தமிழ்நாட்டில் அதிகரிக்கும் 'டெங்கு' காய்ச்சல் உயிரிழப்புகள்

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டில் கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் கடந்த சில வாரங்களில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், சுமார் 25 பேர்வரை இந்தக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது இந்த காய்ச்சல் தீவிரமடைந்திருப்பதால், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை மாநில அரசு திறந்துள்ளது. தமிழ்நாடு 43 சுகாதார மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் காய்ச்சலுக்கான அறிகுறியுடன் வருபவர்களின் எண்ணிக்கை தினமும் கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு அரசு மருத்துவமனையும், தனியார் மருத்துவமனையும் காய்ச்சலுடன் வருபவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்களின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு டெங்கு நோய் பாதிப்பு இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர் என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறையின் இயக்குனர் குழந்தைசாமி.

இருந்தபோதும், கடந்த சில வாரங்களில் நோய் பரவுவது அதிகரித்துள்ளது. "டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் பொதுவாக நல்ல நீரில்தான் முட்டையிடும். தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக மக்கள் தண்ணீரை பெரிய கலங்களில் பிடித்துவைக்க ஆரம்பித்தனர். அதில் இந்தக் கொசுக்கள் பெருகின. தவிர, தற்போது மழையும் பெய்ய ஆரம்பித்திருப்பது பிரச்சனையை மோசமாக்கியிருக்கிறது" என்கிறார் தமிழநாடு அரசு பொது சுகாதாரத் துறையின் தலைமை பூச்சியியல் நிபுணர் அப்துல் காதர்.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழ்நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டில் டெங்கு நோய் தீவிரமாகத் தாக்கியது. அப்போது சுமார் 65 பேர் இந்நோயால் உயிரிழந்தனர். ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மீண்டும் டெங்கு நோய் (Dengue) தீவிரமாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. 2017 ஜனவரியிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதிவரை 10,488 பேர் மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சுமார் 25 பேர்வரை உயிரிழந்திருக்கின்றனர் என்கிறது மாநில அரசின் புள்ளிவிவரம்.

ஏடிஸ் இஜிப்டி, ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகிய இரண்டு வகை கொசுக்களால் பரவும் இந்த டெங்கு காய்ச்சலுக்கு சரியான வகையில் சிகிச்சையளிக்காவிட்டால், உயிரிழப்பும் ஏற்படும்.

இந்த முறை கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்துதான் தமிழகத்திற்குள் இந்தக் காய்ச்சல் பரவியது என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது இந்தக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்போது, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்கள் இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. "வழக்கமாக சுகாதாரத்துறையில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் தவிர, 35 ஆயிரம் பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வீடு வீடாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன" என்கிறார் குழந்தைசாமி.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், தமிழக ஊடகங்களில் இந்த நோயை மாநில அரசு கையாளும் விதம் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் வெளியாகி வந்தாலும், நிலைமையை மாநில அரசு சிறப்பாகவே கையாளுவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இம்மாதிரி நோய்களைப் பரிசோதிக்கக்கூடிய பரிசோதனை மையங்கள் இந்தியா முழுவதுமே 400 மையங்கள்தான் இருக்கின்றன. அவற்றில் 125 மையங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஆகவே உடனடியாக நோயைக் கண்டுபிடித்து, குணப்படுத்த முடியும்" குழந்தைசாமி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'தூய்மை இந்தியா' திட்டம்

ஆனால், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சவால்களை சுகாதாரத்துறை எதிர்கொள்கிறது. தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலங்களில் இந்த நோயும், நோயை ஏற்படுத்தும் கொசுக்களும் பரவலாக இருந்தும் அம்மாநில அரசு அவற்றைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.

அதேபோல, தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக போலி மருத்துவர்கள் இருக்கின்றனர். காய்ச்சல் வந்தவுடன் மருந்துக் கடைகளில் சென்று தாங்களாகவே மருந்துகளை வாங்கி உண்டுவிட்டு, இரு நாட்களுக்குப் பிறகு இந்த போலி மருத்துவர்களிடம் சென்று, அங்கு இரண்டு நாள் தாமதம் ஏற்பட்டால் நோயாளியை குணப்படுத்த முடியாமலே போகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

டெங்கு நோயை ஏற்படுத்தும் வைரஸ், இந்தியாவில் முதன்முதலாக 1945ல் அடையாளம் காணப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது 1956ல் வேலூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது.

இந்தியாவிலேயே மிக மோசமாக டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது 1996ல்தான். தலைநகர் தில்லியில் 10,252 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 423 பேர் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டது. இதற்குப் பிறகு, டெங்கு நோய் பரவல் ஏற்படுவது வருடாவருடம் அதிகரித்து வந்தாலும், உயிரிழப்பவர்களின் சதவீதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மழைக் காலத்திற்குப் பிறகு இந்நோய் தாக்குகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசிகள் தற்போதுவரை பரிசோதனை நிலையிலேயே இருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்