தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் - அடுத்த காட்சி என்ன ?

  • முரளீதரன் காசி விஸ்வநாதன்
  • செய்தியாளர்

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் இனி என்ன நடக்கக்கூடும்?

படக்குறிப்பு,

18 உறுப்பினர்கள் பதவி போனது - அடுத்து என்ன ?

தற்போது 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் விவகாரத்தைப் பொறுத்தவரை, பல்வேறு சட்ட நிபுணர்களும் எடியூரப்பா வழக்கையே சுட்டிக்காட்டுகிறார்கள்.

கர்நாடக முதலமைச்சராக பா.ஜ.கவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, 11 பாரதீய ஜனதாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் 5 சுயேச்சை உறுப்பினர்களும் அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 11 பா.ஜ.க. உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக கர்நாடக சபாநாயகர் அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, சபாநாயகர் செய்தது சரியே என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தத் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்தது.

இயற்கையான நீதி பின்பற்றப்படவில்லையென்றும் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

அரசியல் சட்ட விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

நீதிமன்றமே ஒரே வழி

தற்போதைய நிலையில், தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்திற்குச் செல்வது என்ற ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கிறது.

அதேபோல அவர்கள் இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தவரை, 18 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்துவிட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி வெற்றிபெற முடிவு செய்திருப்பதாக அரசியல் களத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 233 உறுப்பினர்கள் உள்ளனர்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற சட்டமன்ற உறுப்பினர்களின் முழு எண்ணிக்கையும் இருக்கும் நிலையில், 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். 2016ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க., தற்போது சட்டப்பேரவையில் 134 இடங்களைக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் எண்ணிக்கை 116ஆகக் குறைந்திருக்கிறது.

ஆனால், 18 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 216ஆகக் குறைந்துவிடும்.

ஆகவே 108 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்ற பெற முடியும் என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நினைக்கிறது.

படக்குறிப்பு,

'சபாநாயகரின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு' ?

'சபாநாயகரின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு'

"சபாநாயகர் செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றே சொல்லலாம். எடியூரப்பா வழக்கில் இதே போன்ற சூழலில், தகுதி நீக்கம் செல்லாது என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கும் நிலையில் தமிழக சபாநாயகர் அதே போன்ற நடவடிக்கையை மேற்கொள்கிறார். இது நிச்சயம் நீதிமன்றம் முன்பு தாக்குப் பிடிக்காது" என்கிறார் மூத்த வழக்கறிஞரான ராதாகிருஷ்ணன்.

இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கை கடந்த வாரம் விசாரித்த உயர் நீதிமன்றம் 20ஆம் தேதிவரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு தடை விதித்தது.

வரும் புதன்கிழமையன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான தடை நீக்கப்படும் பட்சத்தில் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பாக, எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்கலாம்.

"இதெல்லாம் நடக்காது. முதலில் இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி மாறவில்லை. அதே கட்சியில், அதே சின்னத்தில்தான் நீடிக்கிறார்கள். ஆகவே, அவர்களைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தகுதி நீக்கம் செய்தது செல்லாது" என்கிறார் முன்னாள் சபாநாயகரான ஆவுடையப்பன்.

இந்த வழக்கில் முடிவெடுக்கும் முன்பாக, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க நீதிமன்றம் அனுமதிக்காது; அப்படிச் செய்வது இந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக அமையும் என்கிறார் ஆவுடயைப்பன்.

ஆனால், தகுதி நீக்க வழக்கு விசாரிக்கப்படுவதில் காலதாமதம் ஏற்படுவது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அரசு நீடிப்பது ஆகியவை நடந்து, கால அவகாசம் கிடைக்கும் பட்சத்தில் முதலமைச்சர் தரப்புக்கும் தினகரன் தரப்புக்கும் தங்கள் ஆதரவை அதிகரித்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கலாம்.

தற்போது இந்த தகுதி நீக்க உத்தரவைக் கேட்டவுடன் சில சட்டமன்ற உறுப்பினர்கள் கலங்கிப்போனதாக கூறப்படும் நிலையில், கால அவகாசம் என்பது முதலமைச்சர் தரப்புக்கு சாதகமாக அமையக்கூடும்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :