குஜராத் கலவர வழக்கு: நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார் பாஜக தலைவர் அமித் ஷா

மாயா கொட்னானி, கலவர கும்பலை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மாயா கொட்னானி, கலவர கும்பலை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

இந்தியாவை ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, குஜராத்தின் மாநிலத்தில், 2002 -ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் மாயா கொட்னானிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜரானார்.

கலவரம் நடந்த அன்று மாயா கொட்னானி மாநில சட்டப்பேரவையில் இருந்ததாக நீதிமன்றத்தில் அமித் ஷா தெரிவித்தார்.

அகமதாபாதின் நரோடா காம் என்ற பகுதியில், 11 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான கும்பலை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் மாயா கொட்னானி.

இந்தியாவின் மிக சக்திவாய்ந்த அரசியல்வாதியான அமித் ஷா, ஒரு சிறப்பு நீதிமன்றத்தில், குறிப்பிட்ட நாளன்று, மாயா கொட்னானி சட்டமன்றத்தில் இருந்ததாக கூறியுள்ளார்.

இந்தியாவில் ஏற்பட்ட கலவரங்களில் மிகவும் மோசமானதான இந்தக் கலவரத்தில் 1000 பேர் கொல்லப்பட்டனர் , பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள்.

அமித் ஷா, குஜராத் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு சாட்சியாக தோன்றி, 2002ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதி, நகர மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு கொட்னானி சட்டமன்றத்தில் இருந்தார் என கூறியுள்ளார். கொட்னானியின் விண்ணப்பத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்கும் வகையில், அவர் சிறப்பு நீதிமன்றத்தில் தோன்றினார்.

"கொட்னானி சட்டமன்றத்தில் இருந்து கிளம்பி சோலா சிவில் மருத்துவமனையை அடைவதற்கு இடையே எங்கு சென்றார் என்பது குறித்து கூறுவது தன்னால் இயலாது என்றார் . எத்தனை மணிக்கு சரியாக கொட்னானி மருத்துவமனையை அடைந்தார் என்பதை கூற இயலவில்லை என்றார் " என்று, இந்த வழக்கிற்கான சிறப்பு வழக்கறிஞர் சுரேஷ் ஷா, பி பி சி குஜராத் சேவையின், விஜய்சின் பார்மரிடம் கூறியுள்ளார்.

"அமித் ஷா, கொட்னானி எந்த நேரத்தில் எங்கு இருந்தார் என்பதை கூறவில்லை" என்றும் தெரிவித்ததாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அமித் ஷாவின் சாட்சியம் அளித்தல் 40 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியின் உதவியாளருமான கொட்னானி, மதம் சார்ந்த கலவரத்தில் பங்களிப்பிற்காக 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். கலவரத்தின் போது அவர் அமைச்சர் பதவியில் இல்லை. ஆனால் 2007 ஆம் ஆண்டு நரேந்திர மோடியால் , பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறையின் இளைய அமைச்சராக்கப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு, படுகொலைக்கு தொடர்புடையதாக கைதான போது, இளைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர், மாநில சட்டமன்ற உறுப்பினராக நீடித்தார்.

வழக்கின் விசாரணை 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டு, 62 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டது . குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விசாரணை நடந்துவந்த போதே இறந்துவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :