காந்தியை ஏழை மக்களுடன் நெருக்கமாக்கிய மதுரைப் பயணம்!

மகாத்மா காந்தி படத்தின் காப்புரிமை Gandhi Film Foundation

மேல்நாட்டில் சட்டப் படிப்பு பயின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1888ஆம் ஆண்டுவாக்கில் கோட்-சூட் என வெளிநாட்டினரின் உடைகளை அணியும் பழக்கத்தை கொண்டிருந்தார். அதற்கு 33 ஆண்டுகளுக்கு பிறகு 1921ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரைக்கு சென்ற அவர் இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு என தனது ஆடைப் பழக்கத்தை மேற்கொண்டார்.

அவரது ஆடை அணியும் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். காரணத்தை ஆராய்வோம்.

பீகாரின் சம்பாரண் மாவட்டத்தில் காந்தி இந்தியாவில் முதன் முறையாக சத்தியாகிரகம் என்ற ஆயுதத்தை வெற்றிகரமாக பயன்படுத்தினார்.

1917 ஏப்ரல் 15ஆம் நாளன்று மோதிஹாரி ரயில்நிலையத்தில் மதியம் மூன்று மணிக்கு வந்து இறங்கிய காந்தியை பார்ப்பதற்காக பெருமளவிலான விவசாயிகள் கூடினார்கள்.

அவர்கள் அனைவரும் ஆங்கில ஆட்சியாளர் நீலின் வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள். அவர்கள் தங்கள் வயலில் நெல்லோ வேறு தானியங்களோ விளைவிக்க முடியவில்லை.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் பசி பட்டினியுடன், நோய்வாய்ப்பட்டு பலவீனமானார்கள். காந்தியை சந்தித்த அவர்கள் தங்கள் துக்கத்தை எடுத்துரைத்தார்கள்.

வந்திருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். அன்றைய வழக்கப்படி அவர்கள் தலையில் முக்காடு அணிந்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை Gandhi Film Foundation

சம்பாரண் சென்ற காந்தி

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து பெண்கள் கூறினார்கள். தண்ணீர் எடுக்க தடுக்கப்படுவது, இயற்கை உபாதைகளை கழிக்க ஒதுக்குப்புறங்களுக்கு செல்வதற்கும் நேரம் ஒதுக்க மறுப்பது போன்ற தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சங்கடங்களை காந்தியின் முன்வைத்தனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், ஆங்கிலேய முதலாளிகளுக்கு பணிபுரிய நிர்பந்திக்கப்பட்டார்கள்.

இவற்றுக்கு பதிலாக ஒரு ஜோடி உடை தங்களுக்கு வழங்கப்படுவதாக சொன்னார்கள். சில பெண்களோ ஆங்கிலேயர்களுக்கு படுக்கையறை தாசிகளாகவும் இருக்க வேண்டிய கட்டாயத்தையும் காந்தியிடம் கூறினார்கள் அந்த அபலைப் பெண்கள்.

காந்தி சம்பாரண் சென்றபோது, சட்டை, வேட்டி, கையில் கடிகாரம், தோலால் செய்யப்பட்ட காலணி, தோளில் அங்கவஸ்திரம், தலைக்கு தலைப்பாகை என ஆடம்பரமான உடையணிந்திருந்தார்.

இவை அனைத்தும் இந்திய மில்களிலோ அல்லது கைத்தறியிலோ தயாரிக்கப்பட்டவை.

தொழிற்சாலை உரிமையாளர் நீல், தாழ்ந்த ஜாதி பெண்களும் ஆண்களும் காலணிகளை அணிய அனுமதிக்கவில்லை என கேள்விப்பட்ட காந்தி, உடனே காலணிகள் அணிவதை நிறுத்தினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

1917 ஏப்ரல் 16 முதல் 18 வரை காந்தி நான்கு கடிதங்கள் எழுதினார். அதில் இரண்டு பிரிட்டன் அதிகாரிகளுக்கும், இரண்டு தனது நண்பர்களுக்கு எழுதப்பட்டவை. பிரிட்டனின் ஆணையை ஏற்க முடியாது என்று அதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்களில் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

சம்பாரணில் இருந்து காந்தி வெளியேறவேண்டும் என்று ஆங்கிலேய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

சம்பாரண் விவசாயிகளின் அவலநிலை பற்றி நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்ட காந்தி, அவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தார்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு உதவுவதற்காக, பள்ளிகள், ஆசிரமங்கள் அமைக்க உதவி தேவை என்று கேட்டுக்கொண்டார் காந்தி.

இதைத்தவிர, அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற கைது நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்களை முறைப்படி பராமரிக்கவேண்டும் என்றும் காந்தி கேட்டுக்கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

சத்தியாக்கிரகத்தின் இரண்டாம் கட்டம்

1917 நவம்பர் எட்டாம் தேதியன்று காந்தியடிகள், சத்தியாகிரகத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கினார்.

தன்னுடன் பணியாற்றும் பிற தொண்டர்களுடன் சம்பாரண் சென்றார் காந்தி. அதில் அவந்திகா பாயி, கஸ்தூர்பா காந்தி, மணிபாயி பாரீக், ஆனந்திபாயி, ஸ்ரீயுத் திவாகர் (பூனா பீமேஸ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்) உட்பட ஆறு பெண்களும் காந்தியுடன் சம்பாரணுக்கு சென்றர்கள்.

அங்கு மூன்று பள்ளிகள் தொடங்கப்பட்டன. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்தி மற்றும் உருதுவில் கல்வி கற்பிக்கத் தொடங்கினார்கள்.

அத்துடன் விவசாயம் தொடர்பான வேலைகளும் கற்பிக்கப்பட்டன. கிணறுகளையும், கால்வாய்களையும் சுத்தப்படுத்துவதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டன. கிராமத்தின் சாலைகளையும் அனைவரும் இணைந்து சுத்தப்படுத்தினார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

விவசாய வேலை செய்யும் பெண்கள் தினசரி குளித்து, சுத்தமான ஆடை உடுத்தினால் சுகாதாரமாக இருக்கலாம் என்பதை தனது மனைவி கஸ்தூரிபாய் மூலம் கிராமப் பெண்களுக்கு அறிவுறுத்தினார் காந்தி.

கஸ்தூரிபாய் பெண்களிடம் சென்று பேசிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு பெண் கேட்டார், "என் வீட்டை நன்றாகப் பாருங்கள், இங்கு ஆடைகள் வைப்பதற்கான அலமாரியோ அல்லது சூட்கேஸ் எதாவது தென்படுகிறதா? உடுத்தியிருக்கும் இந்த ஒரே புடவைதான் என்னிடம் இருக்கிறது. இதை நான் துவைத்தால், அது உலரும்வரை எதை உடுத்துவேன்? முதலில் காந்தியிடம் சொல்லி எனக்கு இன்னொரு சேலை வாங்கிக்கொடுங்கள். பிறகு நான் தினமும் குளித்து சுத்தமான ஆடை உடுத்துகிறேன்."

இதைக்கேட்ட காந்தி, தனது ஒரு மேல்துண்டை கொடுத்து அந்த பெண்ணிடம் கொடுக்கச் செய்தார். அதன்பிறகு காந்தி மேல்துண்டு அணியும் பழக்கத்தையே கைவிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தலைப்பாகை அணிவதை கைவிட்டார் காந்தி

1918இல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் போராட்டத்தில் பங்கேற்றபோது, தனது தலைப்பாகைக்கு பயன்படுத்தப்படும் துணியில் குறைந்தது நான்கு பேரின் உடலை மறைக்கமுடியும் என்பதை தெரிந்துக் கொண்ட காந்தி, தலைப்பாகை அணிவதை கைவிட்டார்.

பருத்தி சாகுபடி தொடர்பாக விவசாயிகளுக்கு யாரும் நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதற்காக, 1920, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று விவசாயிகளின் சத்யாகிரகத்தில் பங்கேற்ற காந்தி, கைத்தறி தொடர்பாக சபதம் மேற்கொண்டார்.

மான்ச்செஸ்டர் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக இந்திய விவசாயிகள் பருத்தி விளைவிக்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

அன்று அண்ணல் காந்தி எடுத்த சபதம் இது,"இன்று முதல் என் வாழ்க்கையில் எப்போதும் கைத்தறி ஆடைகளையே உடுத்துவேன்".

1921இல் காந்திஜி சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் பயணித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"ரயில் பயணிகளில் பலர் வெளிநாட்டு மில் துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். கைத்தறி ஆடை அணியுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு தலையசைத்து மறுப்பு தெரிவித்த அவர்கள், கைத்தறி துணி வாங்கும் அளவுக்கு வசதியில்லை என்று சொன்னார்கள்" என்கிறார் காந்தி.

வேட்டியை ஏற்றுக்கொண்டார்

"இந்த கூற்றுக்கு பின்புலமாக இருந்த அடிப்படை உண்மைகளை நான் உணர்ந்தேன். நான், வேட்டி, மேலாடை, தலைப்பாகை, அங்கவஸ்திரம் என பல ஆடைகளை அணிந்திருந்தேன். லட்சக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணிகூட இல்லாமல் இருக்கும்போது, நான் இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா என்ற கேள்வியை எழுப்பியது" என்றார் காந்தி.

மதுரையில் நடந்த கூட்டத்திற்கு அடுத்த நாளில் இருந்து நான் இடுப்பில் வேட்டியும், தோளில் துண்டும் அணியத்தொடங்கி அவர்களுள் ஒருவராக மாறினேன்."

இடையில் சிறு வேட்டியும் தோளில் துண்டும் அன்னிய ஆடைகளை விலக்கும் சத்தியாகிரக போராட்டத்தின் ஓர் அடையாளச் சின்னமாக மாறியது.

இது காந்தியை ஏழை மக்களுக்கு மேலும் நெருக்கமானவராக்கி, அவரை நோக்கி ஈர்த்தது. ஏகாதிபத்தியம் எப்படி இந்தியாவை ஏழை நாடாக மாற்றியது என்பதைக் காட்டியது காந்தியின் ஆடைகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்