குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பாய்வதை தடுப்பது எப்படி?

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை விசாரணை ஏதுமின்றி ஓராண்டு காலம் சிறையில் அடைக்க வகை செய்கிறது குண்டர் தடுப்புச் சட்டம் என்று அழைக்கப்படும் தடுப்புக்காவல் சட்டம்.

Image caption போராட்டத்தில் மாணவி வளர்மதி.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டறிக்கை விநியோகித்த மாணவி வளர்மதி என்பவரும், 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவாக சென்னை கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரும் அண்மையில் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனினும், சில மாதங்களுக்குப் பின், அவர்கள் மீது அந்தச் சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

''பல மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற தடுப்புக் காவல் சட்டங்கள் நீக்கப்பட்டுவிட்டன. துரதிருஷ்டவசமாக இந்தியாவில் அரசமைப்புச் சட்டமே தடுப்புக் காவல் சட்டத்தை அனுமதிக்கிறது'' என்று இதுகுறித்து பிபிசி தமிழிடம் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கூறினார்.

ஆனால், இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதுதான் வேதனையானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

''இதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பவர்கள் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் எவராகவும் இருக்கலாம். ஆனால், அவர்களை தடுப்புக் காவலில் வைக்கவேண்டும் என்று அரசு சொல்வதால்தான் இது நடக்கிறது. வளர்மதி, திருமுருகன் காந்தி, முன்பு சீமான் போன்றவர்கள் அரசியல் காரணங்களுக்காக இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்'' என்று அவர் கூறினார்.

''பொதுவாக, குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்குப் பதிலாக இந்த வழிமுறையைப் பின்பற்றுவது சரியில்லை'' என்று மேலும் தெரிவித்தார் அவர்.

''சட்டமே நியாயமானதாக இருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும், நடைமுறையில் நூற்றுக்கணக்கானவர்களை தடுப்புக்காவல் சட்டத்தில் அடைப்பது ஜனநாயக விரோதமானது'' என்றும் அவர் கூறினார்.

'சட்டத்தையே நீக்கவேண்டும்'

அவர் மேலும் கூறுகையில், வழக்குப் பதிந்து, விரைவாக புலன் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரித்து தண்டனை வழங்கவேண்டும். இதையெல்லாம் செய்ய நல்ல குற்ற நீதிவிசாரணை அமைப்பு வேண்டும். மாறாக, தடுப்புக் காவலில் அடைப்பதால், குற்றங்களும் தடுக்கப்படாது. அது ஜனநாயகத்துக்கும் விரோதமானது என்று குறிப்பிட்டார்.

தடுப்புக் காவல் சட்டங்கள், குற்றவியல் அவதூறுச் சட்டம், கொலைக்கு மரண தண்டனை போன்றவற்றை அவற்றை உருவாக்கிய மேற்கத்திய நாடுகளே அகற்றிவிட்டன.

Image caption எதிர்ப்புக் குரல்களை மௌனமாக்க முயல்கிறதா குண்டர் தடுப்புச் சட்டம்?

பல விஷயங்களில் உலகத்தோடு போட்டிபோடும் நாம், இந்த விஷயங்களிலும் அவர்களோடு போட்டிபோட்டு இத்தகைய சட்டங்களை நீக்கவேண்டும்.

சில மனித உரிமை அமைப்புகளும் இத்தகைய கோரிக்கைகளை முன்வைக்கின்றன என்றார் அவர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அலுவலர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள், தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடரமுடியும்.

இதுவரை யாரும் இதைச் செய்து பார்க்கவில்லை என்றாலும், இது ஒன்றே தீர்வாக இருக்கும் என்கிறார் மனித உரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளரான ஐ.ஆசிர்வாதம்.

தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான சுதா ராமலிங்கமும் தடுப்புக்காவல் சட்டம் நீக்கப்படவேண்டும் என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், ''சாதாரண வழக்குகளில் கைது செய்யப்படுகிறவர் 15 நாள்களுக்கு ஒருமுறை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவேண்டும்' என்று குறிப்பிட்டார்.

90 நாளுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறினால் அவர்களை ஜாமீனில் வெளியில் விடவேண்டியது கட்டாயம் என்று தெரிவித்த சுதா ராமலிங்கம், மாறாக, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டால் இப்படி எந்த நடைமுறையும் இல்லாமல் ஒருவரை ஓராண்டுவரை அடைத்து வைக்கலாம் என்றார்.

குறிப்பிட்ட குற்றத்தை தொடர்ந்து செய்வோருக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கென இருக்கும் இச்சட்டத்தை தற்போது எதிர்ப்புகளை முடக்குவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்'' என்றார் சுதா.

படத்தின் காப்புரிமை Facebook/Valarmathi
Image caption வளர்மதி

தவறான முறையில் இச்சட்டத்தைப் பயன்படுத்தும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டபோது, "இல்லை" என்கிறார் அவர். "தனிப்பட்ட முறையில் அல்லாமல் தங்கள் பணியின் ஓர் அங்கமாகவே தடுப்புக்காவல் சட்டத்தை அதிகாரிகள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

"ஆனால், தனிப்பட்ட காரணங்களால் வேண்டுமென்றே நடவடிக்கை எடுப்பது, ஆவணங்களைத் திருத்தி, பொய்யான தகவல்களைத் தந்து தடுப்புக் காவலில் அடைப்பது ஆகியவை இருந்தால் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர்ந்து நிவாரணம் தேடலாம்," என்றார் சுதா.

முன்பெல்லாம், மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்படுவோரே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர். பல நேரங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் துஷ்பிரயோகம் நடந்துள்ளது. அரசின், காவல்துறையின் கையலாகாத தனத்தால்தான் தடுப்புக்காவல் சட்டம் தேவையாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேகமாக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இந்த தடுப்புக்காவல் சட்டமே தேவையில்லை என்றார் அவர்.

அறப்போராட்டத்தை எதிர்க்க பயன்படுத்தலாமா?

படத்தின் காப்புரிமை Tirumurugan
Image caption கைது செய்யப்படும் திருமுருகன் காந்தி.

பி.பி.சியிடம் பேசிய முன்னாள் உள்துறை செயலாளர் பூர்ணலிங்கம், கலவரம், வன்முறைகள் ஏற்படாமல் தடுப்பதற்காக அவற்றுக்குக் காரணமாக இருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

வளர்மதி, திருமுருகன் காந்தி முதலியோர் கைது செய்யப்பட்டது முறையானதுதானா என்று அவரிடம் கேட்டபோது, "அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. சுப.உதயகுமார் போன்றோர் அணு சக்தி வேண்டாம் என்று போராடுகிறார்கள்.

என்னைக்கேட்டால் நான் அணுசக்தி சரி என்பேன். கருத்து மாறுபாடு இருக்கலாம்" என்று இது குறித்து பூர்ணலிங்கம் மேலும் கூறினார்.

"ஆனால், நான் சொல்வதுதான் சரியாக இருக்கவேண்டும் என்று எவரும் போராடுவது சரியல்ல. ஆனால், அதற்காக அறப்போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவது நிச்சயம் சரியல்ல. காந்தியே அறப்போராட்டங்கள் செய்திருக்கிறாரே," என்றார் அவர்.

அதிகாரிகளுக்கு அரசு அழுத்தம் தருமா?

குண்டர் சட்டத்தில் ஒருவரை அடைக்கவேண்டும் என்பதற்காக அரசிடம் இருந்து அழுத்தம் வந்ததுண்டா, எவ்விதம் மாவட்ட ஆட்சியர்கள் இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்கள், இதில் காவல்துறையின் பங்கு என்ன என்று கேட்டபோது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி பிறகு வேளாண்மை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவரான எம்.ராஜேந்திரன், கூறியது: நான் ஆட்சியராக இருந்தபோது எனக்கு எவ்வித அழுத்தங்களும் நேரடியாக அரசிடம் இருந்து வந்ததில்லை.

வழக்கமாக ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கவேண்டும் என்ற நடவடிக்கையைத் தொடங்குவது காவல்துறைதான்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வளர்மதி

இந்த விஷயத்தில் அரசு ஒருவேளை தொடர்புகொண்டாலும் காவல்துறையைத்தான் தொடர்புகொள்ளும் என்று மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், காவல்துறை அளிக்கும் முன்மொழிவை பரிசீலித்து ஒரு நீதிமன்றத்தைப் போல முடிவெடுப்பதுதான் ஆட்சியர்களின் பணி. காவல்துறை அளிக்கிற ஆவணங்களில் திருப்தி இல்லை என்றால் திருப்பி அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

"குற்றம் சாட்டப்பட்ட நபரது குற்றப்பின்னணி தொடர்பான ஆதாரங்கள் குறிப்பாக, கடிதப் போக்குவரத்து, தொலைபேசி உரையாடலின் பதிவு, வீடியோ, ஆடியோ பதிவுகள் போன்றவை ஏதாவது இருந்தால் அந்த அடிப்படையிலேயே அவர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ராஜேந்திரன் தெரிவித்தார்.

சில நேரங்களில் குறிப்பிட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மேலிருந்து அழுத்தம் இருப்பதாக காவல்துறையினர் குறிப்பிடுவதும் உண்டு என்று மேலும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்