வெளியேற்றம்: தமிழ் நாட்டில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் உணர்வுகள் என்ன?
மியான்மரில் சிறுபான்மை ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்முறையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த ரோஹிஞ்சா அகதிகளை இந்தியா வெளியேற்றும் என்று இந்திய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த கருத்து பற்றிய பெரிய அளவு விழிப்புணர்வு இல்லாத நிலையிலேயே சென்னையில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் வாழ்கிறார்கள்.

பர்மா என் தாய்நாடு...
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சுசியின் மியான்மாரிலிருந்து, வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் சிறு எண்ணிக்கையிலான, ரோஹிஞ்சா இன அகதிகள் இங்கு பாதுகாப்பாகவே உணர்வதாகக் கூறுகிறார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நெருங்கிய சொந்தங்களுடன் சென்னை வந்துசேர்ந்த 18 ரோஹிஞ்சா அகதி குடும்பங்கள் கேளம்பாக்கம் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
47 குழந்தைகள் உட்பட 94 நபர்கள் அடிப்படைத் தேவைகளுடன் நலமுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
மியான்மாரில் உள்ள ரோஹிஞ்சா இனத்தவர்களுக்கு நேரும் பிரச்சனைகளை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பார்ப்பதாகவும், அது அவர்களுக்கு கவலைதருவதாக கூறுகிறார்கள்.
தமிழகத்தில் தஞ்சமடைந்த ரோஹிஞ்சாக்கள்
இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்துவரும் ரோஹிஞ்சாக்களை வெளியேற்றுவது குறித்து இந்திய உள்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு பேசியுள்ளார் என்று குறிப்பிட்டபோது அந்த அறிவிப்பைப் பற்றிக் கேள்விப்படவில்லை என்று தெரிவித்தனர்.
நாங்க நல்ல வாழமுடியாதா?
''எல்லா இடங்களிலும் எங்களை விரட்டுகிறார்கள். இந்தச் சமயத்தில் தாய் போல எங்களை அரவணைத்துக் கொண்டது தமிழ்நாடுதான்.
இங்கே இருக்கும்வரை எங்களுக்கு பயமில்லை,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முகமது யூசப் (24).
40 நாளான குழந்தையுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றபோது குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்? இந்தியாவுக்குப் போ என்று முகவர் ஒருவர் சொன்னதால் இந்தியா வந்ததாகக் கூறுகிறார் யூசப்.
''கொல்கத்தாவில் ஹௌரா ரயில் நிலையத்தில் வேறு ரயிலுக்கு எங்களை மாற்றிவிட்ட முகவர் எங்கு சென்றார் என்று எங்களுக்குத் தெரியாது. ரயில் நின்ற இடம் சென்னை சென்ட்ரல். எங்களை அகதிகள் என்று அடையாளம் கண்ட உள்ளூர் அதிகாரிகள் எங்களை ஐநா மனிதஉரிமை அலுவலர்களிடம் பேசவைத்தனர்.,'' என்றார் அவர்.
தமிழ் பயிலும் ரோஹிஞ்சா குழந்தைகள்
தமிழக அரசு அளித்த வெள்ள நிவாரண கட்டிடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐநா உதவியுடன் ரோஹிஞ்சாக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
''முதலில் எங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துக்கொண்டார்கள்.
அதுவே எங்களுக்கு நிம்மதியைத் தந்தது. மருத்துவ முகாம் நடத்தினார்கள், அட்டை கம்பனிகள், தனியார் நிறுவனங்கள் குப்பை சேகரிக்கும் வேலைகொடுத்தார்கள், சம்பளம் கொடுக்கிறார்கள்,'' என்று நிம்மதி பெருமூச்சுடன் சொல்லிமுடித்தார் யூசப்.
தற்போது பத்தாம் வகுப்பு படிக்கவேண்டிய நூர்கயீதா உள்நாட்டுப் பிரச்சனையால் பள்ளிக்கூடம் போகமுடியவில்லை என்றும் தற்போது தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்துவருவதாகக் கூறினார்.
''நாங்கள் சென்னையில தினமும் பள்ளிக்கூடம் போறோம். எங்க ஊரில ரக்கையின்ல படிக்க போகமுடியாது.
எங்களை அடிப்பாங்க. தீடிர்னு சுடுவாங்க..பயமா இருக்கும், பெரிய அக்காகங்களை நாசம்பண்ணிடுவாங்க,'' என பள்ளிக்கூடம் செல்ல முயன்ற சமயத்தில் நேரந்தவற்றை நினைவு கூர்ந்தார் பள்ளிமாணவி நூர்கயீதா.
''எங்களுக்கும் படிக்கனும், வேலைக்கு போகணும்னு ஆசை இருக்காதா? எங்க அம்மா, அப்பாவோட, சொந்தகாரங்களோட சந்தோசமா இருக்கமுடியாதா? நாங்க நல்ல வாழமுடியாதா?,'' என்று கேட்டார்.
தங்குவதற்கு இடம், பள்ளிக்கூடம் என அத்தியாவசிய தேவைகள் அகதியாக நிற்கும் வெளிநாட்டில் அளிக்கப்படும்போது ஏன் அவை தாய்நாட்டில் தனக்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதற்கு நூர்கயீதா விடைகேட்கிறார்.
பள்ளியில் படிக்கும் சிறார்கள் இங்கு பல மதத்தவர்களும் ஒற்றுமையுடன் இருப்பதைப் பார்த்து தங்களது நாட்டில் இந்த ஒற்றுமை ஏற்படாதா என்று ஏங்குகிறார்கள்.
''நாங்க மட்டும் ஏன் அழுதுட்டே இருக்கனுமா?''
இன்னும் மழலை குறையாத இரண்டாம் வகுப்பு மாணவன் முகமது ஷகீப் மியான்மாரில் ரோஹிஞ்சாகளின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்குமுறையை கண்ணில் பார்த்ததுபோல் சொல்கிறார்.
எங்கே செல்லும் இந்தப் பாதை...
''இருபது நாட்களுக்கு முன்னால என்னோட அம்மாவோட, அண்ணா தங்கச்சிக்கிட்ட பேசினேன்.
அவுங்க வீட்ட விட்டு வெளிய வரமுடியாம அங்கேயே இருக்காங்க. சாப்பாடு கூட சாப்பிட முடியல.. கதவு மூலையில நின்னுட்டு இருக்காங்க..நாங்க பேசும்போது ஒரே குண்டுசத்தம். வெளியே போனா புத்திஸ்டுங்க அடிக்கறாங்க..'' என்றார் அவர்.
''தொடர்ந்த ஷகீப், ''வெளிநாட்டுல எங்க மக்கள் நல்ல இருக்காங்க.. எங்க ஊரில ஏன் இப்படி பண்றாங்க? இன்னும் 15 நாள்ல எங்க ஊரில இருந்த எல்லாருமே செத்துடுவாங்கலாம்.
என்னோட அம்மாகூட அழுவாங்க..மத்தவங்க சந்தோசமா இருப்பாங்க. நாங்க மட்டும் ஏன் அழுதுட்டே இருக்கனுமா?'' என்றார்.
மியான்மாரில் அமைதி பிறக்கவேண்டும் என்று பெரியவர்கள் தினமும் தொழுகை நடத்துகிறார்கள்.
தங்களது சொந்த ஊரில் வாழவேண்டும் என்று விருப்பம் இருந்தாலும், அதைவிட தங்கள் இனத்தின் மீது நடத்தப்படும் வன்முறை அவர்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்