விவசாயிகள் 24 மணி தடையில்லா மின்சாரத்தை வேண்டாமென்கிறார்கள். ஏன்?

ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் தண்ணீரை குடிக்கும் விவசாயி படத்தின் காப்புரிமை Getty Images

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க தெலங்கானா அரசு முயன்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், அந்த மாநிலத்தில் சில கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எங்களுக்கு ஒன்பது மணி நேரம் மட்டும் மின்சாரம் வழங்கினால் போதும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த கோரிக்கையினை, மனுவாக அதிகாரிகளிடமும், பிற தலைவர்களிடமும் சமர்பித்து இருக்கிறார்கள்.

`24 மணிநேரம் தடையில்லா மின்சாரம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பார்ட்டம்` என்பதுதான் இப்போதெல்லாம் தலைப்புச் செய்தி ஆகும் தற்போதைய சூழ்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் நிலைமை முற்றிலும் வேறு விதமாக உள்ளது.

படத்தின் காப்புரிமை Anji reddy

தெலங்கானா மாநிலத்தில் சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள கொரண்ட்லா, கம்பீர்ராவ்பெட் மண்டல் ஆகிய கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எங்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வேண்டாம் என்ற முடிவினை எடுத்துள்ளார்கள். இது தொடர்பான கோரிக்கை மனுவினை தகவல்தொடர்பு துறை மற்றும் பஞ்சாயத்து ராஜின் அமைச்சரான கெ. தராகா ராமா ராவிடம் சமர்பித்துள்ளார்கள். தராகா ராமா சிரிசில்லா தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

"நீர் வளம் இல்லை"

"எங்கள் கிராமத்தில் குறைவான நீர் வளமே உள்ளது; நாங்கள் எங்களின் விவசாய தேவைகளுக்காக நிலத்தடி நீரையே சார்ந்து உள்ளோம். இப்படியான சூழ்நிலையில், அரசாங்கம் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை வழங்கினால், நிலத்தடி நீர் வளத்தை முற்று முழுவதுமாக உறிஞ்சி எடுக்க அதுவே காரணமாக அமையும். அனைத்து ஆழ்துளை கிணறுகளும் வற்றிவிடும். இது விவசாய துறைக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை" என்று பிபிசியிடம் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி எர்ராம் அஞ்சிரெட்டி கூறினார்.

மேலும் அவர், "எங்களுக்கு 9 மணி நேரம் மின்சாரம் வழங்கினால் போதும் என்ற எங்கள் கோரிக்கை மனுவினை அமைச்சரிடம் வழங்கி உள்ளோம்." என்றார்.

இதுக் குறித்துப் பேசிய உள்ளூர் அதிகாரிகள், இப்போது நாங்கள் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவோம். மின்சாரம் கொடுக்கப்படும் நேரத்தைக் குறைப்பது குறிப்பு பிறகு திட்டமிடுவோம் என்றார்கள்.

பிபிசியிடம் பேசிய அன்னேபார்டி கிராமத்தைச் சேர்ந்த ஒய்.புஷ்பலதா, "எங்கள் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மின்சாரம் கொடுக்கப்படும் நேரத்தை குறைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மின்சாரம் எந்நேரமும் வழங்கப்பட்டால், அது நிலத்தடி நீர் பற்றாகுறைக்கு வழிவகுக்கும். அதனால்தான், எங்களுக்கு 9 மணி நேர மின்சாரமே போதும் என்கிறோம்." என்றார்.

நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நீர் தேவைகளுக்காக ஆழ்துளைக்கிணற்றையே நம்பி இருக்கிறார்கள். பல அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தும் தண்ணீர் வராததால், பல விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளார்கள்.

நல்கொண்டா மாவட்டத்தில் இந்த முறை பெய்த பலத்த மழையால், நிலத்தடி நீர் அளவு உயர்ந்துள்ளது. ஆனால், இந்த `தடையில்லா மின்சாரம்`, நிலத்தடி நீர் குறைவதற்கு வழிவகுத்துவிடுமோ என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

மின்சாரத்துறையின் கோட்ட பொறியாளர் நீலம் ஜனய்யா, "சோதனை முயற்சியாக, 24 மணி நேர தடையில்லா மின்சாரத்தை மெடாக், நல்கொண்டா மற்றும் கரீம் நகர் ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. அடுத்த ரபி பருவத்துக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த திட்டத்தை பரவலாக்க முடிவு செய்திருக்கிறது." என்றார்.

விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ள போதிலும், இது தொடர்பாக அரசாங்கம் எந்த அதிகாரப்பூர்வ முடிவினையும் எடுக்கவில்லை. ஆனபோதிலும், உள்ளூர் அதிகாரிகள் மின்சாரம் வழங்கும் நேரத்தை 9 - 12 மணி நேரமாக குறைத்து இருக்கிறார்கள்.

24 மணி நேர தடையில்லா மின்சாரத்தை விரும்பாத விவசாயிகள், இத்தனை நாட்களாக அவர்கள் பயன்படுத்தி வரும் தானியங்கி மோட்டாரை தங்கள் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து அகற்றலாம். ஆனால், விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள மோட்டருக்கு வரும் மின்சாரத்தை அணைத்தால், கிணற்று தண்ணீர் பிற விவசாயிகளின் நிலத்துக்கு சென்று விடுமோ என்று அஞ்சுகிறார்கள். அதனால், அவர்கள் மின்சாரம் இருக்கும் போதெல்லாம் நிலத்தடி நீரை உறிஞ்சி நிலத்துக்கு பாய்ச்சுகிறார்கள்.

தெலுங்கானாவில் ஆழ்துளைக் கிணறுகள்தான் விவசாய தேவைகளுக்கான மிகப்பெரிய ஆதாரமாக இருக்கின்றன . நல்கொண்டா மாவட்டத்தில் மட்டும் 3.7 இலட்சம் ஆழ்துளை கிணறுகள் உள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்