தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம்

அ .தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை இன்று (திங்கள்கிழமை) தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார்.

டிடிவி தினகரன்

பட மூலாதாரம், AIADMK

தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல் மற்றும் கதிர்காமு, உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளதாக, தமிழக சட்டப்பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1986-ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் விதிப்படி, இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைTNDIPR

முன்னதாக, கடந்த மாதத்தில், தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சரான எடப்பாடி கே. பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர்.

இந்நிலையில், தன்னை ஆலோசிக்காமல் ஆளுநரிடம் மனு அளித்த சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய அதிமுகவின் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் பரிந்துரைத்தார்.

இந்த பரிந்துரை ஏற்ற சபாநாயகர், தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும், செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

படக்குறிப்பு,

தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி

அரம்பத்தில் புதுவை அருகேயுள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கர்நாடக மாநிலம் குடகில் ஒரு தனியார் விடுதியில் தற்போது தங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரத்தில் கர்நாடக மாநிலம் குடகில் ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ள தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக காவல் துறையினர் அங்கு சென்று மிரட்டுவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

தனக்கு ஆதரவாக 21 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் எடப்பாடி அணிக்குள்ளேயே தனக்குப் பல 'ஸ்லீப்பர் செல்கள்' இருப்பதாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் அவர்கள் வெளிப்படுவார்கள் என்றும் தினகரன் கூறினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :