒருவருக்கு 45 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

படக்குறிப்பு,

மீட்கப்பட்ட குழந்தையுடன் தாய் வர்ஷா

பாண்டியாவிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை வாங்கிய அந்த அங்கன்வாடி ஊழியர், 20 ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்துவிட்டார்.

குழந்தையை விற்க உதவிய பல்ராமுக்கு, தனக்கு கிடைத்த 25 ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் கமிஷன் கொடுத்திருக்கிறார் பாண்டியா.

குழந்தையின் வளமான எதிர்காலத்திற்காகவே குழந்தையை கொடுத்ததாக சொல்கிறார் பாண்டியா. ஆனால், சாலை துப்புரவு பணியில் இருக்கும் பாண்டியா ஒரு குடிகாரர், பணத்திற்காகவே இந்த இழிசெயலை செய்திருப்பதாக அவரை அறிந்தவர்களும், அண்டை வீட்டாரும் சொல்கின்றனர்.

இந்த சம்பவம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது? என சொல்கிறார் பர்தக் சிறார் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி சோஃபியா ஷேக். "தொலைபேசி மூலம் குழந்தை விற்பனை குறித்த தகவல் கிடைத்ததும், விசாரித்து உறுதி செய்துகொண்டு காவல்துறைக்கு தெரிவித்தோம். செவ்வாய்க்கிழமை மாலை, போலீசுடன் சென்று குழந்தையை திரும்பப் பெற்று தாயிடம் ஒப்படைத்தோம்".

குழந்தை விற்பனை பற்றி தாய் வர்ஷாவுக்கு ஒன்றுமே தெரியவில்லை. மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு, குழந்தையை தூக்கிச் சென்றிருக்கிறார் பாண்டியா.

குழந்தையின் தாய் வர்ஷா பிபிசியிடம் கூறுகிறார், "சம்பவத்தன்று என் கணவரும், உறவினர் பல்ராமும் வீட்டுக்கு வந்து, குழந்தையை குளிக்க வைக்கச் சொன்னார்கள். நானும் அதேபோல் செய்தேன். பிறகு குழந்தையுடன் வெளியே சென்றார்கள். திரும்பி வந்தபோது குழந்தை எங்கே என்று கேட்டதற்கு, பத்திரமாக இருக்கிறான் என்று சொன்னார்கள். மொபைல் போனும், எனக்கு கொலுசும் வாங்கி வந்தார்கள். இவைகளை வாங்க பணம் ஏது என்று கேட்டதற்கு பல்ராம் கொடுத்தார் என்று என் கணவர் சொன்னார். ஆனால், அக்கம்பக்கத்து வீட்டார் சொல்லித்தான் குழந்தையை விற்றது எனக்கு தெரிந்தது".

தவறு செய்ததற்காக பாண்டியாவுக்கு தண்டனை கிடைத்தால், உங்கள் எதிர்காலம் என்ன என்று வர்ஷாவிடம் கேட்டதற்கு, "நான் கஷ்டப்பட்டாவது பிழைத்துக் கொள்வேன், ஆனால் என் கணவருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கவேண்டும்" என்று அவர் பதிலளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :