''ரோஹிஞ்சா அகதிகளை திரும்ப அனுப்பும் இந்திய முயற்சி மனித உரிமை மீறல்''

Getty images படத்தின் காப்புரிமை Getty Images

மியான்மரில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த ரோஹிஞ்சா முஸ்லிம்களை, அகதிகளாக அங்கீகரிக்காமல் அவர்களைத் திருப்பி அனுப்ப மத்திய அரசு காட்டும் ஆர்வம் மனித உரிமைகள் ஆர்வலர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள ரக்கைன் மாகாணத்தில் வாழ்ந்த சுமார் 10 லட்சம் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் ரோஹிஞ்சா முஸ்லிம்கள். எட்டாம் நூற்றாண்டு முதல் பல தலைமுறைகளாக அவர்கள் மியான்மரில் வாழ்கின்றனர்.

ஆனாலும், அவர்களை மியான்மர் குடியுரிமை சட்டப்படி தங்கள் நாட்டு குடிமக்களாக அங்கீகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை மியான்மர் அரசு எடுத்துள்ளது.

இதனால் ரோஹிஞ்சா மக்களுக்கு எதிரான வன்முறைகளும் மோதல்களும் 2012-ஆம் ஆண்டில் தீவிரம் அடைந்தன. அதன் பிறகு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ரோஹிஞ்சாக்கள், வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளுக்கு தப்பித்து அடைக்கலம் தேடத் தொடங்கினர்.

'இனப்பேரழிப்புச் செயல்'

இந்தியாவில் பரவலாக ஜம்மு காஷ்மீர் , தெலங்கானா, ஹரியானா, உத்தர பிரதேசம், டெல்லியில் ஷஹீன் பாக், மதன்பூர் காடர், ஜசோலா, சென்னையில் கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள முகாம்களில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.

மியாமன்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான அந்நாட்டு ராணுவ நடவடிக்கைகளை "அப்பட்டமான இனப்பேரழிப்பு செயல்" என ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் கண்டித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் மனித உரிமைகள் கூட்டங்களிலும் ரோஹிஞ்சாக்கள் மீதான மியான்மர் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கடந்த இரு தினங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ரோஹிஞ்சாக்களை தற்காலிகமாக தங்க வைத்துள்ள வங்கதேச அரசு, அவர்களைத் திருப்பி அனுப்பும் வரைவுத் திட்டத்துக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோரி வருகிறது.

மியான்மர் அரசோ ரோஹிஞ்சாக்களை தங்கள் நாட்டு பிரஜைகளாக ஏற்க முடியாது என கூறி வருகிறது. இந்தியாவும் ரோஹிஞ்சாக்களை அடுத்த மாதம் திருப்பி அனுப்புவதற்கான ஆரம்பப் பணிகளைத் தொடங்க உத்தேசித்துள்ளது.

இந்தியக் கவலையும், நடவடிக்கையும்

இந்த நடவடிக்கைகளுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் தனது அதிருப்தியை ஐ.நா. கூட்டத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவும் முதன் முறையாக மியான்மர் விவகாரத்தைப் பேசியது.

ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி ராஜிவ் கே. சந்தர், "மியான்மரின் ரக்கைன் சூழ்நிலை மற்றும் அளவுக்கு அதிகமான அகதிகளின் வருகை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய வங்கதேசம், மியான்மர் பாதுகாப்பு விவகார பகுப்பாய்வாளர் தேவிரூபா, "தனது அதிகாரபூர்வ உரையின் எந்த பகுதியிலும் "ரோஹிஞ்சா முஸ்லிம்கள்" என்றோ அவர்கள் மியான்மர் பிரஜைகள் என்றோ இந்தியா குறிப்பிடவில்லை" என சுட்டிக்காட்டுகிறார்.

ரோஹிஞ்சாக்களை மியான்மர் அகதிகளாகவே இந்தியா பார்க்கிறது. ஐ.நா. கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதி ஆற்றிய உரையில் அது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மியான்மரில் இருந்து ரோஹிஞ்சா முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் தங்கள் நாட்டுக்கு வருவது குறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கவலை வெளியிட்ட பிறகு, அவருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 14-ஆம் தேதி தொலைபேசியில் பேசினார்.

அப்போது, ரக்கைனில் நீடித்து வரும் ரோஹிஞ்சாக்களுக்கு எதிரான நெருக்கடி நிலைக்கு தீர்வு காண மியான்மருக்கு அழுத்தம் தருவதாக இந்திய அமைச்சர் தன்னிடம் உறுதியளித்தார் என்று வங்க தேச அரசு அறிவிக்கை வெளியிட்டது.

ஆனால், அந்த தகவலை இதுநாள்வரை இந்திய வெளிறவுத் துறையோ இந்திய அரசின் பிரதிநிதிகளோ உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்கிறார் தேவிரூபா.

"யாருக்கு உதவ நினைக்கிறது இந்தியா?"

இந்நிலையில் மியான்மரின் ரக்கைனில் சமூக பொருளாதார உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நீண்ட கால தீர்வு காணப்பட வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) நடந்த ஐ.நா. கூட்டத்தில் இந்திய பிரதிநிதி ராஜிவ் கே. சந்தர் பேசியுள்ளார்.

ஆனால், "ரக்கைன் மாகாணத்தில் சமூக பொருளாதார உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என எந்த சமூகத்தை மனதில் வைத்து இந்தியா கோருகிறது ?" என்று அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோயீதா பட்டாச்சார்யா கேள்வி எழுப்புகிறார்.

அரகன் ரோஹிஞ்சா சால்வேஷன் ராணுவம் (அர்சா) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களால்தான் மியான்மரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்று கூறும் ஜோயீதா பட்டாச்சார்யா, ஆனால், அவர்களை ஒடுக்குவதாகக் கூறி தற்போது ஒட்டுமொத்த இனத்தையே மியான்மரில் இருந்து விரட்ட அந்நாட்டு ராணுவம் கையாளும் அணுகுமுறையும் நடவடிக்கைகளும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்கிறார் .

படத்தின் காப்புரிமை Getty Images

உள்நாட்டு வன்முறை, மோதல்கள் போன்ற காரணங்களால் வங்கதேசம், திபெத், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து கடந்த காலங்களில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர்.

அகதிகளுக்கான ஜெனிவா உடன்படிக்கைகளில், இந்தியா கையெழுத்திடாதபோதும், மனிதாபிமான அடிப்படையில் பல ஆண்டுகாலமாக, பல்வேறு நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால், பல தலைமுறைகளாக மியான்மரில் வாழ்ந்த ரோஹிஞ்சாக்களுக்கு அந்த நாட்டுக் குடியுரிமையே மறுக்கப்படுகிறது.

இந்நிலையில் ரோஹிஞ்சாக்கள் விவகாரத்தில் சர்வதேச அரசியல் உறவுகள், உள்ளூர் அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்துடன் இந்தியா செயல்படாவிட்டால் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு அதுவும் துணை போனதாகவே கருதப்படும்" என்கிறார் ஜோயீதா.

இதற்கிடையே, மியான்மர் ரோஹிஞ்சா முஸ்லிம்களை திருப்பி அனுப்ப இந்திய பரிசீலித்து வரும் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அந்த மக்களின் சார்பில் பல்வேறு அரசு சாரா அமைப்புகளும் தன்னார்வலர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வழக்கில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் "இந்தியாவில் குடியேறுவதற்கும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வசிக்கவும் அரசியல் சாசனத்தின் 19-ஆவது பிரிவு அளித்துள்ள அடிப்படை உரிமை, இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்" என்று கூறியது.

மேலும், அந்த உரிமையை நேரடியாகவோ, பிறரது மூலமோ கோரி உச்ச நீதிமன்றத்திடம் முறையிட சட்டவிரோத அகதிகளுக்கு உரிமை கிடையாது என்றும் அது கூறியது.

இந்தியாவில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் குடியேறுவதும், வசிப்பதும் சட்டத்துக்குப் புறம்பானது மட்டுமின்றி, அவர்கள் தங்கியிருப்பதால் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

1951 மற்றும் 1967-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகதிகள் தொடர்பான ஐ.நா. சாசனங்களில் இந்தியா கையெழுத்திடவில்லை. அதனால் அந்த ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள விதிகள் இந்தியாவுக்குப் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஆலோசனைக் குழு நிர்வாகி ரகு மேனன் "அகதிகளாகத் தஞ்சம் அடைய வரும் ரோஹிஞ்சாக்களை சட்டவிரோத குடியேறிகள் எனக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்ப முயலும் நடவடிக்கை தவறானது" என்றார்.

ஒரு நாட்டில் தஞ்சம் அடையும் அகதிகளை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பக் கூடாது என்ற சர்வதேச அகதிகள் சட்டத்தை மதிக்காமல் இந்தியா செயல்பட முற்படுகிறது என்கிறார் ரகு மேனன்.

இதேபோல, ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் அவர்களைக் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பும் முயற்சிகளை இந்தியா முன்னெடுக்கக் கூடாது என வலியுறுத்துகிறார் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் அமைப்பின் தெற்காசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "ஐ.நா. அகதிகள் சாசனத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்ற காரணத்துக்காக ரோஹிஞ்சாக்களை அகதிகளாகக் கருத வேண்டிய அவசியமில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாடு சரியானது அல்ல" என்றார்.

மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் நடந்த வன்முறைகள், மனித உரிமைகள் ஆகியவற்றை சர்வதேச சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு மனித உரிமை அமைப்புகளுக்கு உள்ளது என்று கூறும் கங்குலி, இந்த முயற்சிகளுக்கு பொறுப்புள்ள ஜனநாயக நாடு என்ற முறையில் இந்தியா உதவ வேண்டுமே தவிர, ரோஹிஞ்சாக்களைத் திருப்பி அனுப்புவதில் ஆர்வம் காட்டக் கூடாது என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ரோஹிஞ்சாக்கள் விவகாரத்தில் மியான்மர் வன்முறைகளை இந்திய வெளியுறவுத் துறை எதிர்க்கிறது. ஆனால், அந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட ரோஹிஞ்சாக்களை அவர்கள் தப்பித்து வந்த இடத்துக்குக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்ற நிலையை இந்திய உள்துறை எடுக்கிறது.

இந்த விஷயத்தில் இந்திய வெளியுறவுத்துறை மட்டுமே தலையிட்டு ராஜீய ரீதியிலான அழுத்தங்களை மியான்மருக்குத் தர வேண்டும் என்கிறார் மீனாக்ஷி.

இந்தியாவில் சட்டவிரோதமாக 40 ஆயிரம் ரோஹிஞ்சாக்கள் வசித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பில் சுமார் 16 ஆயிரத்து 500 ரோஹிஞ்சாக்கள் அகதிகளாக தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் இருந்து ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தப்பி இந்தியாவுக்கு வருவது இப்போது நடந்து வரும் செயல்பாடு கிடையாது. 2012-ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவுக்கு ரோஹிஞ்சாக்கள் வருவது அதிகரித்துள்ளது.

ஜம்முவில் ஆயிரக்கணக்கில் ரோஹிஞ்சாக்கள் குடியேறியபோது, அவர்களை சட்டவிரோத குடியேறிகள் எனக் கூறி நாடு கடத்தும்படி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 2012, 2013-ஆம் ஆண்டுகளில் போராட்டங்களை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து ரோஹிஞ்சாக்கள் வசித்த குடில்கள் சிலவற்றுக்கு அடையாளம் காணப்படாத விஷமிகள் தீ வைத்தனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தீவிரம் அடைந்ன.

இந்த நிலையில்தான் ஜம்மு, மணிப்பூர் ஆகிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் முயற்சிகளில் தொடர்புடையதாக சில ரோஹிஞ்சா முஸ்லிம் இளைஞர்கள் சிலரை இந்திய காவல்துறை கைது செய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

அண்மையில் அல் கயீதா அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி டெல்லிக்கு வந்த ரோஹிஞ்சா இளைஞர் ஷெளஹான் ஹக்கை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுபோன்ற ஒன்றிரண்டு சம்பவங்களைக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான சட்டவிரோத செயல்களில் ரோஹிஞ்சாக்கள் ஈடுபடக் கூடும் என்ற அச்சத்தால் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற குரல் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் தீவிரம் அடைந்ததாக, சர்வதேச ராஜீய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"உலகின் மதிக்கத்தக்க மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியா, மனிதாபிமானத்துடன் வங்கதேசம், இலங்கை, திபெத், பூடான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகளை வரவேற்கும் வேளையில், ரோஹிஞ்சாக்களை மட்டும் பாரபட்சமாக நடத்தக் கூடாது" என்று மனித உரிமைகள் ஆர்வலர் மீனாக்ஷி கூறுகிறார்.

உள்ளூர் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இந்திய மண்ணில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை வழங்குவதுதான் ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை. அதை இந்தியா சரிவர ஆற்ற வேண்டும் என மனித உரிமைகள் அமைப்புகள் எதிர்பார்க்கின்றன என்றார் அவர்.

இந்நிலையில் ரோஹிஞ்சாக்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷணும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"ரோஹிஞ்சாக்களை திருப்பி அனுப்பும் விவகாரம் தொடர்பான வழக்கு வரும் அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் ரோஹிஞ்சாக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என நம்புகிறேன்" என்று பிபிசி தமிழிடம் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.

ரோஹிஞ்சாக்களுக்கு ஆதரவான போராட்டங்களில் பங்கெடுத்தவரும் சமூக ஆர்வலருமான டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த், "நாடு கடந்து வரும் அகதிகளை ஆதரிக்க வேண்டியது இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளின் கடமை" என்று வலியுறுத்துகிறார்.

இந்தியாவில் தஞ்சம் அடையும் அகதிகளை அரவணைத்து வாழ்வளிக்காமல் அவர்களைத் திருப்பி அனுப்புவதில் அக்கறை காட்டினால், அது மியான்மரில் ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு மறைமுகமாகத் துணை போவதாகி விடும் என்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :