பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர தினகரன் குழுவினர் முடிவு

தமிழக சட்டமன்றத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக அளிக்கப்படும் மனுவை அவரச வழக்காக கருதி விசாரணை நடத்தவேண்டும் என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜியிடம் அனுமதி கோரியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், தகுதி நீக்கம் சட்டத்திற்கு புறம்பானது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழக அரசியல் நெருக்கடி : என்ன சொல்கிறது கட்சி தாவல் தடை சட்டம் ?

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் தடை

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம்

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

''தினகரன் ஆதரவு எம்எல்ஏகளை தகுதி நீக்கம் செய்தது எந்த விதத்திலும் சரியானது அல்ல. பிப்ரவரி மாதம் ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி அவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று நான்கு எம்எல்ஏகள் வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வன், பார்த்திபன் மற்றும் ரங்கசாமி ஆகியோர் புகார் கொடுத்து ஆறு மாதங்கள் கடந்தும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக முன்பே வழக்கு பதிவு செய்துள்ளனர்,'' என்றார் வழக்கறிஞர்.

''சட்டசபை அமர்வு நடக்கும்போது விதிமீறல் நடந்திருந்தால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம். தற்போது தகுதி நீக்கம் செய்வதற்கு எந்த காரணமும் இல்லாமல் சபாநாயகர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தவறானது,'' என்றார் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி ஆதரவு எம் எல் ஏ வெற்றிவேல், 18 சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் விடுதியை காலி செய்யவேண்டும் என்று தங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

''எங்கள் குறைகளை ஆளுநரிடம் கூறினோம். அதற்காக தகுதி நீக்கம் செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அராஜமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அதிமுக அரசிடம் 117 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால், தினகரன் ஆதரவாளர்களை தகுதி நீக்கம் செய்தால், பெரும்பான்மையை நிரூபிக்கும் சமயத்தில் அவர்களுக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தவே தகுதி நீக்கம் அறிவிப்பு வந்துள்ளது,'' என்றார் வெற்றிவேல்

''தற்போது நாங்கள் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் அதிமுகவில் உள்ளோம். இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை. ஓபிஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது குற்றச்சாட்டியுள்ளோம். அவர்கள் மீது எந்த நடவடிக்கை எதுவும் எடுக்காமல், எங்களை தகுதி நீக்கம் செய்தது சட்டத்திற்கு புறம்பானது,'' என்றார் வெற்றிவேல்.

மேலும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் சட்டப்படி தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :