பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து வெடிபொருள் ரயில், கவச வாகனங்கள் மீது ராக்கெட் தாக்குதல்

  • ரெஹான் ஃபஜல்
  • பிபிசி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1965- இல் 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் ஏழாவது பகுதி.

பட மூலாதாரம், PUSHPINDAR SINGH

நான்கு இந்திய விமானங்கள் 100 அடி உயரத்தில், 580 நாட் என்ற வேகத்தில் பறந்து இந்திய எல்லையைக் கடந்தன. பர்க்கியில் இச்சாஹில் கால்வாயை கடந்த பிறகு 30 டிகிரி இடப்புறமாக திரும்பி சென்ற சில நிமிடங்களில் ராய்விண்ட் ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியை அடைந்தன.

ரயில் நிலையத்திற்குள் கனரக வாகனங்கள் மற்றும் கவச வாகனங்கள், வெடிபொருட்கள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று இருப்பதை விமானி லெப்டினன்ட் சி.கே.கே.மேனன் கவனித்துவிட்டார். ரயிலை குறிவைக்கலாம் என்று சக விமானிகளான குல்லார், நேகி மற்றும் பூப் பிஷ்னோய் ஆகியோருக்கு சமிக்ஞை அனுப்பினார் மேனன்.

விமானங்களை தாக்கக்கூடிய துப்பாக்கிகளில் இருந்து தப்பிப்பதற்காக, வேண்டுமென்றே ரயில் நிலையத்தை தாண்டி பறந்தனர். எனவே, ஆயுதங்களையோ, சரக்கு ரயிலையோ இந்திய விமானங்கள் பார்த்திருக்க முடியாது என்று கீழே இருந்த பாகிஸ்தான் தரப்பினர் கருதிவிட்டார்கள்.

ரயில் பெட்டிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன

பட மூலாதாரம், PUSHPINDAR SINGH

படக்குறிப்பு,

தாக்குதலுக்கு தயாரான இந்திய விமானங்கள்

விமானங்கள் ரயில் நிலையத்தை தாண்டி பறந்து சென்றன. ஆனால் தாக்குதலுக்கு தயாராக மீண்டும் திரும்பின. மேனன், துரிதகதியில் டைவ் அடித்து, துப்பாக்கிகளின் தாக்குதலுக்கு இடையில் சரக்கு ரயிலின் எஞ்சினை குறிவைத்தார்.

தாக்க வேண்டிய இலக்கை உறுதிபடுத்திக் கொள்வதற்காக முதலில் துப்பாக்கியால் சுட்ட அவர், பிறகு 100 அடி உயரத்தில் இருந்து பத்து ராக்கெட்டுகள் கொண்டு இலக்கை தாக்கிவிட்டு, விரைந்து வெளியேறினார். எனவே ராக்கெட்டுகள் இலக்கை தாக்கியதா இல்லையா என்று அவருக்கு தெரியாது.

பட மூலாதாரம், PUSHPINDER SINGH

மேனனை பின்தொடந்த குல்லர், சரக்கு ரயிலின் எஞ்சின் மற்றும் மூன்று ரயில் பெட்டிகள் தூக்கி விசப்பட்டதை பார்த்தார். ரயிலின் பிற பெட்டிகளை இலக்கு வைத்து குல்லர் தாக்கியதும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் நிரம்பிய ரயில் பெட்டிகள் வெடித்துச் சிதறின.

குல்லரைத் தொடர்ந்த நேகியும், பிஷ்னோயியும் ரயிலின் பின்புற பெட்டிகளை குறிவைத்து தாக்கினார்கள். ரயிலின் பெட்டிகள் ஒன்றொன்றாக வெடித்துச் சிதறின. சில நிமிடங்களில் ரயிலும், தண்டவாளங்களும் முற்றிலுமாக சேதமடைந்தன.

டாங்கிகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல்

பட மூலாதாரம், USI

படக்குறிப்பு,

பாகிஸ்தான் ரயில் நிலையத்தை இந்திய ராணுவம் தாக்கியது

ரயிலையும், அதிலிருந்த பொருட்களையும் தகர்த்தெறிந்துவிட்டு வெற்றியுடன் திரும்பிய இந்திய விமான ஓட்டிகள், கசூருக்கு அருகே ஆயுதங்கள் கொண்ட வாகன அணியை பார்த்துவிட்டார்கள். மேனனும், குல்லரும் வாகன அணி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் சில டாங்கிகள் சேதமடைந்தன.

பிஷ்னோயி மற்றும் நேகியிடம் ராக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. எனவே கீழே இருந்த வாகனங்களை தாக்க கேனான் துப்பாக்கிகளை பயன்படுத்தினார்கள். குறைந்தது 30 இலகு ரக வாகனங்களை அவர்கள் சேதப்படுத்தினார்கள்.

இதன்பிறகு ரேடியோ மூலம் தகவல்களை இடைமறித்து கேட்டபோது, இந்திய விமானங்களின் தாக்குதல் பாகிஸ்தானுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

பாகிஸ்தானின் டாங்கிகளிடம் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான பீரங்கி குண்டுகள் குறைந்து போனதில் தலா ஒரு டாங்கிக்கு 30 பீரங்கி குண்டுகள் மட்டுமே எஞ்சியதாக தெரிந்தது.

விமானங்களில் குண்டு தாக்குதலின் அடையாளம்

படக்குறிப்பு,

பிபிசி அலுவலகத்தில் ஏர் மார்ஷல் பூப் பிஷ்னோயி மற்றும் ரெஹான் ஃபஜல்

தங்கள் இடத்திற்கு திரும்பிய விமானிகள், விமானத்தின் கீழ்ப்பகுதியில் குண்டுகள் துளைத்த பல ஓட்டைகள் இருந்ததை பார்த்தார்கள்.

"என்னுடைய விமானத்தில் ஐந்து ஓட்டைகள் இருந்தன. அதில் மிகப் பெரிதாக இருந்த ஒன்றில் கையே உள்ளே சென்றுவிடும்" என்று பூப் பிஷ்னோயி பிபிசியிடம் தெரிவித்தார்.

மேனின் விமானத்தின் 'ஸ்பீட் இண்டிகேட்டர்' முழுமையாக தகர்ந்துபோய்விட்டது. விமானங்கள் சேதமடைந்திருந்தாலும், நான்கு விமானிகளும் பத்திரமாக தங்கள் நிலைக்கு திரும்பிவிட்டனர்.

ராக்கெட் மற்றும் வெடிமருந்துகள் இருப்பு தீர்ந்தது

இந்தியாவை நோக்கி முன்னேறி வரும் பாகிஸ்தானிய டாங்கிகளை அழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனவே செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று 7 மற்றும் 27-ஆவது படைப்பிரிவுகள் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

இந்தமுறை குழுவின் தலைவராக இருந்தவர் பூப் பிஷ்னோயி. அவர் அந்த நாள் நினைவுகளை மீட்டெடுத்து பகிர்ந்துக் கொள்கிறார்: "அல்வாராவில் இருந்து கிளம்பினோம். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சென்றடைந்ததும், டாங்கிகள் இருந்த இடத்தை குறிவைத்து 300 மீட்டர் உயரத்தில் இருந்து மூன்று டாங்கிகள் கொண்ட குழுவை ஏழு ராக்கெட்டுகளால் தாக்கியதில் அவை எரிந்ததையும் பார்த்தேன்."

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

1965 யுத்தத்தில் இந்திய விமானப்படை தொடர்பான பல அத்தியாயங்கள் ஜகன் மோகன் மற்றும் சமீர் சோப்ராவின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அஹூஜாவும் ஷர்மாவும் ராக்கெட்டால் டாங்கிகளை தாக்கினார்கள். ராக்கெட்'gகளும், குண்டுகளும் தீரும்வரை இலக்கிற்கு மேலே பறந்து பறந்து தாக்கினார்கள்.

பாரூல்கரின் தோளில் பாய்ந்த குண்டு

தாக்குதலின் இறுதிக்கட்டத்தில் டைவ் அடித்தபோது நான்காம் எண் விமானி டி.கே.பாரூல்கர், விமான எதிர்ப்பு துப்பாக்கியின் குண்டுக்கு இலக்கானார். மற்றொரு குண்டு அவருடைய காக்பிட்டை துளைத்தது.

பட மூலாதாரம், DHIRENDRA S JAFA

படக்குறிப்பு,

1965 ம் ஆண்டு போரில் சிறப்பான பங்களித்த திலீப் பாரூல்கரை சிறப்பிக்கும் விமானப்படை தளபதி அர்ஜன் சிங்

விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைவதை அவர் கவனித்தார். அவரது தோளை ஒரு குண்டு துளைத்தது. மற்றொரு குண்டு அவரது இருக்கையின் தலைப்பகுதியை உரசிக் கொண்டு விமானத்தின் மேற்கூரையை துளைத்தது.

சீறிவந்த குண்டைக் கண்ட பாரூல்கர் தலையை கீழே தாழ்த்தியதால் அவரின் தலையும், உயிரும் தப்பியது. அவர் அதிர்ஷ்டசாலி. விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைந்ததால், காக்பிட்டின் கண்ணாடித்திரை மங்கலானது. வெளியே வான் வழி தெரியவில்லை.

அந்த கணத்தை தற்போதும் பாரூல்கர் மங்காமல் நினைவுகூர்கிறார், "திடீரென்று, வலது கையில் வலியை உணர்ந்தேன், ஆடையில் ரத்தம் வழிந்தது. கையில் ஏற்பட்ட காயத்தைப் பற்றி பிஷ்னோயியிடம் சொன்னால், அவர் என்னை திரும்பிப்போகச் சொல்வார் என்பதால் அப்போது சொல்லவில்லை."

வெளியேறு! வெளியேறு!

தாக்குதல் முடிவடைந்த பின்னர், காயம் ஏற்பட்டதைப் பற்றி பிஷ்னோயி இடம் பாரூல்கர் தெரிவித்தார். இந்திய எல்லைக்கு சென்றதுமே, உடனே துரிதமாக விமானத்திலிருந்து வெளியேறுமாறு பிஷ்னோய் அறிவுறுத்தினார்.

பட மூலாதாரம், PUSHPINDER SINGH

ஆனால் அந்த ஆலோசனையை ஏற்காத பாரூல்கர், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியும் என்று உறுதிபட கூறினார்.

ஒரு கையால் விமானத்தை இயக்க முடியும் என்றாலும், விமானத்தை தரையிறக்கும்போது இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே, அனைத்து விமானங்களும் தரையிறங்கிய பிறகு இறுதியாக பாரூல்கர் தரையிறங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஏனெனில், விமானத்தை சரியாக தரையிறக்குவதில் பாரூல்கர் தோல்வியடைந்து, விமான ஓடுபாதை சேதமடைந்தாலும், மற்ற விமானங்களை இறக்குவதில் சிக்கல் ஏற்படாது என்பதே பாரூல்கர் இறுதியாக தரையிறங்க முடிவு செய்யப்பட்டதற்கு காரணம்.

மோதிய விமானங்கள்

யுத்தத்தில் எந்த நேரத்தில் என்ன நேரிடும் என்பதை யாராலும் கணிக்கமுடியாது. காயமடைந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த பாரூல்கர் விமானத்தை சரியாக தரையிறக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்திருந்த நேரத்தில் எதிர்பாராமல் ஒரு விபத்து நேரிட்டது.

ஷர்மா விமானத்தை தரையிறக்க முற்பட்டபோது, அஹூஜாவின் விமானத்தின் இறக்கையில் மோதிவிட்டார். இறுதியாக விமானத்தை தரையிறக்கிக் கொண்டிருந்த பாரூல்கர் இதனைப் பார்த்து திகைத்துப் போனார்.

பட மூலாதாரம், DEFENCE.PK

மோதப்பட்ட அஹூஜாவின் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான தளத்தின் சுற்றுச்சுவருக்கு அருகே தரையில் மோதி, நெருப்புடன் கூடிய புகையை எழுப்பியது. அஹூஜாவுக்கு விமானத்தில் இருந்து வெளியேற சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

முதலில் பிஷ்னோயியின் விமானம், இரண்டாவதாக மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்த ஷர்மாவின் விமானம், மூன்றாவதாக பாரூல்கரின் விமானம் தரையிறங்கியது.

அரை மயக்கம்

"அதற்குள் நிறைய ரத்தம் வெளியேறிவிட்டது. விமானத்தை தரையில் இறக்குவதற்கு முன்பே மயங்கிவிடுவேனோ என்று அச்சப்பட்டேன். ஆனால், பாதி மயக்கத்தில் இருந்தாலும், கடும் முயற்சியுடன் விமானத்தை தரையிறக்கினேன். ஆடை முழுவதும் ரத்தத்தால் நனைந்துவிட்டது. தயாராக நின்ற ஆம்புலன்சில் ஏற்றி, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள், ஸ்குவார்டன் தலைவர் ப்ருத்வி எனக்கு சிகிச்சையளித்து, தையல்களை போட்டார்."

1965 ஆம் ஆண்டு போரில் பங்கேற்ற திலீப் பாரூல்கர் தற்போது புனேயில் வசித்துவருகிறார். அவர் மேலும் ஒரு சுவராஸ்யமான தகவலை பகிர்ந்துக் கொள்கிறார், "விமானத்தில் இருந்த பாராசூட் குண்டுகளால் துளைக்கப்பட்டு சேதமாகியிருந்தது பிறகுதான் தெரியவந்தது".

"அதாவது, மோசமாக காயமடைந்திருந்த நான் இந்திய எல்லைக்குள் வந்த பிறகு பாராசூட் உதவியால் தரையிறங்க முடிவு செய்து 'எஜெக்ட்' பட்டனை அழுத்தியிருந்தால், பாதுகாப்பாக இறங்குவதற்கு பதிலாக வேகமாக தரையை நோக்கி வரும் கனமான கல்லைப் போன்று தரையில் வந்து மோதியிருப்பேன். இப்போது இங்கு உங்களிடம் பேசிக்கொண்டிருக்கமாட்டேன்".

பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் பாராசூட்டே அவரின் உயிருக்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும்!

பட மூலாதாரம், DILIP PARULKAR

படக்குறிப்பு,

திலிப் பாருல்கார்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் பிரிந்த காதல்!

காணொளிக் குறிப்பு,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பிரிவினை ஒரு இளஞ்ஜோடிகளின் காதலையும் பிரித்தது.

பிற செய்திகள்

காணொளிக் குறிப்பு,

ஐஃபோன் X

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :