பச்சை குத்த மறுக்கும் இந்திய பெண்கள்: காரணம் என்ன?

இந்தியா மற்றும் உலகெங்கிலும் உடலில் பச்சை குத்திக்கொள்வது சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதின் அடையாளமாகவே தற்காலத்தில் பார்க்கப்படுகிறது. தாங்கள் யார் என்பதை தனித்துவத்துடன் வெளிப்படுத்திக் காட்டுவதன் அடையாளமாக இளைஞர்கள் பலரும் பச்சை குத்திக்கொள்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை WaterAid/ Ronny Sen

ஆனால், பச்சை குத்திக்கொள்ளாமல் இருப்பதென்பது எனக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வழி அல்ல, நான் போராடிப் பெற்ற சுதந்திரத்தை உறுதிபட வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். அது "எனக்கு நானே கோடு கிழித்துக் கொள்ளமாட்டேன்," என்று என் பாணியில் கூறுவதாகும்.

பச்சை குத்திக்கொள்ளவதும், ஆபரணங்கள் அணிவதற்காக காது மற்றும் மூக்கில் துளையிட்டுக்கொள்வதும் பெண்களை அடிமைப்படுத்துவதன் அடையாளங்கள் என்ற எண்ணத்துடனேயே நான் வளர்ந்தேன். அதற்கு காரணம், என் அம்மா அவர் உடலில் இரண்டு இடங்களிலும், அவரின் அம்மா இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களிலும் பச்சை குத்தியிருந்தனர். இந்த விடயத்தில் தங்களுக்கு வேறு தேர்வே இருக்கவில்லை என்று அவர்கள் என்னிடம் கூறியிருந்தனர்.

நான் சார்ந்துள்ள வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான கிராமப்புறச் சமூகங்களில், உள்ளூரில் "கோட்னா" என்று அழைக்கப்படும் பச்சை குத்திக்கொள்ளும் முறை கட்டாயமாக இருந்தது.

"நான் பச்சை குத்திக்கொள்ளாவிட்டால், நீ புனிதமற்றவள் என்று கருதி உன் புகுந்தவீட்டில் இருப்பவர்கள் உன் கைகளால் அன்னம், தண்ணீர் எதுவும் வாங்கமாட்டார்கள்," என்று தன் குடும்பத்தினர் தன்னிடம் கூறியதாக என் அம்மா என்னிடம் சமீபத்தில் கூறினார். என் அப்பா ஒரு 'ஆண்மகனாக இருந்ததால்' அவருக்கு அந்தக் கட்டாயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

1940களில் அவருக்கு திருமணம் நடந்தபோது என் அம்மா 11 வயது கூட நிறைவடையாத ஒரு குழந்தை மணப்பெண். திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து, அவருக்கு 'முத்திரை குத்த' அருகாமையில் இருந்த ஒரு மூதாட்டி அழைத்து வரப்பட்டார்.

Image caption பச்சை குத்திக்கொள்ளாவிட்டால் தாம் புனிதமற்ற பெண்ணாக கடுத்தப்படலாம் என்று என் அம்மா என்னிடம் கூறினார்

அவரின் கருவிகள் மிகவும் கூரானவை. தீயில் சுடப்படும் ஒரு ஊசியை அவர் கொண்டிருந்தார். அவரால் தோலின் மேல் பாகத்தை தீயில் சுட்டு, கறுப்பு நிற மையை உள்ளே செலுத்தப்படும்.

அந்த நாட்களில் வலியை உணரச் செய்யாத மயக்க மருந்துகளோ, காயத்தை விரைவில் ஆற்றும் களிம்புகளோ இல்லை. ஆனால், பச்சை குத்திய காயம் ஆற ஒரு மாதம் ஆகும்.

தற்போது சுமார் 70 ஆண்டுகள் கடந்தபின், என் அம்மாவுக்கு, அந்த பச்சை குத்திய அடையாளம் சற்றே மங்கியுள்ளது. ஆனால், ஒரு குழந்தையாக அவரின் உள்ளத்தில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறாமல் அப்படியே உள்ளன.

Image caption என் அம்மாவின் கையில் பச்சை குத்தப்பட்டுள்ள வடிவங்கள் என்னவென்றே புரியவில்லை

"நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். பச்சை குத்திய மூதாட்டியை உதைத்துக்கொண்டே இருந்தேன். அவர் என் தாத்தாவிடம் சென்று நான் தொல்லை செய்வதாகக் கூறினார்," என்று என் அம்மா என்னிடம் தனது அனுபவத்தை விவரித்தார்.

தன் உடலில் உள்ள சிறிய வடிவங்கள் என்னவென்றே அவருக்கு தெரியவில்லை. என்னாலும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவை பூக்களாகவும் இலைகளாகவும் இருக்கலாம் என்று என் அம்மா என்னிடம் கூறினார்.

இந்தியாவின் கிராமப்புறங்களிலும் மலைப்பகுதிகளிலும் பச்சை குத்துதல் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட லக்னோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சமூக மானுடவியல் ஆய்வாளர் கேயா பாண்டே, பச்சை குத்தும்போது தாவரங்களும் விலங்கினங்களும் மிகவும் விரும்பப்பட்ட வடிவங்களாக இருந்தன என்று கூறுகிறார்.

கணவன்மார்கள் மற்றும் தந்தையின் பெயர்கள், கிராமங்களின் பெயர்கள், கலாசார மற்றும் குல மரபுச் சின்னங்கள், தெய்வங்கள் மற்றும் நாட்டார் தெய்வங்களின் உருவங்கள் ஆகியவையும் அந்தப் பட்டியலில் அடக்கம்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மாதவிடாய் குறித்த கட்டுக்கதைகளை முறியடிக்கும் மடகாஸ்கர் பெண்கள்

இந்தியாவில் உள்ள எல்லா கிராமிய கலாசாரங்களிலும் பச்சை குத்தும் முறை இருப்பதாகவும், பச்சை குத்தி கொண்டுள்ள பெண்கள் கோடிக்கணக்கானவர்களைத் தான் கண்டுள்ளதாகவும் பாண்டே கூறுகிறார்.

சில சமூகங்களில் குறிப்பாக மலைப் பகுதிகளில், ஆண்கள் பெண்கள் ஆகிய இருவருமே பச்சை குத்திக்கொள்கின்றனர். "இது வாழும்போதும் இறந்த பின்பும் ஒரு அடையாள சின்னம். நீங்கள் இறந்தபின்பு உங்கள் ஆன்மா சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ செல்லும்போது நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்கப்படும். உங்கள் உடலில் உள்ள பச்சை மூலம் உங்கள் மூதாதையர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியும்," என்கிறார் அவர்.

அழகு படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் பெண்கள் பச்சக் குத்திக்கொள்ளும் சில சமூகங்களும் உள்ளன. சாதிய அடுக்கில் கீழ் இருந்த சாதிகளை சேர்ந்த பெண்கள் ஆதிக்கம் மிகுந்த ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தவிர்க்க தங்களைத் தாங்களே அழகின்றி காட்டிக் கொள்ளவும், தற்காப்புக்காகவும் சில நேரங்களில் பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் இருத்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தலைமை பொறுப்பு வகிப்போரில் பெண்கள் எத்தனை சதவீதம் என தெரியுமா?

ஆனால், என் கிராமத்தைப் போல பெரும்பாலான சமூகங்களில் பச்சை குத்துதல் என்பது திருமணம் முடிந்ததற்கான அடையாளமாகவே இருந்துள்ளது.

என் தாய் மற்றும் பாட்டிக்கு அது புனித தன்மையின் சின்னமாக இருந்தது. இந்த வலி மிகுந்த அழகுபடுத்தும் சடங்குக்கு உட்படாத வரை இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு சேவை செய்ய ஒரு பெண் தகுதியற்றவர் ஆகிறார்.

இந்த வழக்கம் தற்போது குறைந்து வருகிறது. தாங்கள் பச்சை குத்தி முத்திரை குத்தப்படுவதில்லை என்று இளம் பெண்களும், வளர் இளம்பருவத்தினரும் கூறுகின்றனர்.

நவீனத்துவமும் வளர்ச்சியும் படரும் இந்தக் காலத்தில், வெளி உலகுடன் தொடர்பு ஏற்பட்டுவரும் சூழலில் இந்தியாவின் கிராமப்புற மற்றும் மலைவாழ் பகுதிகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

பழைய வழக்கங்களும், நாட்டுப்புற நடைமுறைகளும் நவீனப்படுத்தப்படுவதால் பெண்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று பாண்டே கூறுகிறார்.

மத்திய இந்தியாவில் உள்ள பைகா பழங்குடி இன மக்களே இதற்கு சிறந்த உதாரணம்.

2000 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் இவ்வாறு முத்திரை குத்தப்பட்டனர். "பெண்கள் பூப்பெய்தியதும் நெற்றியில் பச்சை குத்துவதால் தொடங்கும் இந்த வழக்கம், வயது ஆக ஆக ஒவ்வொரு பகுதியாக தொடரும். காலப்போக்கில், அவர்களின் அங்கத்தில் சில பகுதிதிகளைத் தவிர எல்லாமே பச்சை குத்தப்படும்," என்கிறார் வாட்டர் எயிட் இந்தியா அமைப்பின் பிரக்யா குப்தா.

பைகா மக்கள் வாழும் பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்ட அவர், தான் சந்தித்த பல பெண்கள் பச்சை குத்தி கொண்டிருந்ததாகவும், ஆனால் சிறுமிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.

படத்தின் காப்புரிமை WaterAid/ Ronny Sen
Image caption மகள் அனிதாவுடன் தாய் பத்ரி

சாலைப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகியவை முன்னேறியுள்ள நிலையில், நிறைய பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். அதனால், கலாசாரம் என்னும் பெயரில் காலம் காலமாக திணிக்கப்பட்ட இந்த வழக்கத்துக்கு அவர்கள் மறுப்புத் தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள்.

"நான் சந்தித்த 15 வயதான அனிதா என்னும் சிறுமியின் நெற்றியில் பச்சை குத்தப்பட்டுள்ளது. இன்னொரு முறை அதை செய்துகொள்ளமாட்டேன் என்று அவள் கூறினாள். 40 வயதான அவளின் தாய் பத்ரியின் உடலின் பல பாகங்களிலும் பச்சை குத்தப்பட்டுள்ளது," என்கிறார் பிரக்யா.

"நான் கல்வியறிவு இல்லாமல் இருந்தேன். அதனால் என் பெற்றோர் சொன்னதை ஏற்றுக்கொண்டேன். அனால், இவள் பள்ளிக்கு போகிறாள். அதனால் பச்சை குத்திக்கொள்ள விரும்பவில்லை. அதில் எனக்கும் சம்மதமே," என்று அனிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் அவரின் தாய்.

ஹாலிவுட் நடிகர்கள், ராக் இசை கலைஞர்கள் ஆகியோரை பார்த்து, படித்த, நகர்ப்புறங்களில் வாழும் மேல்தட்டு இந்தியர்கள் பச்சை குத்திக்கொள்ள விரும்புகிறார்கள். என் நண்பர்கள் சிலரும் அவர்களுள் அடக்கம். ஆனால், என் கலாசார பின்புலத்தால் பச்சை குத்திக்கொள்வது என்பது இன்னும் ஒரு விலக்கி வைக்கப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது. அதை ஒரு அடிமைத்தனத்தின் சின்னமாகவே நான் பார்க்கிறேன்.


பச்சை குத்தும் வழக்கம் - சில தகவல்கள்

Image caption தன் கணவனின் பெயரை கையில் பச்சை குத்தியுள்ள பெண்

•இந்த வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

•சிறை கைதிகள், பணியாட்கள், அடிமைகள் ஆகியோரை அடையாளப்படுத்த பச்சை குத்தப்பட்டது.

•பழங்கால இந்தியர்களைப்போலவே, கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் ஆகியோரிடமும் இந்த வழக்கம் இருந்தது.

•நாஜிக்களின் வதை முகாம்களில் யூதர்களுக்கு எண்கள் பச்சை குத்தப்பட்டன.

•மனிதர்களை அடையாளப்படுத்தவும், அவர்களை சாதி வாரியாக வகைப்படுத்தவும் பச்சை குத்தப்பட்டது.

•தண்டனை வழங்கவும், அடிமைப்படுத்தி சிறுமைப்படுத்தவும் பலமுறை அவை பயன்படுத்தப்பட்டன.

•சில நேரங்களில் அவை உரிமையின் அடையாளமாக பயன்படுத்தும் நோக்கில் தந்தை மற்றும் கணவனின் பெயர்களும் பச்சை குத்தப்பட்டன.


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்