பெரியார், அண்ணா பெயர்கள் மீண்டும் ஓங்கி ஒலிப்பதற்குக் காரணம் என்ன?

  • முரளீதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
பெரியார், அண்ணா

பட மூலாதாரம், ARUNKUMARSUBASUNDARAM

செப்டம்பர் மாத மத்தியில், சி.என். அண்ணாதுரை, பெரியார் ஆகியோரின் பிறந்த நாட்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக வலைதளங்களில் அவர்களைக் குறித்த நேர்மறையான கருத்துகளும் விவாதங்களும் நடக்க ஆரம்பித்துள்ளன. தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்றிவிடும் என்ற எண்ணம் இதற்குக் காரணமா?

தி.மு.க. துவங்கப்பட்ட தினம் (செப்டம்பர் 17), பெரியார் பிறந்த நாள் (செப். 17), அண்ணா பிறந்த நாள் (செப். 15) ஆகிய மூன்று தினங்களையும் குறிக்கும் வகையில் முப்பெரும் விழா என்ற பெயரில் 1970-களின் பிற்பகுதியிலிருந்து மிகப் பெரிய விழா- பொதுக்கூட்டம் ஆகியவற்றை தி.மு.க. நடத்தி வருகிறது.

அந்தத் தருணத்தில் பாரதிதாசன், பெரியார், அண்ணா ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பிறகு கலைஞர் கருணாநிதி விருதும் அறிமுகப்படுத்தப்பட்டது.

கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருந்தவரையில், அவர் இந்த விழாவில் கலந்துகொள்வது வழக்கமாக இருந்தது. தி.மு.கவின் முக்கியமான விழாக்களில் இதுவும் ஒன்றாக இருந்துவந்தது.

கடந்த ஆண்டு, செப்டம்பர் 18ஆம் தேதி நடந்த முப்பெரும் விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "நாளைக்கு என்னவாகும் என்று கேட்கிறார்கள். நாளைக்கும் இன்று போலவே இருக்கும். நான் இல்லாதுபோனாலும்கூட, இந்த இயக்கத்தை அசைக்க முடியாது. கட்சிக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்துவிட்டுத்தான் போவேன்" என்று குறிப்பிட்டார்.

ஆனால், தற்போது கருணாநிதி உடல் நலம் குன்றியிருக்கும் நிலையில், அவர் கலந்துகொள்ளாத முதல் முப்பெரும் விழாவை தி.மு.க. தற்போது நடத்திமுடித்துள்ளது.

‘திண்டுக்கல்லில் செப்டம்பர் 16ஆம் தேதி நடந்த இந்த விழாவில், தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் அண்ணா, பெரியார் ஆகியோரது பிறந்த நாட்களை ஒட்டி, அவர்களைப் பற்றிய நேர்மறையான கருத்துக்களும் விவாதங்களும் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அதிகம் காணப்பட்டன.

முன்னெப்போதையும்விட அதிக அளவில் தொலைக்காட்சிகளில் இந்த இரு தலைவர்களைப் பற்றிய குறும்படங்கள், சிறிய வாழ்கை வரலாற்றுத் தொகுப்புகள் ஒளிபரப்பாகின.

"வலதுசாரி சக்திகள், பா.ஜ.க. போன்ற கட்சிகள் கழகங்கள் இல்லாத தமிழகம் என்று பேசிவரும் நிலையில், நாம் பெரியாரைப் பற்றிப் பேசியாக வேண்டிய நிலை இருக்கிறது. வழக்கமாக திராவிட இயக்கங்களை விமர்சிப்பவர்கள்கூட, தற்போது வலதுசாரி அபாயம் ஏற்பட்டிருப்பதாகக் கருதி, அண்ணாவைப் போற்றுவதோடு, மாநில சுயாட்சி போன்ற தத்துவங்களின் முக்கியத்துவம் குறித்தும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்" என்கிறார் எழுத்தாளரும் மொழியுரிமை செயல்பாட்டாளருமான செந்தில்நாதன்.

அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியன்று, சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய குறிப்புகளும் அவரது எழுத்துகளும் புகைப்படங்களும் முன்னெப்போதையும்விட அதிகமாக இடம்பெற்றதைச் சுட்டிக்காட்டும் செந்தில்நாதன், இது மோதியை தமிழகத்தில் திணிப்பதற்கான எதிர்வினையாக பார்க்க முடியும் என்கிறார்.

ஆனால், தி.மு.க. இதனைப் போதுமான அளவில் பெரிய விழாவாக, மக்களிடம் பேசப்படும் தருணமாகச் செய்யவில்லை என்ற குறையும் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அண்ணாவை rediscover செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் அவர்.

ஆனால், இந்த ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழாவைப் பெரிதாகக் கொண்டாடவில்லை என்பதை Anna: Life and Times of C.N. Annadurai நூலின் ஆசிரியரும் திராவிட இயக்க ஆய்வாளருமான ஆர். கண்ணன் ஏற்கவில்லை.

சென்னை நகரத்தில் அண்ணா பிறந்த நாள் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதையும் திண்டுக்கல்லில் தி.மு.க. நடத்திய விழாவையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"தற்போது உள்ள தலைமுறைக்கு பெரியார், அண்ணா, தி.மு.க. ஆகியவற்றின் பங்களிப்பு குறித்து பெரிதாகத் தெரியாது. இந்தத் தலைவர்களாலும், இயக்கங்களாலும் மேலே வந்தோம் என்பதும் தெரியாது. அதனை இத்தனை ஆண்டுகளாக தி.மு.க. நடத்திய முப்பெரும் விழாவே மீண்டும், மீண்டும் நினைவூட்டுகிறது" என்கிறார் கண்ணன்.

வலதுசாரி இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு வெற்றிடம் இருப்பதாகக் கருதி அதனை நிரப்புவதற்கு முயற்சிப்பதைப்போல காட்டிக்கொள்ளும் இந்த காலகட்டத்தில் இந்த விழா மிகுந்த அர்த்தம் பொருந்தியதாகிறது என்கிறார் அவர்.

பாரதீய ஜனதா கட்சி உண்மையிலேயே பெரிய அளவில் தமிழகத்தில் வளர்ந்து வருவதாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் குரல் அதிகமாக தமிழகத்தில் ஒலிக்கிறது.

அதற்கான எதிர்வினையாகத்தான் தற்போது மீண்டும் அண்ணா, பெரியாரின் பாரம்பரியம் பேசப்படுவதைப் பார்க்க வேண்டும் என்கிறார் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான பத்ரி சேஷாத்ரி.

பட மூலாதாரம், BADRI SESHADRI

ஆனால், இப்படி முன்வைப்பதன் மூலமாக திராவிட இயக்கத்தின் தற்போதைய பலவீனமும் வெளிப்படுகிறது என்கிறார் பத்ரி. பா.ஜ.க. தற்போதைய தங்கள் செயல்திட்டங்களை முன்வைக்கும்போது, திராவிட இயக்கத்தினர் மீண்டும் பெரியார், அண்ணா ஆகியோரைத்தான் முன்வைக்க வேண்டியிருக்கிறது. திராவிட இயக்கத்தில் தற்போது சித்தாந்திகள் யாரும் இல்லை என்பதையே இது காட்டுகிறது என்கிறார் அவர்.

இன்றைய சூழலை முன்வைத்து, தி.மு.கவோ திராவிடர் கழகமோ தங்கள் கொள்கைகளை முன்வைக்க வேண்டும். அது நடக்கவில்லை.

குறிப்பாக, அண்ணா காலத்துப் பொருளாதாரத்திற்கும் தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. அதற்கு ஏற்றபடி திராவிட இயக்கத்தினர் புதிய கருத்துகளை முன்வைக்க வேண்டும். வெறும் அண்ணா பெயரைச் சொன்னால் போதாது என்கிறார் பத்ரி.

பட மூலாதாரம், GNANAM

ஆனால், இந்தக் கருத்தை மறுக்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன். "எந்த விதத்தில் ஒடுக்குமுறை நிகழ்கிறதோ, அதற்கு எதிராகத்தான் குரல்கள் ஒலிக்கும். இப்போது ஜிஎஸ்டி, நீட் தேர்வு போன்ற விஷயங்களுக்கு எதிராக தமிழகத்தில் குரல்கள் ஒலித்தாலும் அடிப்படையான பிரச்சனை மாநில உரிமைகள் முடக்கப்படுவதுதான். ஆகவேதான் கூட்டாட்சித் தத்துவத்தைப் பேசிய அண்ணாவை இப்போது பேச வேண்டியிருக்கிறது" என்கிறார் சு. வெங்கடேசன்.

"தேசிய இன அடையாளங்களை பா.ஜ.க. ஒடுக்குகிறது. சமூக வலைதளங்கள்தான் அதற்கு வடிகால். ஆனால், தமிழ் சமூகத்தில், சமூக வலைதளங்களில் வேகத்தைப் பயன்படுத்தும் வகையில் தி.மு.க. இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது" என்கிறார் வெங்கடேசன்.

கருணாநிதி இல்லாத வெற்றிடமாக மட்டும் இதைச் சொல்ல முடியாது. பல ஆண்டுகளாகவே கொள்கை ரீதியாகவும் அடையாள ரீதியாகவும் இந்தச் சரிவு நடந்துவருகிறது என்கிறார் வெங்கடேசன்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :