இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அக்கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கூறியுள்ளது.

இரட்டை இலை

பட மூலாதாரம், BHASKER SOLANKI

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. சசிகலா தலைமையிலும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் இரு அணிகளாகப் பிரிந்ததால் சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு இடைத்தேர்தல் நெருங்கியபோது, அ.இ.அ.தி.மு.க. என்ற பெயரையும் அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தையும் யாரும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இரு தரப்பும் கட்சியில் பெரும்பான்மை தொண்டர்கள் தங்கள் வசம் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தனர். இப்போது, இருதரப்பும் இணைந்துவிட்டாலும், டிடிவி தினகரன் தனியாகச் செயல்பட்டுவருகிறார்.

இந்த நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''அ.தி.மு.கவில் நிர்வாகக் குழுவின் தேர்தலை நடத்தி அதில் வெற்றிபெறும் அணியிடம் இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என கேட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்புமே ஆயிரக்கணக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்திருப்பதால் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக தேர்தல் ஆணையம் தரப்பு தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியில் சின்னம் குறித்த பிரச்சனை ஏற்பட்டபோது, விரைவில் முடிவெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டினர். இரு தரப்பும் ஆவணங்களைத் தாக்கல்செய்வதற்கு இறுதி நாளை அறிவித்துவிட்டு, சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்க வேண்டுமென கூறினர்.

இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அடுத்த வாரத்திற்குள் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்தார். இதற்காக தாங்கள் தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க போவதில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையில், சபாநாயகர் தனபாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து விவாதித்தனர். தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேருக்கு கொறடா உத்தரவை மீறினார்கள் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் விவாதித்திருக்கலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்த புதன்கிழமை வரை நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :