நேபாள எல்லையில் தேடப்படும் ராம் ரஹீமின் தத்துப் பெண்

  • சமீராத்மஜ் மிஷ்ரா
  • பிபிசி
தந்தையும் வளர்ப்பு மகளும்...

பட மூலாதாரம், HONEYPREETINSAN.ME

ஹரியாணா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அவருடன் இருந்த அவரது வளர்ப்பு மகள் எனச் சொல்லப்பட்ட ஹனிப்ரீத் ஹன்சான் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை ஒட்டியிருக்கும் நேபாள எல்லைப் பகுதியில் ஹனிப்ரீத் ஹன்சானை போலீசார் தேடிவருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹனிப்ரீத்தை தேடி ஹரியானா மாநில போலிசார், உத்தரபிரதேச மாநிலம் லகீம்புர் கீரிக்கு சென்றிருந்தனர். இந்த மாதம் முதல் தேதியன்று ஹனிப்ரீத்துக்கு எதிராக தேடுதல் அறிவிக்கை வெளியிட்டனர்.

இந்திய எல்லைப்பகுதிகளில் உள்ள பல மாவட்டங்களில் ஹனிப்ரீத்தின் புகைப்படம் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் சொனெளலி எல்லைப்பகுதி வழியாக பயணிக்கும் பெண்களை தீவிரமாக கண்காணிப்பதுடன், சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஹனிப்ரீத்தை தேடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மஹாராஜ்கஞ்ச் காவல்துறை அதிகாரி ஆஷுதோஷ் சுக்லா கூறுகிறார்.

பட மூலாதாரம், GAURAV TRIPATHI

படக்குறிப்பு,

சோதனை...

ஹனிப்ரீத் நேபாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக புலனாய்வு முகமைகள் எச்சரிக்கை விடுத்திருப்பதால், நேபாள எல்லையை ஒட்டிய பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

நேபாள எல்லைப் பகுதியை ஒட்டியிருக்கும் கபிலவஸ்து, மோஹானா, ஷோஹர்த்கட், லோடன் மற்றும் தேவ்ரூவா ஆகிய காவல்நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சித்தார்த் நகர் காவல்துறை தலைமை அதிகாரி சத்யேந்த்ர குமார் கூறுகிறார்.

சொனெளலி எல்லைப் பகுதியை கடக்கும் பெண்கள் அனைவரும், அதிலும் குறிப்பாக 30 முதல் 35 வயதுக்குப்பட்ட பெண்கள் தீவிர பரிசோதனைக்கு உள்ளாவதாக, மகாராஹ்கஞ்சில் வசிக்கும் உள்ளூர் பத்திரிகையாளர் கெளரவ் திரிபாதி கூறுகிறர்.

பட மூலாதாரம், GAURAV TRIPATHI

"முஸ்லிம் போல் வேடமிட்டு ஹன்ப்ரீத் தப்பி சென்றுவிடக்கூடாது என்பதால், காவல்துறை பெண் அதிகாரிகள், முஸ்லிம் பெண்களின் புர்காவை அகற்றி சோதனை செய்கின்றனர்" என்கிறார் அவர்.

சி.சி.டி.வி கேமராக்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மஹாராஜ்கஞ்ச், லகீம்புர் கீரி, பஹ்ராயிச் ஆகிய மாவட்டஙகளிலும் ஹனிப்ரீத்தை தேடும் வேட்டை தொடர்கிறது.

இந்திய-நேபாள எல்லை, சுமார் 600 கிலோமீட்டர் அளவு தூரத்திற்கு பரந்து விரிந்திருக்கிறது. பீலிபீத், லகீம்புர் கீரீ, பஹ்ராயிச், ஷ்ராவஸ்தி, பல்ராம்புர், சித்தார்த்நகர், மஹாராஜ்கஞ்ச் ஆகிய ஏழு மாவட்டங்கள் நேபாள எல்லையோரத்தில் அமைந்துள்ள மாவட்டங்கள்.

கடந்த சில தினங்களாக, தலைமறைவாக இருக்கும் ஹனிப்ரீத்தை, போலிசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :