ஜெயலலிதா நைட்டியில் இருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை: தினகரன்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகள் உள்ளதாகவும், சிகிச்சையின் போது நைட்டியில், உடல்எடை குறைந்து காணப்பட்டதால் அந்த காட்சிகளை வெளியிட முடியவில்லை என்றும் அதிமுக துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை தனது இல்லத்தில் சந்தித்த தினகரன், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல அமைச்சர்களும் சந்தேகத்தை எழுப்பவது தேவையற்றது என்று குறிப்பிட்டார்.

ஜெயலலிதா சகிச்சை பெற்றபோது சசிகலாவே வீடியோ காட்சிகளை எடுத்ததாக தினகரன் தெரிவித்தார்.

''ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஐசியுவில் இருந்து மாற்றப்பட்டு சிறப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டார். அப்போது சசிகலா அவர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் உள்ளன. விசாரணை கமிஷன் கேட்டால் அதை தர நாங்கள் தயாராக உள்ளோம்,'' என்றார் தினகரன்.

படத்தின் காப்புரிமை Getty Images

''ஜெயலலிதாவின் மரணத்தை பற்றி விசாரணை கமிஷன் வைத்தாலும், சிபிஐ என யார் விசாரணை செய்தாலும் அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஓய்வு பெற்ற நீதிபதி இல்லாமல் பதவியில் உள்ள நீதிபதி ஒருவரை அமர்த்தி விசாரணை கமிஷன் நடத்தலாம்,'' என்று தினகரன் கூறியுள்ளார்.

மேலும் கட்சியில் நிலவும் குழப்பம் குறித்து பேசிய அவர், ''தற்போது பதவியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் தலைமை பதவியில் அம்மா இருந்ததால் அந்த பதவியில் யாரையும் வைத்து பார்க்க முடியாது என்ற சொல்லும்போது, அவர் வகித்த முதல்வர் பதவியை ஏன் ஏற்றுக்கொண்டார்கள்? பதவியை ராஜினாமா செய்து முறையாக தேர்தலை சந்திக்க அவர்கள் தயாரா?'' என்று கேள்வி எழுப்பினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
’’அடிமை மனநிலை கொண்டவர்களின் ஆட்சிதான் இங்கு நடந்து வருகிறது’’

சிகிச்சையின்போது ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக கூறியது பொய் என்று கடந்த வாரம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்து கருத்து தெரிவித்த அவர், ''தன்னுடைய பதவியை தக்கவைக்க ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பொய் கூறியுள்ளார். தற்போதும் பொய் கூறுகிறார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் வைத்தால் அதில் மாட்டிக்கொள்ளப்போவது அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம்தான்,'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்