அழிவின் விளிம்பில் பொதுத்துறை வங்கிகள்... ஆட்டம் காணும் உள்நாட்டு உற்பத்தி!

முறைசாரா பொருளாதாரம். படத்தின் காப்புரிமை Daniel Berehulak
Image caption முறைசாரா பொருளாதாரம்.

பொருளாதாரத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்கான ஒரு திட்ட வரைவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம் சமர்பிக்கப்பட உள்ளது. அல்லது, அப்படி செய்தி வெளியிட்டுள்ளது பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்திதாள். 2014 மே மாதம் மோதி பிரதமராகப் பதவியேற்ற பிறகு பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தமாகியுள்ள இன்றைய சூழலில் இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வேகம்

2017 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.7 சதவீதமாக உள்ளது. 2016ம் ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் இது 9.1 சதவீதமாக இருந்தது. இதற்கு முன்பு பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் குறைவாக (5.3 சதவீதம்) சென்றது ஜனவரி-மார்ச் 2014 காலத்தில்தான். அப்போது மன்மோகன்சிங் நாட்டின் பிரதமர்.

இப்போது நாம் அடைந்திருக்கும் இந்த 5.7 சதவிகித உள்நாட்டு உற்பத்தியே, வழக்கமாக அரசாங்கம் செலவிடுவதைவிட அதிகமாகச் செலவு செய்து அடைந்தது. ஒட்டு மொத்த ஊள்நாட்டு உற்பத்தியில் 90 சதவீதமாக உள்ள அரசு சாரா துறை வெறும் 4.3 சதவீதமே வளர்ந்துள்ளது.

மொத்தமாக தொழில்துறையின் வளர்ச்சி 1.6 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது. தயாரிப்புத் துறையின் வளர்ச்சி 1.2 சதவிகிதமாகவும், கட்டுமானத் துறையின் வளர்ச்சி 2 சதவிகிதமாகவும் இருக்கிறது.

இரண்டு சதவீதத்துக்கும் மேலான விகிதம் எதுவுமே நல்ல வளர்ச்சியே என்று கருதப்படும் காலக்கட்டதில்தான் இப்போது நாம் வாழ்கிறோம். இது மேற்குலகிற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption மந்த நிலையில் கட்டுமானத் துறை.

இது அப்படியே நமக்கு சரியாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இந்தியாவில் வறுமையில் உழன்றுக் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான மக்களை நாம் மீட்க விரும்பினால், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வேகம் 7 சதவிகிதம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

உற்பத்தியும், தனிநபர் வருமானமும்!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பொருளாதார அறிஞர் விஜய் ஜோஷி தமது 'இந்தியாஸ் லாங் ரோட்- த சர்ச் ஃபார் ப்ராஸ்பரிட்டி' புத்தகத்தில் "நீண்டகால கட்டங்களில் கூட்டு நலன்களின் சக்தி எப்படிப்பட்டது என்றால், தனி நபர் வருமானத்தின் வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட இறுதியாக ஒவ்வொரு தனி நபர் ஈட்டும் வருமானத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுதான்.

படத்தின் காப்புரிமை Daniel Berehulak

வளர்ச்சி விகிதம் வெவ்வேறுவிதமாக இருக்கும் நிலையில் 2040 வாக்கில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை அவர் தமது புத்தகத்தில் கணிக்கிறார்.

"3 சதவிகித வளர்ச்சி இருக்கும் போது, தனிநபர் வருமானம் இரண்டு மடங்காகும். அது சீனாவில் இப்போது உள்ள தனிநபர் வருமானத்துக்கு நிகரானது. அதுவே வளர்ச்சி விகிதம் வருடத்துக்கு 6 சதவிகிதம் என்று இருக்கும்போது, தனிநபர் வருமானம் நான்கு மடங்காக உயரும்.

அது சிலி, மலேசியா மற்றும் போலாந்தில் இப்போது உள்ள தனி நபர் வருமானத்துக்கு நிகரானது.

வளர்ச்சி விகிதம் வருடத்துக்கு 9 சதவிகிதமாக இருக்கும்போது, தனிநபர் வருமானம் 8 மடங்காக உயரும். இது இன்றைய தேதியில் தனி நபர் வருமானம் உச்சத்தில் இருக்கும் எந்த நாட்டுக்கும் நிகரானதாகும்," என்கிறது அந்தக் கணிப்பு.

பொருளாதார வளர்ச்சி ஏன் இந்தியாவுக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது என்பதை இந்த கணக்குகள் விளக்குகின்றன.

இன்னொரு விஷயத்தையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு ஆண்டும் 12 மில்லியன் இளைஞர்கள் புதிதாக பணியில் சேரத் தயாராகிறார்கள்.

ஆனால் இதே அளவில் உள்கட்டமைப்பு துறையிலும், உற்பத்தி துறையிலும் வளர்ச்சி இருக்குமேயானால், மக்கள் தொகைக்கு ஏற்றபடி எப்படி வேலை கிடைக்கும்..?

சேவைத் துறையின் வளர்ச்சி வலுவானதாக இருக்கிறதென்றாலும், வேலைவாய்ப்புகள் பெருக தொழில்துறையின் துணையும் தேவை.

குறிப்பாக , உள்கட்டமைப்பு துறையின் பங்கு, ஏனெனில், பெரும்பாலான இளைஞர்கள் குறைந்த திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்கட்டமைப்புதுறைதான் வேலை அளிக்கும் துறையாக இருக்கிறது.

கல்விதிறனும், வேலைவாய்ப்பும்

படத்தின் காப்புரிமை Daniel Berehulak

ஏன் இளைஞர்கள் குறைந்த திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற காரணம் சிறந்த அடிப்படை கல்வி இல்லாமையே ஆகும். கல்வி நிலை அறிக்கை 2016ன்படி "ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்கும் திறன் கொண்ட மூன்றாம் வகுப்பு மாணவர்களின் விகிதம் 2014-ம் ஆண்டில் 40.2%ஆக இருந்தது. 2016ல் இது லேசாக உயர்ந்து 42.5% ஆக இருக்கிறது.

மேலும், "2014-ம் ஆண்டில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 25.4 % குழந்தைகளுக்குதான், இரண்டு இலக்க கழித்தல் கணக்கு தெரிந்திருக்கிறது. இது 2016-ம் ஆண்டில் 27.7%-ஆக சற்று உயர்ந்திருக்கிறது."

இது 2010-ம், ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டப்பின்பு உள்ள நிலையாகும்.

இந்த புள்ளிவிபரங்கள் ஏன் புதிதாக வேலைத்தேடும் இளைஞர்கள் திறனற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. திறன் குறைந்த இளைஞர்களுக்கு உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளால்தான் வேலை வழங்க முடியும். ஆனால், இந்த துறைகள் இப்போது மோசமானதொரு கட்டத்தில் இருக்கின்றன.

தொழிலாளர் சட்டங்கள்

படத்தின் காப்புரிமை Reuters

இந்தியாவின் சிக்கலான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் வியாபாரம் செய்வதற்கு எளிதாக இல்லாத நிலை ஆகியவை இந்த நிலை மேம்பட உதவவில்லை. இந்த நிலைதான், பல பேருக்கு வேலைவாய்ய்பு அளிக்கும் திறனுள்ள ஆயத்த ஆடை உற்பத்தி துறையும், சிறிய அளவிலேயே உள்ளதற்குக் காரணம்.

85 சதவிகித ஆயத்த ஆடை நிறுவனங்கள் எட்டு பேருக்கும் குறைவானவர்களுக்குதான் வேலை வாய்ப்பு வழங்கி உள்ளதாக, அண்மையில் வெளியான, "வியாபாரம் செய்வதற்கு எளிமை - இந்திய மாநிலங்களின் தொழில்துறை ஆய்வு" என்று தலைப்பிடப்பட்ட நிதி ஆயோக்கின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

விரிவான தளத்தில், 85 சதவிகித உற்பத்தி நிறுவனங்கள் சிறிய அளவிலானவை, 50 பேருக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பளிக்கும் திறன் கொண்டவை.

தங்களால் இயன்ற அளவு தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்தி உள்ளதாகவும், அதிக பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திறன் கொண்ட நிறுவனங்களை தொடங்க வேண்டியது இப்போது நிறுவனங்களின் பொறுப்பு என்றும் அரசாங்கம் நினைக்கிறது.

ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை என்பதை தரவுகள் நமக்கு காட்டுகின்றன. இந்திய தொழில்துறை அதிக முதலீடு சார்ந்தததாக இருக்கிறதே அல்லாமல் அதிக தொழிலாளார் சார்ந்ததாக இல்லை.

இதற்கெல்லாம் மேலாக, இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதம் பங்களிக்கும் விவசாயதுறைதான், மொத்த பணியாளர் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.

இந்த நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதத்தில் (ஏப்ரல் - ஆக்ஸ்ட் 2017) உள்ள ஏற்றுமதி, 2013 மற்றும் 2014 காலகட்டத்தைவிட குறைவு. இவையே இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைவாக உள்ளதற்கான காரணிகள்.

ஆண்டு முழுவதும் வேலைதேடும் 5 பேரில் 3 பேரால் மட்டும்தான் ஒரு பணியை தேடிக்கொள்ள முடிகிறது என்று 2015 - 2016- ஆம் ஆண்டு கணக்கு கூறுகிறது. ஆனால், கிராமப்புற இந்தியாவில் இந்த நிலை இன்னும் மோசம், ஆண்டு முழுவதும் வேலைதேடும் இருவரில் ஒருவருக்கு மட்டும்தான் வேலை கிடைக்கிறது.

பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம்

பணமதிப்பு நீக்கத்தின் எதிர்மறை விளைவுகள் நிலைமையை இன்னும் மோசமாக ஆக்கி இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

முறைசாரா துறையில் உள்ள நிறுவனங்கள்தான் உண்மையாக வேலை வாய்ப்புகளை உண்டாக்கி வந்தன. ஆனால், பணமதிப்பு நீக்கத்தினால் அந்த நிறுவனங்களை மூடும் நிலை உருவானது. நல்ல, சுலபமான வரி என்று அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை அப்படியாக இல்லை.

அது நிலைமை மேம்படவும் உதவவில்லை.

வாராக் கடன்

இந்தியாவின் அடுத்த பெருங்கவலை, அது தன்னுடைய பொதுத்துறை வங்கிகளை தற்போதுள்ளபடி சீர்கெட்ட நிலையில் இயங்க அனுமதிப்பது.

மார்ச் 31, 2017 வரையிலான கணக்குப்படி, 21 பொதுத்துறை வங்கிகளில் 17 வங்கிகள் வாராக் கடனாக 10 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் கொண்டுள்ளது. அதாவது இந்த வங்கிகள் அளித்த ஒவ்வொரு 100 ரூபாய் கடனிலும், 10 ரூபாய் ஏற்கெனவே வாராக்கடனாக உள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மட்டும் 25 சதவிகித அளவில் வாராக் கடனை கொண்டுள்ளது.

தொழில்துறைக்கு (அரசுக்கு வேண்டப்பட்ட முதலாளிகள் என்று புரிந்துகொள்ளவும்) அளித்த கடனில்தான் பெருமளவு வாராக்கடன் சேர்கிறது. அவற்றின் வாராக் கடன் 22.3 சதவிகிதம்.

இந்த வங்கிகளை காக்க, அவற்றை தொடர்ந்து இயங்க வைக்க 2009ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 1500 பில்லியன் ரூபாயை முதலீடாகக் கொடுத்திருக்கிறது அரசு. வங்கிகளின் வாராகடன்கள் பெருகிவரும் நிலையில், 2019- ஆம் ஆண்டு முதல் பேஸல் III விதிமுறைகள் (Basel III Norms) செயல்பாட்டுக்கு வர இருக்கும் நிலையில், இந்த வங்கிகளை தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டுமென்றால், அந்த வங்கிகளுக்கு பில்லியன் கணக்கான ரூபாய் முதலீடாக தேவைப்படும்.

அரசாங்கத்திடம் இவ்வளவு தொகை இல்லை. அதே நேரம், அரசு இந்த வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கும், சிலவற்றை மூடுவதற்கும் தயக்கம் காட்டி வருகிறது. வாராக் கடன்களின் தாக்கத்தால், பொதுத்துறை வங்கிகள் தொழில்துறைக்கு கடன் கொடுக்கவும் தயக்கம் காட்டி வருகின்றன.

இறுதியாக, இந்திய பொருளாதாரத்தில் ஏராளமான கட்டமைப்பு சிக்கல்கள் இப்போதுவரை உள்ளன. இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சி 7 - 8 % என்ற அளவில் இருக்க வேண்டுமானால், இந்த சிக்கல்களை போர்கால அடிப்படையில் எதிர் கொள்ள வேண்டும்.

( India's Big Government - The Intrusive State and How It is Hurting Us நூலின் ஆசிரியர் விவேக் கவுல்)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :