ஹரியானா சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் கைது

  • 3 அக்டோபர் 2017
ஹனிப்ரீத் ஹன்சான் படத்தின் காப்புரிமை TWITTER

பாலியல் வல்லுறவு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் என்று சொல்லப்படும் ஹனிப்ரீத் ஹன்சான் கைது செய்யப்பட்டார். குர்மீத் ராம் ரஹீம் சிங் சிறைக்கு சென்றதும் ஹன்சான் தலைமறைவாகிவிட்டார்.

புதன்கிழமையன்று ஹனிப்ரீத் ஹன்சான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பஞ்ச்குலா காவல்துறை ஆணையர் எஸ்.எஸ்.சாவ்லா தெரிவித்தார்.

ஹனிப்ரீத் ஹன்சானுடன் வேறு ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டிருப்பதாக உள்ளூர் செய்தியாளர் ரவீந்தர் சிங் ராபின் கூறுகிறார். ஆனால் மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

ஹனிப்ரீத்தை தேடுவதற்காக காவல்துறையினர் நேபாளம் வரை சென்றனர். தொலைக்காட்சி சேனல்களில் ஹனிப்ரீத் பேசிய பிறகு அவர் இருக்குமிடத்தை போலிசார் தெரிந்துக்கொண்டு, கைது செய்துள்ளனர்.

தேச துரோக வழக்கு

முன்னதாக, ஹனிப்ரீத் தில்லி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார், ஆனால் ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், சரணடைய உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 25ம் தேதி குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த உடன், அதை எதிர்த்து வன்முறை போராட்டங்கள் நடத்தியது தொடர்பாக காவல்துறை ஹனிப்ரீத் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER

தேரா சச்சா செளதாவில் ஹனிப்ரீத்துக்கு முக்கியத்துவம்

15 ஆண்டு கால விசாரணை முடிவில் குர்மீத் ராம் ஹரீம் சிங்கை "குற்றவாளி" என்று கூறிய ஹரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அதன் பின், நடந்த வன்முறை சம்பவங்களில் பஞ்ச்குலா நகரத்தில் மட்டும் 38 பேர் உயிரிழந்தனர். இவை உலகம் முழுவதும் தலைப்பு செய்தி ஆனது.

இதற்கு முன்னரே, ஹனிபிரீத்தின் முன்னாள் கணவர், விஷ்வாஸ் குப்தா, ஊடகங்களில் பல பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

குர்மித் ராம் ரஹீம் சிங், ஹனிப்ரீத்தை தனது வளர்ப்பு மகள் என்று கூறி வந்த நிலையில் அதை மறுத்த விஷ்வாஸ், இருவருக்கும் இடையே கணவன் மனைவி போன்ற உறவு நிலவுவதாக குற்றம் சுமத்தினார். இருவரும் பாலியல்ரீதியாக தொடர்பு கொண்டிருப்பதை தான் நேரிடையாக பார்த்ததாக முன்னாள் கணவர் கூறிய குற்றச்சாட்டை, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஹனிப்ரீத் மறுத்தார்.

படத்தின் காப்புரிமை COURTESY: HONEYPREET INSAN

2002 இல் ராம் ரஹீம் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டது. ஆசிரமத்தில் இருந்த சிஷ்யை ஒருவர் கடந்த 2002-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயிக்கு அநாமதேயமாக எழுதிய கடிதத்தில் தனக்கு நேர்ந்த இன்னல்களை விவரித்திருந்தார்.

தொடர்ந்து மூன்று வருடங்களாக தன்னை குர்மித் ராம் ரஹீம் பாலியல் ரீதியாக வன்முறை செய்து வந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹனிப்ரீத் ஆக மாறிய பிரியங்கா தனேஹா

2009ஆம் ஆண்டில் ராம் ரஹீம் ஹனிப்ரீத்தை தத்தெடுத்தார். பிரியங்கா தனேஜா என்ற இயற்பெயரைக் கொண்ட அவரின் பெயரும் மாற்றப்பட்டது.

பிரியங்காவுக்கும் விஷ்வாஸ் குப்தாவுக்கும் 1999இல் திருமணம் நடைபெற்றது. விஷ்வாஸின் குடும்பம் தேரா சச்சா அமைப்பின் மேல் பற்றுக் கொண்டிருந்ததால், விஷ்வாஸ் தம்பதியினர் குர்மித் ராம் ரஹீமின் அமைப்பிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

2011இல் விஷ்வாஸ் விவாகரத்து கோரினார். குர்மித் ராம் ரஹீமுடன், பிரியங்கா தவறான உறவு வைத்துக் கொண்டிருந்ததாகக் கூறி விஷ்வாஸ் விவாகரத்து கோரினார் என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்