சிசுக்கொலையில் உயிர்தப்பிய மகள்களை பார்க்க துடிக்கும் மதுரை தாய்மார்கள்

விவசாயி வெள்ளையம்மா
Image caption வெள்ளையம்மாவுக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் ஒருவர்தான் நிக்கோலா

''எம் மவள கூட்டியாரலயா?'' இரண்டு முறை இதே கேள்வியுடன் மதுரை வாசிநகரில் ஒற்றை அறை கொண்ட வீட்டிற்குள் நம்மை வரவேற்றார் 55 வயதான விவசாயி வெள்ளையம்மா.

வெளியூரில் இருந்து யார் வந்தாலும் தன்னுடைய மகளை அவர்கள் கூட்டி வந்திருப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையின் வெளிப்பாடுதான் வெள்ளையம்மாவிடம் இருக்கிறது.

வெள்ளையம்மாவின் மகள் நிக்கோலா 19 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். குழந்தை பிறந்த சில மணிநேரத்தில் தன்னிடமிருந்து மகள் பறிபோன தருணத்தின் வலி இன்னும் தாயின் கண்களில் தெரிகிறது.

பெண்சிசுக்கொலையில் தப்பிய குழந்தைகள்

''நான் கண் முழிச்சு பாத்தபோ குழந்தை இல்ல..பொண்ணு பொறந்து செத்துபோச்சுனு சொன்னாக. இப்பதே ஒரு வருஷத்துக்கு முன்ன பொண்ணு உசிரோட இருக்குதுனு தெரிஞ்சு, திருச்சில ஒரு இயேசுசாமி ஆஸ்டல்ல பாத்தேன். சீக்கிரம் அனுப்புவாஹானு சொன்னாலே எம் மவ'' என வெள்ளையம்மா விவரித்தார்.

Image caption மகள் மிஷேலின் படத்தை தனது செல்போனில் வைத்துள்ள தாய் மீனாட்சி

வெள்ளையம்மாவுக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் ஒருவர்தான் நிக்கோலா. 1980களில் தொடங்கி 1990வரை தமிழகத்தில் பெண் சிசுக்கொலை நடந்த முக்கியமான இடங்களில் ஒன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி. நிக்கோலா பிறந்த வாசிநகர் கிராமமும் அதில் அடங்கும்.

பெண் சிசுக்கொலையை தவிர்க்க அரசு கொண்டுவந்த தொட்டில் குழந்தை திட்டம் மட்டுமல்லாமல் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பெண் குழந்தைகளை மீட்கும் பணியில் அப்போது ஈடுபட்டன.

தொண்டு நிறுவனத்தின் பிடியில் குழந்தைகள்

பெண் குழந்தைகளை சிசுக்கொலையில் இருந்து மீட்பதாகக் கூறி மோசஸ் மினிஸ்ட்ரி என்ற கிறிஸ்தவ பாஸ்டர் கிடன் ஜேக்கப் மற்றும் அவரது மனைவி ஓட்டோ ஜேக்கப் நடத்திய நிறுவனம் பல குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து கொண்டுவந்து காப்பகம் நடத்திவந்தது. மதுரையில் இருந்த அந்த நிறுவனம் சில சர்ச்சைகளுக்குப் பிறகு திருச்சியில் செயல்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டவர்களில் ஒருவர்தான் நிக்கோலா.

திருச்சியில் மோசஸ் நிறுவனத்தில் உள்ள பெரும்பான்மையான குழந்தைகள் உசிலம்பட்டியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் அவர்களின் பெற்றோர்களிடம் மோசஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பெண் குழந்தையை வளர்ப்பது சிரமம் என்று கூறி அவர்களிடம் குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Image caption மோசஸ் நிறுவனதில் உள்ள தங்கை சோபியாவுக்காக காத்திருக்கும் அக்கா பெருமாயி

2015ல் தமிழக அரசின் குழந்தைகள் நலக்குழு நடத்திய ஆய்வில் மோசஸ் நிறுவனம் பதிவு செய்யாமல், தகுந்த சான்றுகள் இல்லாமல் 1994ல் இருந்து செயல்பட்டு வருகிறது என்பது தெரியவந்தது. மேலும் மோசஸ் இல்லத்தில் உள்ள குழந்தைகள் பலருக்கும் பிறப்பு சான்றிதழ் இல்லை என்றும் அவர்கள் என்ன காரணத்திற்காக மோசஸ் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் ஆவணப்படுத்தப்படவில்லை என்று தெரியவந்தது.

''வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட பெண்குழந்தைகள்''

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாடம் நாராயணனின் அமைப்பைச் சேர்ந்த பயிற்சி மாணவர்கள் இருவர் திருச்சி மோசஸ் நிறுவனத்திற்கு நேரில்சென்று ஆய்வு நடத்தினர்.

அதில் எண்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் பாஸ்டரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.

படத்தின் காப்புரிமை Chandan Khanna/AFP/Getty Images

பிபிசிதமிழிடம் பேசிய ஆய்வு மாணவி பாபி கிரிஸ்டியானா, ''பெண் குழந்தைகள் எப்போதும் பாஸ்டரின் புகழ்பாடுபவர்களாகவும், பொதுவிஷயங்கள் பற்றி தெரியாதவர்களாக இருந்தனர். அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் பிறரிடம் பழகுவதில்லை என்று எங்களிடம் கூறினர். பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தபோது மோசஸ் நிறுவன மாணவிகள் மற்றவர்களுடன் பழகுவதில்லை என்ற தகவலை உறுதிப்படுத்தினர்'' என தனது நேரடி அனுவபத்தை நம்மிடம் பகிர்ந்தார்.

ஆய்வு மாணவர்களின் விவரங்களைக் கொண்டு மோசஸ் நிறுவன குழந்தைகளை மீட்கும் நோக்கத்தில் சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உண்மையை வெளிக்கொணர்ந்த மரபணு சோதனை

பிரிந்த குழந்தைகளையும் பெற்றோர்களையும் இணைக்கும் வேலையில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் தேவேந்திரன் பல கிராமங்களுக்கும் சென்று மோசஸ் நிறுவனத்திடம் பெண் குழந்தைகளை வழங்கியவர்களை சந்தித்துள்ளார்.

''பாஸ்டர் பல பெண் குழந்தைகளின் படங்களை இணையத்தில் வெளியிட்டு குழந்தைகளை காப்பாற்ற உதவலாம் என்ற விளம்பரம் செய்திருந்தார். அந்த படங்களைக் கொண்டு பெற்றோர்களை கண்டறிந்தோம். நீதிமன்றத்தின் உத்தரவால் மரபணு சோதனை நடத்தப்பட்டதில் மோசஸ் நிறுவனத்தில் இருந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் யார் என தெரியவந்தது. பெற்றோர்கள் பெண் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள முன்வந்தாலும் அந்த நிறுவனம் கட்டுப்படுத்துகிறது'' என்றார் தேவேந்திரன்.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH/AFP/Getty Images
Image caption கோப்புப்படம்

இது பற்றி திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி உஷாவிடம் பேசியபோது அரசு நியமனம் செய்த ஒரு பெண் ஊழியர் மோசஸ் நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறினார்.

''மோசஸ் நிறுவனம் தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெற்றோர்களைப் பார்க்கவும் பேசவும் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பெற்றோருடன் செல்வது பற்றி நீதிபதியிடம் பெண் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். இறுதி தீர்ப்பு வரும்வரை அரசின் நிதியில் இந்த நிறுவனம் நடத்தப்படும்'' என்று கூறினார்.

மன உளைச்சலில் பெற்றோர்

பெற்றோர்கள் பலர் நம்மிடம் பேசுவதற்கு மிகவும் தயங்கினர், சிலர் கோபம் கொண்டனர்.

செய்தி எழுதுவது தொடர்பாக விளக்கிக்கூறிய பிறகு, அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த பிறகு ஒரு சிலர் பேச முன்வந்தனர்.

''என்னோட தங்கச்சி அது. இத்தன வருஷமா தெரியால.. அது உசிரோட இருக்குனு தெரிய போகவும், மனசு தவிக்குது.. அது பேரு மிசேல்லாம். கோயில் திருவிழாவுக்கு வரனும் ஆசையா இருக்குதுனு போன்ல அழுகுது.. ஆனா அந்த ஆஸ்ட்டல்ல விடமாட்டாங்கலாம்ல. எப்போ கேசு முடியர்துன்னு காத்துகிடக்கோம்,' என தனது தங்கையுடன் சமீபத்தில் பேசியதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பெருமாயி.

மற்றொரு தாயான மீனாட்சி, தன்னுடைய மகள் மிஷேலை திருவிழாவிற்கு அழைத்துவரும் வழியில் தடுத்துநிறுத்தப்பட்டு, அவரது மகள் மீண்டும் மோசஸ் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நம்மிடம் கூறினார்.

மோசஸ் நிறுவனத்தை நடத்தும் பாஸ்டர் கிடன் ஜேக்கப் மற்றும் அவரது மனைவி ஓட்டோ ஜேக்கப் ஆகியோரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர்கள் திருச்சியில் இல்லை என்றும் அவர்கள் வெளிநாட்டில் உள்ளதாக துணை பாஸ்டர் செல்வராஜ் பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

தன்னைப் பற்றியும் தான் நடத்தும் குழந்தைகள் இல்லத்தைப் பற்றியும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறுகிறார் பாஸ்டர் கிடன் ஜேக்கப். பிபிசி தமிழுக்கு மின்னஞ்சல் மூலமாக அவர் அனுப்பியுள்ள பதிலில் அவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஜெர்மனியில் வசித்துவருவதாகவும், நிராகரிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்காக இல்லம் நடத்துவதாகக் கூறியுள்ளார்.

தற்போது பயணத்தில் உள்ளதால் தன்னுடைய விரிவான பதிலை தர மூன்று அல்லது நான்கு நாட்கள் தேவை என்று கூறியுள்ளார். நாம் முன்வைத்த கேள்விகளுக்கு, ''என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் தரவும் சான்றுகள் அளிக்கவும் என்னிடம் ஆவணங்கள் உள்ளன. அந்த தரவுகள் என்னை பற்றி இரக்கமின்றி சுமத்தப்பட்ட பொய்கள் மற்றும் நான் நடத்தும் இல்லத்தைப் பற்றியும் மோசமாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும்'' என்று பதிலை அளித்துள்ளார்.

(குறிப்பு: பாஸ்டர் கிடன் ஜேக்கப் அவர்கள், இந்த செய்தி வெளிவந்த பிறகு அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து, அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் மீது எழுப்பப்பட்ட சில குற்றச்சாட்டுக்களுக்கு அவர் அளித்த மறுப்பை நாங்கள் கீழே உள்ள இணைப்பில் வெளியிட்டுள்ளோம்.)

மோசஸ் இல்லம் மீதான விமர்சனங்களுக்கு பாஸ்டர் மறுப்பு

வழக்கு நடப்பதால் மோசஸ் நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை நாம் நேரில் பார்வையிட அனுமதி கிடைக்கவில்லை.

பெண் அதிகாரி இல்லாததால் விசாரணையில் தொய்வு

மோசஸ் நிறுவனம் தொடர்பாக மத்திய புலனாய்வு மையத்தின் விசாரணை கடந்த எட்டு மாதங்களாக நடைபெறவில்லை.

படத்தின் காப்புரிமை ARINDAM DEY/AFP/Getty Images
Image caption கோப்புப்படம்

சிபிஐயின் சிறப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையில் மாவட்ட கண்காணிப்பார் பதவியை ஒத்த ஒரு பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் சிபிஐ பிரிவில் அத்தகைய பதவியில் பெண் அதிகாரிகள் யாரும் இல்லாததால் விசாரணை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

தற்போது நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவல் ஆய்வாளர் பதவியில் உள்ள பெண் அதிகாரியிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

நியமனமாகியுள்ள அதிகாரி விஜயவைஷ்ணவிடம் கேட்டபோது, ''பல மாதங்களுக்குப் பிறகு, தற்போது விசாரணை அதிகாரி பதவி நிரப்பப்பட்டுள்ளது என்பதால் உடனடியாக எந்த விவரங்களையும் கூறமுடியாது. விசாரணையை துரிதப்படுத்துவோம்'' என்றார் அதிகாரி விஜயவைஷ்ணவி.

நிக்கோலாவிற்காக பூக்கும் மல்லிகைதோட்டம்

விஜயவைஷன்வியின் விசாரணையை எதிர்நோக்கியுள்ள நிக்கோலாவின் தாய் வெள்ளையம்மா, தன் மகளை வீடு சேர்த்தால் அந்த நாளை திருவிழாவாக கொண்டாடும் மனநிலையில் உள்ளார்.

முதல் சந்திப்பைப் பற்றிக் பேசும்போது வெள்ளையம்மா ''பாத்ததுமே என்னய ஏம வேண்டாம்னு கொடுத்துடீங்க?னு பொண்ணு கேட்டுச்சு...அழுகாச்சி வந்து சத்தம்போட்டு அழுதிட்டேன்'' என்றார்.

தன்னுடைய மகளிடம் நான்தான் அம்மா, நான்தான் அப்பா என அறிமுகம் செய்துகொண்ட பல பெற்றோர்களை நம் பயணத்தில் சந்தித்தோம். ஒவ்வொருவரும் தங்களது மகள்களுக்காக காத்திருக்கிறார்கள்.

கிறிஸ்தவ இல்லத்தில் வளர்ந்த நிக்கோலா இதுவரை பூ வைத்துக்கொண்டது கிடையாது. ஆனால் அவர் வீட்டுக்கு வந்ததும் அவருக்கு தலைநிறைய மதுரை மல்லிகை பூவைச் சூடிப்பார்க்கவேண்டும் என தாய் வெள்ளையம்மாவுக்கு கொள்ளை ஆசை. அவர் வீட்டின் பின்புறம் முழுவதும் தோட்டத்தில் மல்லிகைப்பூக்கள் பூத்துக் குலுங்குகிறன நிக்கோலாவுக்காக.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :