அரசியல் திருப்பங்கள்: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஸ்டாலின் ஆலோசனை

ஸ்டாலின்

பட மூலாதாரம், Facebook/MK Stalin

அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனுக்கு ஆதரவளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்ததையடுத்து இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

திமுக கழகச் செயல் தலைவர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 22 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக பத்தொன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக பொறுப்பு ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். அதன்படி, அன்றைய தினமே எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.

233 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழக சட்டமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 98 ஆகவும், முதல்வருக்கு ஆதரவை வாபஸ் பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆகவும் உயர்ந்த நிலையில், 114 சட்டமன்ற உறுப்பினர்களே அரசுக்கு ஆதரவாக உள்ளதால் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி திமுக சார்பில் மூன்று முறை பொறுப்பு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் அரசியல் சட்டத்தை காப்பற்ற வேண்டிய ஆளுநர் உடனடியாக உத்தரவிடாமல் பெரும்பான்மையாக இருந்த அரசை 28 நாட்கள் பதவியில் தொடர அனுமதித்து தமிழகத்தில் நிலையற்ற அரசு தொடரும் சூழ்நிலையை உருவாக்கியது தமிழக அரசியலில் ஒரு கருப்பு அத்தியாயம் என இந்தக் கூட்டம் பதிவு செய்வதாக அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Facebook/MK Stalin

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் சார்பில், அரசுக்கு உள்ள பலத்தை நிரூபிக்கும் சட்டமன்ற வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவின் அடுத்தக்கட்ட விசாரணை நாளை புதன்கிழமை நடக்கவுக்கவுள்ள நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று ஒரே நாளில் அவசர அவசரமாக 18 சட்டமன்ற உறுப்பினர்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்து, அன்றைய தினமே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆட்சியை ஜனநாயக விரோதமாக காப்பாற்றவே சபாநாயகர் அதிகார துஷ்பிரயோகம் செய்தருப்பதாகக் கூறி அதற்குக் கண்டனம் தெரிவிப்பதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விருப்பப்படி மைனாரிட்டியை மெஜாரிட்டி ஆக்க எடப்பாடி பழனிசாமிக்கு துணை போயிருக்கும், தமிழக பொறுப்பு ஆளுநரும் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக அரசை வீழ்த்த சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடும் என்றும் அதே சமயம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எடுக்கும் எந்த முடிவுக்கும் இந்த கூட்டம் முழு ஒப்புதலை வழங்குவதாகவும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Facebook/MK Stalin

குட்கா விற்பனையைக் கண்டுபிடியுங்கள் என்றால் அதை விடுத்து குதிரை பேரம் செய்ய கர்நாடக மாநிலத்திற்கு காவல்துறையை அனுப்பி உள்கட்சி பகையை இந்த அரசு தீர்த்துக் கொள்கிறது. சட்ட ஒழுங்கு பணிகளில் அக்கறை காட்டாமல் அதிகமுவின் தனி பாதுகாப்பு அதிகாரி போல செயல்படுவதாக சட்டம் ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பியான டி.கே.ராஜேந்திரனை வன்மையாக கண்டிப்பதாக இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றம் நாளை புதன்கிழமை வழங்கும் உத்தரவுக்கு ஏற்ப திமுக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், எந்த நேரத்திலும் தேர்தலைச் சந்திக்க திமுக தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :