சபர்மதி: சிறைச்சாலை காந்தி கோயிலாக மாறியது எப்படி?

காந்தி கோலி
Image caption காந்தி கோலி உள்ளே, விளக்கேற்றி காந்திக்கு மரியாதை செலுத்தும் கைதி

இந்திய விடுதலை போராட்டத்தின்போது, காந்தியடிகள் முதல் முறையாக கைது செய்யப்பட்ட பிறகு, சபர்மதி மத்திய சிறைச்சாலையில் உள்ள செல் ஒன்றில் தனது 10 நாள் சிறைவாசத்தைக் கழித்த இடத்தில், இந்தக் கோயில் அமைந்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், சபர்மதி சிறைக்கு உள்ளே அச்சிறைக் கைதிகளுக்கான இக்கோயில் அமைந்துள்ளது.

சபர்மதி மத்திய சிறைக்கு உள்ளே, குறிப்பிட்ட செல் ஒன்று, அனைவரின் ஆர்வத்தையும் தூண்டுகிறது.

மகாத்மா காந்தி, சபர்மதி மத்திய சிறையில் 10 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்தார். அவர் மார்ச் 11, 1992 இல் கைது செய்யப்பட்டு 10 க்கு 10 அடி அளவுள்ள சிறை செல்லில் அடைக்கப்பட்டிருந்தார்.

அங்கு கைதிகள் நேர்மறை அதிர்வுகளை உணர்வதோடு, காந்தியடிகள் தங்களுக்கு அருகில் இருப்பதைப் போல் உணர்கின்றனர்.

ஒவ்வொரு காலை மற்றும் மாலை வேளையிலும், காந்திக்கு மரியாதை செலுத்துவதற்காக, காந்தி கோலி என பெயரிடப்பட்ட அவர் வசித்திருந்த செல்லில், பல கைதிகள் விளக்கேற்றி காந்தியை கௌரவிக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது.

" நான் ஓவியங்கள் வரைவதற்காக போகும் ஒரே இடம் காந்தி யார்ட்தான்'' அங்கே இருந்தபோது, ​​நேர்மறையான அதிர்வுகளை நான் உணர்ந்தேன்" என்று முன்பு வாழ்நாள் சிறைவாசத்தை அனுபவித்திருந்த நரேந்திராசின் கூறினார்.

"காந்தி தற்போது உடலளவில் உயிருடன் இல்லை, ஆனால், கைதிகள் மத்தியில் அவர் உடலாலும், ஆவியாலும் தொடர்ந்து வாழ்கிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது." என்று தனது வாழ்நாள் சிறைவாசம் முடிந்த பிறகு, வாழ்க்கையின் இரண்டாவது பகுதியை தற்போது வாழ முயற்சிக்கின்ற நரேந்திராசின் கூறினார்.

Image caption சபர்மதி மத்திய சிறைக்கு உள்ளே காட்சியளிக்கும் காந்தி யார்ட்

சபர்மதி சிறை கண்காணிப்பாளர், ஐபிஎஸ் பிரேம்வீர்சிங் கருத்து தெரிவிக்கையில், "காந்தி கோயிலுக்கு உள்ளே இருப்பது ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வைத் தருகிறது. அதனால் தானோ என்னவோ கைதிகள் இங்கே தங்கள் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள் என்பது புரிகிறது" என்றார்.

தற்போது இங்கு ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வருபவரும், காந்தியை கடவுளுக்கு ஒப்பாக கருதுபவருமான ஜெய்ராம் தேசாய் கூறுகையில், " ஒரு கோயிலில் கடவுள் வாழ்கிறாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாத ஒன்று, ஆனால், காந்தி ஒரு சமயம் இங்கே வாழ்ந்திருக்கிறார்." என்று கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், "இன்றும்கூட நம் மத்தியில் அவர் வாழ்வதை நான் உணர்கிறேன், அதனால்தான், அவருக்கு வணக்கம் செலுத்துவதற்காக ஒவ்வொரு நாளும், ஒரு விளக்கு ஏற்றுகிறேன். அவ்வாறு செய்தபின் நான் நன்றாக உணர்கிறேன். " என்றார்.

Image caption சபர்மதி மத்திய சிறைச்சாலையில் 10 நாட்கள் காந்தியடிகள் வாழ்ந்த இடம் காந்தி கோவிலாக மாறியது

கடந்த 33 ஆண்டுகளாக சபர்மதி மத்திய சிறைச்சாலையில் ஒரு இசை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் விபகர் பட், இந்த செயல்பாடுகளின் தொடக்கத்தைப் பற்றி விசாரித்தபோது, தனது சந்தேகங்களை வெளிப்படுத்தினார்.

"கைதிகளுக்கு மத்தியில் விளக்கு ஏற்றும் இந்த பழக்கம் துவங்கியதிலிருந்து அதை பற்றி நான் அறிந்திடவில்லை. இருந்தபோதிலும் நான் இங்கு வந்ததிலிருந்து, இங்கு நடைபெறும் இந்த பழக்கத்தை பார்த்திருக்கிறேன்''.

இந்திய விடுதலை போராட்டத்தின் போது, காந்தியைத் தவிர, சர்தார் வல்லபாய் பட்டேலும் சபர்மதி சிறையில் தங்கி இருந்திருக்கிறார்.

கைது செய்யப்பட்டபின், அவரும் சபர்மதி சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டார். பின்னர் காந்தி கோலியின் அருகே அமைக்கப்பட்டுள்ள அந்த இடம் சர்தார் யார்ட் என்று பெயர் பெற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்