சென்னையில் எடைகுறைப்பு சிகிச்சையில் இறந்த பெண்: மருத்துவர்களின் அலட்சியம் காரணமா?

சென்னையில் லைஃப்லைன் என்ற தனியார் மருத்துவமனையில் எடைக்குறைப்பு சிகிச்சைக்குக்கு பிறகு வளர்மதி(46) என்ற பெண் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அந்த மருத்துவமனை தீவிரமாக மறுத்துள்ளது.

Image caption தனது மகளுடன் வளர்மதி

திருவண்ணாமலையைச் சேர்ந்த வளர்மதி மற்றும் அவரது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் தமிழக அரசின் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் எடை குறைப்பு சிகிச்சையை லைப்லைன் மருத்துவமனையில் எடுத்துக்கொண்டனர்.

சிகிச்சைக்கு பிறகு வளர்மதியைத் தவிர மற்ற மூவரும் குணம் பெற்ற நிலையில் வளர்மதி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவர்களின் அலட்சியத்தால் வளர்மதி இறந்துவிட்டதாக காவல்துறையிடம் அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அவர் இறந்ததற்கான காரணத்தை அறிய தமிழக அரசின் இரண்டு பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அரசு அமைத்துள்ள குழுவிடம் வளர்மதியின் சிகிச்சை தொடர்பான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும், முதல்கட்ட ஆய்வில் அவரின் மரணத்திற்கு காரணம் அவரது பலம் இழந்த இதயம் மட்டுமே என்றும் சிகிச்சையில் எந்த குறைபாடும் இல்லை என்பது தெரியவந்துள்ளது என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிபிசிதமிழிடம் பேசிய லைப்லைன் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் மருத்துவர் ராஜ்குமார், அறுவை சிகிச்சையில் உள்ள இடர்பாடுகளை தீர்க்கமாக ஆராய்ந்த பிறகுதான் வளர்மதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.

Image caption தனது மகளுடன் வளர்மதி

''முதல்கட்ட ஆய்வில் மருத்துவர்கள் மீதான புகார் முறியடிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை எங்கள் மீது தவறு இல்லை என்பதை தெளிவுபடுத்தும்'' என்றார் மருத்துவர் ராஜ்குமார்.

அவர் மேலும் கூறுகையில், வளர்மதியின் குடும்பத்தில் சிகிச்சை பெற்ற மற்ற மூன்று பேர் ஆரோக்கியமாக உள்ளனர் என்பதும், இந்த மருத்துவமனையில் 2002 முதல் 2017-ஆம் ஆண்டு வரை சுமார் 1,200 எடைக்குறைப்பு அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் லைஃப்லைன் மருத்துவமனையில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைக்கு ஆதாரம் என்றார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்கூட வளர்மதிக்கு சிகிச்சை அளிக்க அழைத்து வரப்பட்டனர் என்றார் ராஜ்குமார்.

''வளர்மதி இறந்த விஷயத்தில் அவரது குடும்பத்தினர் தவிர சில சாதி அமைப்பினர், அரசியல் கட்சிகள் எங்களுக்கு மிரட்டல் விடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களால் சிக்கல் மிகுந்த அறுவைசிகிச்சையை செய்யவேண்டாம் என்ற எண்ணத்தை மருத்துவர்கள் மத்தியில் ஏற்படுத்தும்,'' என்றார் மருத்துவர் ராஜ்குமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்