எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது 20-ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது செப்டம்பர் 20ஆம் தேதிவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Image caption சென்னை உயர் நீதிமன்றம்

அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், தனக்கு ஆதரவாக 19 முதல் 21 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருப்பதால், எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது; ஆகவே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டுமெனக் கோரி தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் தரப்புக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தினகரனுக்கு ஆதரவான 19 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அரசுக்கு நம்பிக்கை இருப்பதாகக் காண்பிக்க முயற்சி நடப்பதாக தெரிவித்தார்.

அரசுத் தரப்பில் ஆஜரான விஜய் நாராயணன், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுனருக்கு உத்தரவிட முடியாது என்று கூறினார். ஆளுனர் மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தருவதற்கு தங்களுக்கு அவகாசம் வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். அடுத்த புதன் கிழமையன்றுதான் ஆளுனர் தரப்பின் கருத்தை அறிந்து தர முடியுமென்றும் அவர் கூறினார்.

அதுவரை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது என்ற உத்தரவாதத்தை தலைமை வழக்கறிஞரால் தர முடியுமா என நீதிபதி துரைசாமி கேட்டபோது, விஜய் நாராயணன் தன்னால் அந்த உத்தரவைத் தர முடியாது என்று கூறினார்.

இதையடுத்து அடுத்த புதன்கிழமைவரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது சட்டப்பேரவைச் செயலருக்கு இடைக்கால உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.

இதற்கிடையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமைக் குழு நடவடிக்கை விவகாரமும் நீதிபதி துரைசாமி முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு அக்டோபர் மாதம் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை தி.மு.கவின் 21 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டில் குட்கா, மாவா போன்ற போதைப்பொருள் கலக்கப்பட்ட பாக்கு வகைகளை விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பது குறித்தும் அதற்கு காவல்துறையினர் ஆதரவாக இருப்பது குறித்தும் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பேசினர்.

ஜூலை 19-ஆம் தேதி இது தொடர்பாக அவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர்கள், இதற்கு ஆதாரமாக அந்தப் பாக்குகளை சட்டப்பேரவையில் காண்பித்தனர். ஆனால், தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்திருப்பதால், அவையின் மாண்பு குலைவதாகக் கூறிய சபாநாயகர் தனபால், விவகாரத்தை உரிமைக் குழுவுக்குப் பரிந்துரைத்தார்.

ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமைக்குழு, இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் சென்னை உயர்நீதின்றத்தை அணுகினர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :