'தூய்மை இந்தியா' திட்டம்: அவலம் குறையாத துப்புரவு பணியாளர் வாழ்க்கை

துப்புரவு பணி செய்யும் பெத்தலு

தூய்மை இந்தியா (ஸ்வச் பார்த்) திட்டத்தின் கீழ், பொது வெளியில் மலம் கழிப்பது நூறு சதவீதம் ஒழிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ள இந்திய மாவட்டங்களில், தமிழகத்தின் மதுரை மாவட்டமும் இடம் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி தொடங்கிய தூய்மை இந்தியா திட்டத்தின்படி, மதுரை உள்ளிட்ட இந்தியாவின் 187 மாவட்டங்கள் தூய்மை மாவட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

2017ல் தூய்மை இந்தியா திட்டம் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் சமயத்தில் மதுரையில் பொது இடங்களில் மலம் கழிக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இங்குள்ள 420 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 1,946 கிராமங்களும் தூய்மையாக உள்ளன என்று கூறி, இந்த மாவட்டத்தைத் தூய்மை மாவட்டப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் உண்மை நிலவரம் என்ன ?

மதுரை மாவட்டத்தில் பொது வெளியில் மக்கள் காலைக் கடன்களைச் செய்வது நின்றுவிட்டதா ?

பொது வெளிகளை திறந்த வெளிக்கழிப்பறைகளாக பயன்படுத்தும் பழக்கம் முற்றிலும் நின்று விடவில்லை என்பதற்கு ஆதாரங்கள் கிடைப்பது எளிதாகவே இருக்கிறது.

மாறாத துப்புரவு பணி

மதுரையில், மற்ற தாலுகாக்களை விட வாடிப்பட்டி தாலுகா, விராலிப்பட்டி கிராமத்தில் துப்புரவு பணி செய்துவரும் பெத்தலு, தினமும் தெருக்களை கூட்டி, சாக்கடை அடைப்புகளை நீக்குவதுடன், பொது வெளியில் கிடக்கும் மலத்தை அள்ளியெடுத்து ஒரு சட்டியில் நிரப்பி தலையில் சுமந்துசென்று கொட்டுகிறார் என்பதை நேரில் பார்க்கமுடிந்தது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரையில் உள்ள 420 கிராமங்களும் பொது வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத நூறு சதவீதம் தூய்மை மாவட்டம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது என்ற விவரம் எதுவும் இவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

2011ல் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி விராலிப்பட்டி கிராமத்தில் சுமார் 294 குடும்பங்கள் வசித்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 1,133 பேர் என்றும் அதில் 13 சதவீதம் குழந்தைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இங்குள்ள சிறு குடிசைகள் தொடங்கி மாடி வீடுகள் அமைந்துள்ள தெருக்களில் உள்ள கழிவுகளை சுத்தபடுத்தி கிராமத்தின் வெளியே உள்ள ஓடையில் பெத்தலு கொட்டுகிறார்.

''இருபது வருசத்துக்கு முன்ன ரூ.60க்கு வேலைக்கு செந்தேன்..இப்ப ரூ.4,500 சம்பளம் தர்ராஹ..குப்பை அள்ளற வண்டி வேணுமினு சொன்னேன்.. இன்னும் வந்தபாடு இல்ல...சனங்களும் தெருவுல போற பழக்கத்த விடல..,'' என தன்னுடைய வேலைபற்றி பேசினார் பெத்தலு.

அத்தியாவசிய உபகரணங்கள் இல்லாமல் வேலை

அவருடைய ஒரு நாள் வேலையை ஆவணப்படுத்த நாம் சென்றிருந்தபோது, காலை ஏழு மணிக்கு தொடங்கி ஒன்பது மணிவரை அவர் கிராமத்தில் உள்ள மனிதக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அள்ளி, சிறிய அலுமினிய சட்டியில் நிரப்பி பத்துமுறைக்குமேல் நடந்துசென்று கொட்டிவிட்டு வந்தார்.

சமீப நாட்களாக செவித்திறன் குறைந்துவிட்டதால், பெத்தலு யாரிடமும் அதிகம் பேசுவதுமில்லை. ''எனக்கு புரவு ( பிறகு) யாரும் இந்த தொழில செய்யக்கூடாது,'' என்று சொல்லும்போது பெத்தலுவின் குரலில் நடுக்கம், கண்களில் நீர் தளும்பியது.

குறைந்தபட்சம் கையுறை, செருப்பு, வாளி என துப்புரவு பணி செய்வதற்கான அத்தியாவசிய உபகரணங்கள் கூட அவருக்கு அளிக்கப்படவில்லை என்கிறார்.

பெத்தலுவின் மனைவி அழகம்மா நூறு நாள் வேலை திட்டத்தில் வரும் பணத்தைக் கொண்டு வாழ்கிறார். ''சில நேரத்தில இவுருக்கு மூனு மாசத்துக்கு புரவு சம்பளம் போடுவாஹ..நாம அத நம்பமுடியுமா?'' என்றார் அழகம்மா.

துப்புரவு பணியாளரான அப்பாவை எற்றுகொள்வதில் இறுக்கம்

பெத்தலுவின் மகள் மாரியம்மா, தனது அப்பா எப்போது அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று காத்திருப்பதாகக் கூறுகிறார்.

''என்னோட சின்ன வயசுல, மத்த பிள்ளைகளிட்ட எங்க அப்பா வீதி கூட்டுராஹனு சொல்லவே வெக்கப்படுவேன். சில நாள்ல அவர் சட்ட துணியெல்லாம் குப்பையும், மலமும் ஒட்டியிருக்கும். அதனலே எத்தனனை நாள் அழுதிருக்கேன்.. எங்க அப்பா இந்த வயசிலயும் இந்த வேலைசெய்யணுமா? அதுக்கு சம்பளம் கொடுக்கறோம்னு சொல்லிட்டா எல்லாத்தையும் நியாயப்படுத்தமுடியாமா? என்றார்.

நமது பயணத்தின்போது, விராலிப்பட்டி கிராமத்தில் இருந்த ஒரு பொதுக் கழிப்பிடத்தை பார்த்தவுடன், அந்த கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்தி நெடுநாட்களாகிவிட்டது என்று தெரிந்தது. அனைத்து கழிவறைகளும் மிகுந்த அசுத்தமாகவும், உள்ளே நுழையமுடியாத நிலையில் காணப்பட்டன, தொட்டியில் தண்ணீர் இல்லை.

கிராம மக்களிடம் பேசியிபோது, பெயர் குறிப்பிட விருப்பம் இல்லாதவர்கள், வீட்டில் கழிப்பிடம் இருந்தாலும் சிலர் பொது வெளியில்தான் மலம் கழிக்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டனர்.

நாம் பெத்தலு வேலைசெய்யும் நிலையை காணொளியாக பதிவு செய்துகொண்டிருந்தபோது கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவர் வந்து ''பெத்தலு செய்யற வேலைக்குதான் காசுகொடுக்கறோம்ல..எதுக்கு படம் எடுக்கறீங்க?'' என்றார்.

துப்புரவுத் பணியாளர்கள் சங்கத்தின் பார்வை

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரையின் மையப் பகுதிகள், உசிலம்பட்டி என ஆகிய பகுதிகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் வேலையை துப்புரவுப் பணியாளர்கள் செய்யும் நிலை இன்றும் தொடர்கிறது என்கிறார் தமிழ்நாடு துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு.

''உசிலம்பட்டியில் சில கிராமங்களில் கோவில்கள் இருப்பது மற்றும் கோவில் தேர் செல்லும் வழிகளில் உள்ள வீடுகளில் கழிப்பிடம் காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு நடந்து வருகிறது. தூய்மை இந்தியா திட்டம், மத்திய அரசுக்கு விளம்பரம் தேடும் திட்டம் மட்டுமே. உண்மையில் நகரம் மற்றும் கிராமப் புறங்களில் கழிப்பிட வசதிக்கு முக்கியத்துவம் குறைவுதான். பொதுக் கழிப்பிடங்கள் பலவும் மோசமான நிலையில் இருப்பதும் ஒரு காரணம்,'' என்றார் அவர்.

கழிப்பிட வசதி இருந்தாலும் சில கிராமங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் மலம் அள்ளும் வேலையைச் செய்யவேண்டும் என்று நிலை உள்ளது என்று செல்லக்கண்ணு மேலும் கூறினார்.

விராலிப்பட்டியில் உள்ள பெத்தாலுவைப் போல பல தொழிலாளர்களின் நிலை வெளிச்சத்திற்கு வருவதில்லை என்றார் அவர்.

மதுரை மாவட்ட அதிகாரிகளின் விளக்கம்

மதுரை மாவட்டத்தில் விராலிப்பட்டியை உள்ளடக்கிய வாடிப்பட்டி பஞ்சயத்து நிர்வாக அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் நூறு சதவீதம் தூய்மையான கிராமம் என்று விராலிப்பட்டியை சொல்லமுடியாது என்று வெளிப்படையாக பேசினார்.

''நாங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினாலும், ஒவ்வொரு வீட்டினரும் அவர்களாக முயற்சி எடுத்தால் மட்டுமே தூய்மையான மாவட்டம் என்ற இலக்கை அடையமுடியும். பெத்தலுவின் பணிச்சுமையைக் குறைக்க ஏற்பாடு செய்கிறோம். ஆனால் அவரது சம்பளத்தை அதிகரிக்க இடமில்லை.அங்குள்ள பொதுக் கழிப்பிடத்தை சீரமைக்க முயற்சிகள் எடுப்போம்,'' என்று தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் பேசியபோது நூறு சதவீதம் தூய்மை என்பதே எங்கள் இலக்கு, சில கிராமங்களில் தொய்வு ஏற்படுவது உண்டு என்றார். ''விராலிப்பட்டி கிராமத்திற்கு கவனம் செலுத்துவோம். மதுரையில் உள்ள 420 கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கழிப்பிடம் அமைத்துள்ளோம் மற்றும் வசதி இல்லாதவர்களுக்கு பொதுக்கழிப்பிடம் அமைத்துள்ளோம் என்பதைக் கொண்டு தூய்மையான மாவட்ட பட்டியலில் மதுரை இடம்பெற்றுள்ளது,'' என்றார்.

கிராமங்களில் பொது இடங்களில் மலம் கழிக்கும் பழக்கத்தை நிறுத்த தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்துவருகின்றன என்றும் தூய்மை மாவட்டம் என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ள விராலிப்பட்டி போன்ற கிராமங்கள் சவாலாக இருந்தாலும், சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்