ரோஹிஞ்சாக்கள்: நிலை தடுமாறுகிறதா இந்தியா?

  • எம் ஏ பரணீதரன்
  • பிபிசி தமிழ்
getty images

பட மூலாதாரம், Getty Images

மியான்மரில் தப்பித்து சட்டவிரோதமாக வங்கதேசத்திலும் இந்தியாவிலும் குடியேறி வரும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாமல் இந்தியா தடுமாறுவதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

வங்க தேசம், மியான்மர் ஆகிய நாடுகள் இடையே நல்லுறவை இந்தியா பேணி வருகிறது.

இந்நிலையில் ரோஹிஞ்சாக்களை அகதிகளாக அங்கீகரிப்பதா அல்லது சட்டவிரோத குடியேறிகளாகக் கருதி அவர்களைத் திருப்பி அனுப்புவதா என்ற நிலைப்பாட்டை எடுப்பதில் இந்தியா குழப்பம் அடைந்துள்ளதாக ராஜீய பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ரக்கைனில் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மியான்மர் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 12 அதிகாரிகளை ரோஹிஞ்சா முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த கடும்போக்குவாத குழுவினர் கொன்றனர்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு நூற்றுக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், கொடூரமாக வெட்டப்பட்டும் கொல்லப்படுவதாக உயிர் தப்பி வங்க தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிஞ்சாக்கள் கூறுகின்றனர்.

ரக்கைனில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்படுவதை அங்கு களத்தில் ஆய்வு செய்த பிபிசி செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

இந்த விவகாரத்தில் ரோஹிஞ்சாக்களுக்கு எதிரான ராணுவ பிரசாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு இந்தோனேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் மியான்மருக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த வாரம் இந்திய பிரதமர் நரநே்திர மோதி சென்றிருந்தார்.

ஆனால், மியான்மர் தலைவர் ஆங் சாங் சூச்சியுடன் ரோஹிஞ்சாக்கள் விவகாரத்தை மிகவும் அழுத்தமாக மோதி பேசவில்லை என்று ராஜீய பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மோதி மெளனத்துக்கு என்ன காரணம்?

அப்சர்வர் ரிசர்ச் ஃபவுன்டேஷனில் தென்கிழக்கு ஆசிய உறவுகளுக்கான மூத்த ஆய்வாளர் ஒய். ஹோம் இது பற்றி கூறுகையில், "கிழக்கு நோக்கும் கொள்கையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி முன்னெடுத்து, தமது தலைமையை கிழக்காசிய நாடுகள் மத்தியில் நிலைநாட்டி வருகிறார்" என்றார்.

வங்காள விரிகுடாவை பொறுத்தவரை கடல் வாணிபம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தக மேம்பாடு போன்றவற்றில் முக்கிய பங்களிப்பாளராக இருக்கும் மியான்மரின் ஆதரவு இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.

அதனால் ரோஹிஞ்சாக்கள் விவகாரத்தில் மியான்மருக்கு அனுசரணையாக பிரதமர் நரேந்திர மோதி முடிவு எடுப்பார் என்கிறார் ஹோம்.

சில தினங்களுக்கு முன்பு, இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிஞ்சாக்களை மீண்டும் வங்கதேசத்துக்கோ மியான்மருக்கோ திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

அவரது கருத்தை ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹூசைன் விமர்சித்துள்ளார்.

ஆனால், ரோஹிஞ்சாக்களை திருப்பி அனுப்புவது தொடர்பான அதிகாரபூர்வ முடிவை இன்னும் இந்திய அரசு எடுக்கவில்லை.

ஐ.நா.வுக்கு இந்தியா பதில்

இந்நிலையில் சயீத் ரா அத் அல் ஹூசைனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ராஜிவ் கே. சந்தர் செவ்வாய்க்கிழமை பேசினார்.

அப்போது, "சட்டவிரோத குடியேறிகள் பற்றி மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் மிகவும் கவலை கொண்டுள்ளது. அவர்களால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்" என்றார் அவர்.

"சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை, "இரக்கமில்லாத செயல்" என தவறுதலாக பொருள் கொள்ளக் கூடாது" என்றும் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் தெளிவுபடுத்தினார்.

வங்க தேசத்தின் பயம் என்ன?

அல் கய்தா, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினர், சட்டவிரோதமாக குடியேறும் ரோஹிஞ்சா முஸ்லிம்களை குறி வைத்து தங்கள் குழுக்களில் சேர்ப்பதாக வங்க தேசம் கருதுகிறது.

வங்கதேச வெளியுறவுத் துறை உயரதிகாரி முகம்மது ஹுமாயுன் கபீர், "தற்காலிக ஏற்பாடாக எங்கள் நாட்டில் ரோஹிஞ்சாக்கள் தங்குவதில் பிரச்னை இல்லை. ஆனால், மீண்டும் சொந்த நாடான மியான்மருக்கே அவர்கள் திரும்புவதே நல்லது" என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

மொத்தத்தில் ரோஹிஞ்சாக்கள் விவகாரத்தில் இருதலை கொள்ளி எறும்பு போல இந்தியா மாட்டிக் கொண்டுள்ளது என்று பிபிசி தமிழிடம் அப்ரசர்வர் ரிசர்ஸ் ஃபவுண்டேஷன் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோயீதா பட்டாச்சார்யா கூறினார்.

வங்க தேசம் உள்நாட்டு அரசியல், மியான்மர் விவகாரங்களுக்கான ஆய்வாளரான இவர், "ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் வங்கதேசத்துக்கு சாதகமான நிலையை எடுக்க இந்தியா தயக்கம் காட்டினால் அந்நாட்டுக்கு உதவ சீனா தயாராக இருக்கிறது" என்கிறார்.

"மியான்மருடனான கடும் போக்கையும் மோதலையும் தீவிரமாக்குவதற்கு அத்தகைய ராஜீய நடவடிக்கை, சீனாவுக்கு பல வழிகளில் உதவும்" என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

"குறிப்பாக, எல்லை விவகாரங்களில் வங்க தேசம் மட்டுமின்றி இந்தியாவும் பல வழிகளில் சீனாவின் எல்லை தாண்டிய அத்துமீறல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்" என்கிறார் அவர்.

"அதனால்தான் ரோஹிஞ்சாக்கள் விவகாரத்தில் மியான்மருக்கு அனுசரணையாகவும் வங்கதேசத்துக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் தடுமாற்றத்துக்கும் இதுவே காரணம்" என்று அவர் குறிப்பிட்டார்.

"ரோஹிஞ்சாக்கள் விவகாரத்தை, "ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்னை" என பார்க்காமல் "ஒரு இன அழிப்புக்கான முயற்சி" ஆகக் கருதி சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும். இதற்கு சர்வதேச அழுத்தங்கள் மூலமே தீர்வு காண முடியும்" என்கிறார் ஜோயீதா.

ஜம்மு நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹுனர் குப்தா தொடர்ந்துள்ள வழக்கில், ஜம்மு காஷ்மீரில் சுமார் ஏழாயிரம் ரோஹிஞ்சாக்கள் சட்டவிரோதமாகக் குடியேறி தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்களை நாடு கடத்த உத்தரவிடுமாறும் கோரியுள்ளார்.

அதே நீதிமன்றத்தில் ரோஹிஞ்சாக்கள் சார்பில் வழக்கறிஞர் கோலின் கான்ஸ்லேவ்ஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

இது குறித்து பிபிசி தமிழிடம் கோன்ஸ்வேல்ஸ் கூறுகையில், "தாயகத்தில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பொருளாதார காரணங்களால் பிழைப்புக்காக வருவது (வங்க தேசத்தவர்கள்), உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தாயகத்தில் இருந்து தப்பித்து மற்றொரு நாட்டில் தஞ்சம் அடைவது (ரோஹிஞ்சாக்கள்) என குடியேறிகள் இரு வகைப்படுவர்" என்றார்.

அந்த வகையில் மியான்மரில் இருந்து உயிரைக் காக்க வந்த ரோஹிஞ்சாக்களை அகதிகள் ஆகக் கருதி ஆதரிக்க வேண்டியது இந்தியாவின் கடமை. இந்திய அரசியலமைப்பின் 21-ஆவது விதியின்படி இந்தியர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைவரையும் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்று கோன்ஸ்லேவ்ஸ் கூறுகிறார்.

"அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முந்தைய காலங்களில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து ரோஹிஞ்சா விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு முடிவு எடுக்க வேண்டும்" என்கிறார் வழக்கறிஞர் கோலின் கோன்ஸ்லேவ்ஸ்.

முஸ்லிம் நாடுகள் ஆதரவு

ரோஹிஞ்சாக்கள் மீதான நடவடிக்கையை முஸ்லிம்கள் மீதான தாக்குதலாகக் கூறி, அதற்கு சக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை வங்கதேசம் கோரி வருகிறது.

அதன் விளைவாக, துருக்கி, இரான், இராக் போன்ற நாடுகள் ரோஹிஞ்சாக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்துள்ன.

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரோஹிஞ்சா முஸ்லிம்களிடம் கடுமை காட்டினால், அது தேர்தலின்போது ஆளும் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிர்வினையாகி விடும் என்ற அச்சம் ஆளும் அரசிடம் உள்ளது.

தற்போதைய நிலையில், மியான்மரின் ரக்கைனில் சண்டை நிறுத்த பகுதியை வரையறுக்க வேண்டும் என்ற ஒரு வரைவு யோசனையை வங்க தேசம் தயாரித்துள்ளது.

அந்த யோசனைக்கு மியான்மரை இணங்கச் செய்யும் முயற்சியை அந்நாட்டுடன் நட்பு பாராட்டி வரும் இந்தியா, ஜெர்மனி போன்றவை முன்னெடுக்க வேண்டும் என வங்க தேசம் விரும்புகிறது.

இந்த விஷயத்தில் மியான்மருக்கு ஆதரவாக நிற்பதா? வங்க தேச யோசனை குறித்து மியான்மரிடம் மத்தியஸ்தம் செய்வதா? ரோஹிஞ்சாக்களை அகதிகளாக ஏற்பதா வேண்டாமா? போன்றவற்றில் தனது நிலையை ஐ.நா. சபையில் தெளிவுபடுத்த முடியுமா போன்ற பல கேள்விகள் இந்தியாவுக்கு உள்ளதாக ராஜீய பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இம்மாதம் மூன்றாவது வாரத்தில் ஐ.நா. பொதுச் சபையின் கூட்டம் நடைபெறவுள்ளதால் அப்போது இந்தியா தனது நிலையை உலகுக்கு அறிவிக்கும் என ராஜீய பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிற செய்திகள் :

மனம் திறந்து கட்டியணைக்கும் பிரதமர் மோதி

காணொளிக் குறிப்பு,

மனம் திறந்து கட்டியணைக்கும் பிரதமர் மோதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :