டிசம்பருக்குள் ஆர் கே நகர் இடைத்தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் காலியான ஆர் கே நகர் தொகுதியில் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஜெயலலிதா
படக்குறிப்பு,

கடந்த ஆண்டு தேர்தலில் 1,50,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆர்கே நகர் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தலை நடத்தவேண்டும் என்று தெரிவித்தனர்.

மதுரையைச் சேர்ந்தவர் சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் தேர்தல் நடத்தவேண்டும் என்று கோருவது பொருந்தாது என்று கூறினாலும், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலிடம் கேட்டபோது, ''தேர்தல் நடத்தும் தேதி குறித்து நீதிபதிகள் கேட்டனர், தேர்தல் ஆணையத்திடம் பேசிவிட்டு தெரிவிப்பதாகக் கூறினேன். கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி ஆர் கே நகரில் நடத்த முயற்சி செய்தபோது தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லாத காரணத்தால் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்று தெரிவித்தேன்,'' என்றார்.

ஆர் கே நகர் தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பல புகார்கள் வந்ததால் தேர்தலை நடத்த இயலவில்லை என்றும் கூறியதாக பிபிசிதமிழிடம் அவர் தெரிவித்தார்.

2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு காலியான ஆர் கே நகர் தொகுதியில் 2017 ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்கவிருந்த இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வெளியான சர்ச்சைகளை அடுத்து, வருமானவரித்துறை நடத்திய சோதனையில் தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சில கோப்புகளை அதிகாரிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

பிபிசிதமிழிடம் பேசிய மனுதாரர் ரமேஷ், ''2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆர் கே நகர் தொகுதியைக் காட்டிலும் அதிக சர்ச்சைக்கு ஆளான அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் இரண்டு மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டது என்பதை நான் சுட்டிக்காட்டினேன். எந்த காரணம் கூறியும் ஆர் கே நகர் இடைத்தேர்தலை இனியும் தள்ளிப்போடக்கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்,'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்: