தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கில் இன்று விசாரணை

டி.டி.வி தினகரன்

டி.டி.வி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று (புதன்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

கடந்த திங்கள்கிழமை (செப் 18) சபாநாயகர் தனபால், தினகரன் ஆதரவு எம்எல்ஏகளை தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக கூறி, அவர்களின் தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவித்தார். கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தியறிக்கை அளிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின் காரணமாக பதவியை இழந்த எம்எல்ஏகள் சபாநாயகரின் முடிவு சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகாரை கொடுத்ததற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

முதலில், எட்டு எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கு மட்டுமே பதிவான நிலையில், மேலும் பத்து எம்எல்ஏக்களின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

படத்தின் காப்புரிமை TNDIPR

பிபிசி தமிழிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், தகுதி நீக்கம் சட்டத்திற்கு புறம்பானது என்றார். 18 எம்எல்ஏக்களின் பதவி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒரு அரசு ஆட்சியில் இருப்பதாகவும், இதனால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் திமுக தொடுத்த வழக்கும் இன்று விசாரிக்கப்படவுள்ளது.

திமுகவின் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கபில் சிபல் ஆஜராகவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறையில் நடைபெற்றுவரும் காவிரி மகாபுஷ்கார புனித நீராடுவிழாவில் நீராடச் சென்றுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்