அதிமுக உறுப்பினர்கள் பதவி நீக்கம் : என்ன சொல்கிறது கட்சி தாவல் தடை சட்டம் ?

தமிழக சட்டப்பேரவையில், தினகரன் ஆதரவு அதிமுக உறுப்பினர்கள் 18 பேரை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் ( பதவி நீக்கம்) செய்துள்ளதாக பேரவைத்தலைவர் தனபால் அறிவித்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவை
படக்குறிப்பு,

அரசியல் நெருக்கடிகளும் கட்சி தாவல் தடை சட்டமும்

இந்த கட்சித் தாவல் தடை சட்டத்தின் வரலாறு மற்றும் முக்கிய பிரிவுகள்:

•இந்திய அரசியல் சட்டத்தின் 10 வது ஷெட்யூலில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.

•கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர், தானாக முன்வந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால், அவர் தனது உறுப்பினர் பதவியை இழப்பார்

•அல்லது, அவரது கட்சி பிறப்பிக்கும் உத்தரவுக்கு மாறாக நாடாளுமன்ற/சட்டமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்தாலோ, அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ பதவி இழப்பார்.

தொடர்புடைய செய்திகள்

•1985ம் ஆண்டு சட்டத்தின்படி, சட்டமன்ற/நாடாளுமன்றக் கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்தால், அது கட்சி பிளவுண்டதாகக் கருதப்பட்டு, அவர்கள் பதவி பறி போகாது.

•ஆனால் இப்பிரிவு 91வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் மாற்றப்பட்டது. அதன்படி, சட்டமன்றக் கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிந்தால்தான் அது பிளவு என்று கருதப்பட்டு அவர்கள் பதவி பறிபோகாமல் தடுக்கப்படும்.

•கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளைப் பறிக்க முடியாது

•சுயேச்சை உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வேறொரு அரசியல் கட்சியில் சேர்ந்தால், அவர்கள் பதவி பறிபோகும்

•நியமன உறுப்பினர்கள் , எந்த ஒரு கட்சியையும் சாராமல் இருந்தால், அவர்கள் நியமிக்கப்பட்ட ஆறு மாத காலத்துக்குள் வேறொரு கட்சியில் சேரலாம். அந்த காலத்துக்குள் அவர்கள் வேறொரு கட்சியில் சேரவில்லையெனில், அவர்கள் சுயேச்சையாகவே கருதப்படுவர்.

•இந்த சட்டம் அரசியலமைப்பில் தரப்பட்ட அடிப்படை உரிமைகளுள் ஒன்றான, கருத்து சுதந்திரத்தை மறுப்பதாக அமைந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கொன்றில், இந்திய உச்ச நீதிமன்றம், இச்சட்டம் கருத்துரிமையை மறுப்பதாக இல்லை என்று தீர்ப்பளித்தது.

•1988ல் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அணிகள் பிளவுபட்ட போது, அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் பல அதிமுக உறுப்பினர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார்.

•1986ல் புதுச்சேரி சட்டப்பேரவையில் இரு அதிமுக உறுப்பினர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் உறுப்பினர் பதவியை இழந்தனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :